October 19, 2021

கருவில் உள்ள சிசு குறைபாடா? அபார்சன் செஞ்சுக்கலாம்! – சுப்ரீம் கோர்ட் அனுமதி

கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சி குன்றி இருந்தால் கருக்கலைப்பு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. குறைபாடு பற்றி மருத்துவ அறிக்கையில் குறிப்பிட்டிருந்தால் சிசுவைக் கலைக்கலாம் என்று 24 வார கால கருவைக் கலைக்க அனுமதி கோரி ஒரு பெண் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

court jy 25

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை அவருடன் பழகிவந்த நபர் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் கருவுற்ற அப்பெண், 24 வாரங்களுக்குப் பிறகு அந்தக் கருவைக் கலைக்க முயன்றபோது கருக்கலைப்பு தொடர்பான சட்டம் தடையாக இருந்தது. 20 வாரத்துக்கு மேலான கருவைக் கலைக்கக் கூடாது என்று 1971-ஆம் ஆண்டு மருத்துவ கருக்கலைப்பு சட்டப் பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்தப் பெண் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “நான் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்குப் பிறக்கும் குழந்தை மூளை, உடல் குறைபாடுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள மருத்துவர்கள், கருக்கலைப்பு மட்டும் செய்ய மறுத்துவிட்டனர்’” என்று தெரிவித்திருந்தார்.

மேலும் அப்பெண் சார்பில் சீனிய லாயர் காலின் கான்சால்வ்ஸ் தாக்கல் செய்திருந்த மனுவில், “ 20 வாரத்துக்கு மேலான கருவைக் கலைக்கக் கூடாது என்பது காரணமில்லாத, ஒருதலைபட்சமான சட்டம். இது பெண்ணின் உரிமையையும், சமதர்மத்தையும் பறிப்பதாக உள்ளது. எனவே, பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் பெண்கள், சிறுமிகள் கருக்கலைப்பு செய்யும் போது 20 வாரத்துக்கு மேலான கருவை கலைக்கக்கூடாது என்ற சட்டவிதியை கடைப்பிடிக்க வேண்டாம் என்று மருத்துவமனைகளுக்கு உத்தரவிட வேண்டும்.” என்று கோரியிருந்தார்

இது தொடர்பாக மத்திய அரசுக்கும், மகாராஷ்டிர அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் முன்னதாக உத்தரவிட்டது. இந்நிலையில், அப்பெண்ணின் வயிற்றில் உள்ள கருவின் நிலை எப்படி உள்ளது என்பது குறித்து மருத்துவ ஆய்வு நடத்த மும்பை கிங் எட்வர்ட் நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அக் கோர்ட்உத்தரவிட்டது.

இது குறித்து மருத்துவ அறிக்கை கடந்த சனிக்கிழமை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. கருவின் வளர்ச்சி தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், பெண்ணின் உயிருக்கு ஆபத்து நேராமல், கருவைக் கலைக்கலாம் என்றும் மும்பை மருத்துவமனை தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. தெரிவிக்கப்பட்டிருந்ததை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், கருவில் உள்ள சிசு குறைபாட்டுடன் இருந்தால் கருக்கலைப்பு செய்யலாம் என்று தீர்ப்பளித்தனர்.