August 16, 2022

டெல்லி போலீஸ் இப்படியா டம்மியா இருப்பீங்க!- சுப்ரீம் கோர்ட் விளாசல்!

சகிப்புத்தன்மை உள்ளோர்கள் அதிகம் நிறைந்த பாரத தேசத்தின் தலைநகரான வடகிழக்கு டெல்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பாளர்கள் – ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை இரண்டு காவலர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். வன்முறை யில் காயமடைந்த 175க்கும் மேற்பட்டோர் தில்லி ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் .இந்த சம்பவம் காரணமாக தலைநகர் டெல்லி யில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் துணை ராணுவ படையினர், தில்லி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் வடகிழக்கு தில்லியில் மஜ்பூர், ஜாப்ராபாத், சந்த்பாக், கர்வால் நகர் ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவா்கள் திரண்டு செவ்வாய் நள்ளிரவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். அப்போது வடகிழக்கு டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும், கலவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தில்லி அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து குடிமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், அனைத்து மீட்பு நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மருத்துவமனை களை அடைய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். கூட்டத்தைக் கலைக்க போலீஸாா் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனா். 41 மாணவா்கள் சிவில் லைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்களில் பலா் விடுவிக்கப்பட்டதாகவும், சிலரை விடுவிக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனா்.

முதல்வர் கேஜரிவால் தனது இல்லத்தில், உள்ளூர் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் வடகிழக்கு தில்லியின் வன்முறை பாதிப்புக்குள்ளான அதிகாரிகளின் அவசரக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினர். பின்னர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருமாறும், அமைதியை மீட்டெடுப்பதற்கு தேவை யான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனிடையே வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் திறன் இல்லாததால் டெல்லி காவல் துறையை சுப்ரீம் கோர்ட் கண்டித்தது.

“இங்கிலாந்தில் போல காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலைமை கைமீறி செல்லும் அளவுக்கு ஏன் விட்டுவிட்டீர்கள் என்று மத்திய அரசையும் சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ளது. இங்கிலாந்தில் போல காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் திறன் பற்றாக் குறை மற்றும் காவல்துறையின் சுதந்திரம் ஆகியவையே இதற்கான பிரச்சினை. யாரோ ஒருவர் சட்டப்படி செயல்பட அனுமதிக்க காவல்துறை ஏன் காத்திருக்கிறது? ” என்று நீதிபதி ஜோசப் கேட்டார்.

டெல்லி வன்முறைச் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் இதுபோன்ற வன் முறை நடப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என்றும், காவல்துறையினர் சரியாக செயல்பட்டிருந்தால் நிச்சயம் இதுபோன்ற மிக மோசமான வன்முறையைத் தவிர்த்திருக் கலாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துக் கூறியுள்ளனர்.

அத்துடன் டெல்லியில் நிலைமை இந்த அளவுக்கு கைமீறிச் செல்லக் காரணம் என்ன? உங்களிடம் தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளன. காவல்துறை உள்ளது. காவல்துறை யினர் மிகச் சரியாக திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் இந்த நிலைமையைத் தவிர்த்திருக்க லாமே? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், காவல்துறையின் மெத்தனப்போக்கே இந்த வன்முறைக்குக் காரணம் என்றும் கூறியுள்ளனர். மேலும், டெல்லி வன்முறைச் சம்பவம் குறித்த மனுவை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ள சுப்ரீம் கோர்ட், உயர் நீதிமன்றத்தில் முறையிடுமாறு அறிவுறுத்தியது.