கலைஞானம் பாராட்டு விழாவில் ரஜினி பேசியது இதுதான் – வீடியோ!

என்னை ஹீரோவாக்கிய கலைஞானத்துக்கு சொந்த வீடு இல்லை. வாடகை வீட்டில் இருக்கிறார் என்று இப்போதுதான் தெரியும். அந்த வேலையை அரசாங்கத்துக்கு தரமாட்டேன். நானே அவருக்கு சொந்தவீடு வாங்கித் தருகிறேன். நாளைக்கே அவர் என் வீட்டில் வந்து இருக்கட்டும் என்று ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டார்.

திரைப்பட கதாசிரியர் கலைஞானம். கோலிவுட்டில் தனித்துவம் வாய்ந்த 200 படங்களுக்கு மேல் திரைக்கதை எழுதியுள்ள கலைஞானம், 40 படங்களுக்கு கதை எழுதி 18 படங்களை தயாரித்து உள்ளார். நடிகர், பாடலாசிரியர் என சினிமாவில் அவர் கிட்டதட்ட அனைத்துத் துறைகளிலும் கால் பதித்து அதில் சிகரம் தொட்டவர். ‘சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்’ என்ற பாடல் வெளியாகி முப்பது ஆண்டுகள் ஆனாலும் இந்தத் தலைமுறை குழந்தைகளும் சூப்பர் ஸ்டார் என்று ரஜினிகாந்தை கொண்டாடி மகிழ்கின்றனர்.ரஜினிகாந்திற்கு முதன்முதலில் இந்தப் பட்டம் கிடைத்தது கலைஞானம் கதை எழுதி தயாரித்த பைரவி படத்தில் தான்.

அப்பேர்பட்டவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, இயக்குநர் பாக்யராஜ், நக்கீரன் ஆசிரியர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இந்த விழாவில் கலந்துகொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது, “போன மாதம் ஒரு நாள் நான் மும்பையில் தர்பார் படப்பிடிப்பில் இருந்தபோது கலைஞானம் போன் பண்ணினார். தன்னுடைய 90 ஆவது பிறந்த நாள் நெருங்குவதைச் சொன்னதும், வாழ்த்துத் தெரிவித்தேன். சென்னையில் ஒரு விழா நடப்பதாகவும், அதற்கு என்னை வரும்படியும் அழைத்தார். அன்றைக்கு எனக்குப் படப்பிடிப்பு இருப்பதாகச் சொன்னதும் இயக்குநர் பாரதிராஜா உங்களிடம் பேசுவார் என்று சொன்னார். நீங்கள் வராமல் அந்த விழா பூர்த்தி ஆகாது என்றும் சொன்னார்.

அடுத்த நாள் பாரதிராஜாவிடம் இருந்து போனில் செய்தி வந்திருந்தது உடனே பாரதிராஜாவிடம் நான் பேசினேன்.

“என்ன… தலைவரே… எப்படி இருக்கீங்க?’’ என்று அவருடைய பாணியில் பேசினார். தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசும்போது அப்படித்தான் பேசுவார் பாரதிராஜா.அவர் “தலைவர்’’ என்று கூப்பிடுவது என்னுடைய ரசிகர்கள் கூப்பிடுவதைப் போன்ற அர்த்தத்தில் அல்ல. அவர் தனி ‘டோனில்’ கூப்பிடுவார் என்னுடைய படங்களை விமர்சிப்பார். என்னுடைய படங்கள் வெற்றி யடையும்போது என்னிடம் சொல்வார். “உனக்கு எங்கோ மச்சம் இருக்குய்யா’’.எங்களுக்கு இடையிலான நட்பு ஆழமான நட்பு. அவருக்கென்று தனிக் கருத்து இருக்கிறது. எல்லோருக்கும் ஒரே மாதிரிக் கருத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தக் கருத்து மாறுபாட்டால் எங்களுடைய நட்புக்கு எந்தவிதத்திலும் இடையூறு வராது. நட்பு முறியாது.

நாம் எவ்வளோ பேர், புகழைச் சம்பாதிக்கலாம். ஆனால் சம்பாதிக்க முடியாதவர்கள் நம்முடைய பழைய நண்பர்கள். அப்படிப்பட்ட பழைய நண்பர்களுக்கிடையில் ஏதாவது மனஸ்தாபம் வந்தால் கூட, அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டுப் போயிடணும். இப்போது கூட மதுரையில் எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் பெரிய விழா எடுத்த மாதிரி உனக்கும் ஒரு விழா எடுக்கப் போறேன்னு என்னிடம் கேட்டார். அதற்குப் பிறகு நீ அரசியலுக்கு வந்துருவே.. அதுக்குப் பிறகு உனக்குத் தனியா கச்சேரி வைச்சுக்கிறேன். அது வேறேன்னு சொன்னார்.

பாரதிராஜா தமிழ் கலை இலக்கியப் பேரவைங்கிற அமைப்பை வைச்சுக்கிட்டுப் பல நல்ல காரியங் கள் பண்ணியிருக்கார். இப்போது கலைஞானம் அவர்களுக்காக இந்த அளவுக்குப் பெரிய பாராட்டு விழாவை நடத்தியிருக்கிறார். இதற்காக அவரை எந்த அளவுக்குப் பாராட்டினாலும் தகும்.

கலைஞானம் சார் அவர்களைப் பற்றிச் சொல்லணும்னா நிறையச் சொல்லணும். இங்கே சிவகுமார் பேசினார்… பாக்யராஜ் பேசினார்.. சின்னப்பா தேவரின் தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவில் கலைஞானம்தான் முக்கியமான ஆள். அவருடைய கதையில் ‘ஆறுபுஷ்பங்கள்’ படத்தில் நான் நடித்தேன். அப்போதிருந்தே என்னை அவருக்கு ரொம்பவே பிடிக்கும். பிறகு ஒருநாள் என்னைப் பார்க்க வேண்டும் என்று வந்தார் கலைஞானம். ‘நான் ஒரு படம் தயாரிக்கிறேன். கதை சொல்றேன். பிடிச்சிருந்தா நடிங்க’ன்னு சொன்னார். எனக்கு கதை பிடிச்சிருந்தது.

‘நீதான் ஹீரோ’ன்னார் கலைஞானம். சத்தியமா சொல்றேன். கண்டக்டரா இருந்தேன். நடிக்க வந்தேன். ஒரு வீடு, கையில கொஞ்சம் பணம் இதெல்லாம் இருந்தாலே போதும்னு நினைச்சேன். ஹீரோவாகணும்னு சத்தியமா ஆசைப்படவே இல்லை. வில்லனாகவே நடித்துக் கொண்டே இருப்போம் என்றுதான் நினைத்தேன்.

ஆனாலும் நான் ஒத்துக்கொண்டதற்கு ஒரு காரணம் இருந்தது. எனக்கு விவரம் தெரிந்து நான் பார்த்த முதல் படம் ‘பாதாள பைரவி’. இன்றைக்கும் அந்தப் படம் நினைவில் இருக்கிறது. ‘அபூர்வ ராகங்கள்’ என் முதல் படம். அந்தப் படத்தில் எனக்கு வைத்த முதல் ஷாட்டில், ‘பைரவி வீடு இதுதானா?’ என்பது. இந்தப் படத்துக்கு ‘பைரவி’ என்று பெயர். இதையெல்லாம் கலைஞானம் சொன்னதும் வியப்பாக இருந்தது. இவையெல்லாம் ஏதோவொரு சக்தி நம்மை இயக்குகிறது என்பதாகத்தான் உணர்ந்தேன். அதற்காகவே, நடிக்க ஒத்துக்கொண்டேன்.

அப்போது நான் 35 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தேன். 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் கேட்டேன். தரமாட்டார் என்று நினைத்தேன். ஆனால் அடுத்த நாளே பனம் தந்தார். ஆனால் தாலியை விற்று பணம் தந்தார் என்று எனக்குத் தெரியாது.

படத்தில், கருப்பு சட்டை, தாடி கெட்டப் பார்த்துவிட்டு, ’ரொம்ப நல்லாருக்கு. படம் நல்லாப் போவும்’ என்றார். பக்கத்தில் ஒரு புற்று இருந்தது. ஒரு பாம்பைக் கொண்டுவரச் சொன்னார். அந்தப் பாம்பைப் பிடித்துக்கொண்டு ‘போஸ்’ கொடுத்தேன். ‘இதுதான் படம் ரிலீசாகும் போது போஸ்டர்’ என்றார். அந்தப் படத்துக்கு கலைப்புலி தாணு, ‘சூப்பர்ஸ்டார்’ என்று பட்டம் கொடுத்தார். நான் மறுத்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை.

படம் வெள்ளிக்கிழமை ரிலீஸ். மறுநாள் ராஜகுமாரி தியேட்டருக்கு என்னை அழைத்துச் சென்றார் கலைஞானம். படம் ஹவுஸ்ஃபுல். இரண்டு தியேட்டர் ஆடியன்ஸ் வாசலில் காத்திருந்தார்கள். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்கு செம கைத்தட்டல். வெளியே வந்ததும், அப்படியே என்னைத் தூக்கிவிட்டார்கள் ரசிகர்கள். இதன் பிறகு, என்னை பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் சூழ்ந்து கொண்டார் கள். நானும் ஓடிக்கொண்டே இருந்தேன். நான் ஒரு முட்டாள். ‘அடுத்து என்ன படம் பண்றீங்க?’ என்றெல்லாம் கலைஞானத்திடம் கேட்டிருக்கலாம். அவரும் கேட்கவில்லை. பிறகு ‘அருணாசலம்’ படத்தில் சிறிய உதவி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது.

இப்போதும் அவர் வாடகை வீட்டில்தான் இருக்கிறார் என்று சிவகுமார் சொல்லித்தான் எனக்குத் தெரியும். அமைச்சர் கடம்பூர் ராஜூ, பெரிய மனதுடன் முதல்வரிடம் சொல்லி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி கொடுத்தார். அவருக்கு என் நன்றி. ஆனால் இந்த வாய்ப்பை அரசாங்கத்துக்கு நான் தரமாட்டேன். உடனடியாக, பாக்யராஜ் அவர்கள், ஒரு வீடு பார்த்துவிட்டு சொல்லுங்கள். அவருக்கு சொந்தவீடு வாங்கித்தருகிறேன்.அதுவரை, கலைஞானம் என் வீட்டுக்கு வந்து தங்கிக் கொள்ளட்டும். அவருடைய உயிர், என்னுடைய வீட்டில்தான் பிரியவேண்டும். அவருடைய சொந்தவீட்டில்தான் பிரியவேண்டும்” இவ்வாறு ரஜினி பேசினார்.