May 15, 2021

ஐபிஎல் 2021: ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமனம்!

கொரோனா இரண்டால் அலை, ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி கிடைக்காமை போன்ற அவலங்களுக்கு மத்தியில் ஆளே இல்லாமல் நடக்கும் ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னரை அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக நியூசிலாந்தைச் சேர்ந்த கனே வில்லியம்சனை புதிய கேப்டனாக நியமனமாகி இருக்கிறார்.

கடந்த ஐபிஎல் சீசனில் புள்ளிகள் பட்டியலில் 3வது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இந்த சீசனில் வெற்றிப்பாதைக்கு திரும்ப முடியாமல் தத்தளித்து வருகிறது. இதுவரை 6 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில அதில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலிலும் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி..

இதனையடுத்து அணி நிர்வாகம் அதிரடியாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேப்டன் டேவிட் வார்னரிடம் இருந்து கேப்டன் பதவியை பறித்துள்ளது. அவருக்கு பதிலாக நியூசிலாந்தைச் சேர்ந்த கனே வில்லியம்சனை புதிய கேப்டனாக நியமித்து உள்ளது. கனே வில்லியம்சன் நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு சீசனில் எஞ்சிய போட்டிகளுக்கு கனே வில்லியம்சனே கேப்டனாக செயல்படுவார் என்றும் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை (மே 2) டெல்லியில், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கனே வில்லியம்சன் கேப்டனாக களமிறங்குவார். அதே போல நாளைய போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் வரிசையில் மாற்றம் செய்யப்படும் என அந்த அணி நிர்வாகத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீண்ட காலமாக எங்கள் அணியினை தலைமையேற்று வழிநடத்திய டேவிட் வார்னரை நாங்கள் பெருமளவில் மதிக்கிறோம். எஞ்சிய போட்டிகளில் அவர் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் என அணிக்கு தனது பங்களிப்பை தருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.