புதிய தலைமை தேர்தல் கமிஷனராக சுனில் அரோரா நியமனம்!

புதிய தலைமை தேர்தல் கமிஷனராக சுனில் அரோரா  நியமனம்!

இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி. ராவத் ஓய்வுபெறுவதையொட்டி, புதிய தலைமை தேர்தல் கமிஷனராக சுனில் அரோரா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த நேற்று வெளியிட்டார். இதையடுத்து அவர் டிசம்பர் 2ம் தேதி பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் இருந்து 1980ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாக பணியைத் தொடங்கிய அரோரா தோல்பூர், அல்வார், நாகுர், ஜோத்பூர் ஆகிய மாவட்டங்களின் கலெக்டராகப் பணியாற்றி , 1993-98 பாஜக ஆட்சிக் காலத்தில் ராஜஸ்தான் மாநில முதல்வராக இருந்த பைரான் சிங் ஷெகாவத்தின் செயலாளராகப் பணியாற்றினார். பின் பாஜக முதல்வராக வசுந்தராஜே சிந்தியா ராஜஸ்தானில் பதவி வகித்தபோது அவரது முதன்மைச் செயலாளராக 2005 முதல் 2008 வரை பணியாற்றியவர்.

மத்தியில் பாஜக ஆட்சி செய்த 1999 -2002 காலகட்டத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணைச் செயலாளராக இருந்தவர் அரோரா. மேலும், ஏர் இண்டியாவின் தலைமை நிர்வாக இயக்குநராகவும் செயல்பட்டவர் அரோரா. மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராகவும் பதவி வகித்தார்.

ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தராவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் அரோரா, கடந்த 2016ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உடனேயே மத்திய அரசின் செய்தி ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். பின் இந்திய கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்.

இதன் பின் தேர்தல் ஆணையாராக 2017ல் நியமிக்கப்பட்டவர் தற்போது தலைமை தேர்தல் கமிஷனாராகும் சுனில் அரோராதான் வரும் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் மட்டுமல்லாமல் ஜம்மு காஷ்மீர், ஒடிசா, மகாராஷ்டிரா, ஹரியானா, ஆந்திரா, அருணாசல் பிரதேஷ், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களுக்கும் பொறுப்பேற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க்து.

Related Posts

error: Content is protected !!