November 28, 2022

வீணை எஸ். பாலசந்தர்!

இந்திய அளவில் புகழ்பெற்ற வீணை இசைக் கலைஞரும், தமிழ் திரையுலகின் சிறந்த இசை அமைப்பாளர், இயக்குநர், பாடகர் என்ற பன்முகப் பரிமாணம் கொண்டவருமான எஸ்.பாலசந்தர் (S.Balachander). 1927-ம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் சுந்தரம் ஐயர்- செல்லம்மாள் தம்பதிக்கு 5 வது குழந்தையாக பிறந்தவர் .

வழக்கறிஞரான சுந்தரத்திற்கு தொழில்மீதான நாட்டத்தை விட இசையின் மீதும், இசைக் கலைஞர் கள் மீதும் ஆர்வம் அதிகம். இத்தனைக்கும் இசையில் ஞானம் பெற்றவரல்ல அவர். மாலை நேரமானால் மயிலாப்பூர் வீட்டில் ஏதாவது ராக ஆலாபனை இசைக்கப்பட்டுக்கொண்டிருக்கும். அல்லது இசையை குறித்த தர்க்கம் ஓடிக்கொண்டிருக்கும்.

பெரும்பாலும் புகழ்பெற்ற கலைஞர்களை அப்போது அங்கு காணமுடியும். பாலசந்தரின் தாய் செல்லம்மாளுக்கு இது பிடிக்கவில்லையென்றாலும், கணவரின் ஆசைக்கு அவர் குறுக்கே நின்றதில்லை. ஆனால் அதுதான் சிறுவன் பாலசந்தர் இசையுலகில் நுழைய காரணமானது.

ஆம்.. கல்கத்தாவில் நடந்த அந்த பெரும் கச்சேரிக்கு இசை ஆர்வலர்கள் திரண்டுவந்திருந்தனர் அன்று. காரணம் அவர்கள் விருப்பத்துக்குரிய கலைஞரின் பக்கவாத்திய இசை அன்று அரங்கேறியதே.

கஞ்சிரா ஓசை, மேடையில் ஒலிக்கத்துவங்கி முடியும் வரை பார்வையாளர்கள் வரிசையில் நிசப்தம். கச்சேரி முடிந்த மறுநிமிடம், அரங்கமே அதிரும்படி கைதட்டல் எழுந்தது அங்கு.

பார்வையாளர்களை தன் கச்சேரியால் கட்டிப்போட்ட அந்த சிறுவனுக்கு வயது 7.

7 வயதில் இசையுலகில் பிரபலம் அடைந்த மழலைமேதை வேறு யாருமல்ல, பின்னாளில் வீணையின் மேல் காதல் கொண்டு ‘வீணை என்றால் பாலசந்தர்’, ‘பாலசந்தர் என்றால் வீணை’ என பெரும்புகழ்பெற்ற ‘வீணை’ எஸ்.பாலசந்தர்.

10-வது வயதில் திரையுலகில் கால் பதித்தார். 1933-ம் ஆண்டு வெளியான ‘சீதா கல்யாணம்’ படத்தில் கஞ்சிரா வாசிக்கும் சிறுவனாக நடித்தார். அதன் பின்னணியே சுவையானது : 1932-ம் ஆண்டு பிரபல வங்க இயக்குனர் சாந்தாராம், சிறிய பட்ஜெட் படம் ஒன்றை எடுக்க திட்டமிட்டார். நண்பர் மூலம் சுந்தரத்திற்கு இது தெரியவர, அது தொடர்பான பேச்சுவார்த்தையில் சுந்தரத்தின் மூத்த மகன் ராஜம் மற்றும் அவரது மகள்கள் அதில் நடிப்பதாக முடிவானது. சீதா கல்யாணம் என்ற அந்த படத்தில் சுந்தரமும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். மொத்த குடும்பமே படத்தில் நடித்ததால், படப்பிடிப்பு தளத்திற்கு சிறுவன் பாலசந்தரும் செல்லவேண்டியதானது.

ஒருநாள் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுவன், ஓங்கி குரல் எடுத்து அழ ஆரம்பித்தான். அழுகைக்கு காரணம் கேட்டபோது, தானும் நடிக்கவேண்டும் என்றான். சிரித்தபடி, ‘ உனக்கு என்ன தெரியும்…?’ என்றார் சாந்தாராம் தெரிந்ததை யெல்லாம் சொன்னான் சிறுவன் பாலசந்தர். சரி, ராவணனின் சபையில் ‘கஞ்சிரா வாசி…’ என்று பத்தோடு ஒன்றாக சிறுவன் அமரவைக்கப்பட்டான். ஆனால் ஆச்சர்யம். படம் வெளியானது. படத்தில் மழலை மாறாத சிறுவன் பாலசந்தர், நளினமாக தேர்ந்த கலைஞனைப்போல் கஞ்சிராவை வாசித்ததற்காகவே திரும்ப திரும்ப வந்தார்கள் ரசிகர்கள். பத்திரிக்கைகள் விமர்சனத்தில் சிறுவனை உச்சிமோர்ந்தது. படத்தின் முடிவில் தபேலா செட் ஒன்றை தந்து வாழ்த்தினார் சாந்தாராம்.

தொடர்ந்து ‘ஆராய்ச்சி மணி’, ‘காமதேனு’, ‘ரிஷ்யஸ்ருங்கர்’, ‘நாரதன்’ ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். வீணை, தபலா, மிருதங்கம் உள்ளிட்ட பல இசைக்கருவிகளை தானாகவே இசைக்கக் கற்றுக் கொண்டார்.

இப்படி ஜஸ்ட் 12-வது வயதிலேயே சிதார் கருவியில் தனிக் கச்சேரி நடத்துமளவுக்கு வல்லமை பெற்றார். வீணை இசையில் விசேஷ பயிற்சி பெறத் தொடங்கினார். இரண்டே ஆண்டுகளில் இதிலும் குருவின் துணையின்றி கச்சேரி நடத்துமளவுக்குத் திறன் பெற்றார்.

கர்நாடக இசையைத் தவிர இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் இசைக் கச்சேரிகள் நடத்தினார். இசைத் தட்டுகளை வெளியிட்டார். இவரது புகழ் உலகம் முழுவதும் பரவியது.

‘மேஜிக் ம்யூசிக் ஆஃப் இந்தியா’, ‘சவுன்ட்ஸ் ஆஃப் வீணா’, ‘இம்மார்ட்டல் சவுண்ட் ஆஃப் வீணா’ உள்ளிட்ட பல இசைத் தட்டுகளை வெளியிட்டுள்ளார். இவை உலகம் முழுவதும் விற்பனையாகின. 1948-ல் ‘இது நிஜமா’ என்ற படத்தில் ஹீரோ வேடம் கிடைத்தது. முதல் படமே பேய்ப்படம்தான்.

தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைத்தன. ‘தேவகி’, ‘ராஜாம்பாள்’, ‘ராணி’, ‘இன்ஸ்பெக்டர்’, ‘பெண்’, ‘கோடீஸ்வரன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். 1960களில் திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். தான் இயக்கிய படங்களுக்குத் தாமே இசையமைத்தார்.

‘இது நிஜமா’, ‘என் கணவர்’, ‘டாக்டர் சாவித்திரி’, ‘பூலோக ரம்பை’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி, இசையமைத்து, நடித்தார். இவர் இயக்கிய ‘அந்த நாள்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட். பிறகு ‘அமரன்’, ‘அவனா இவன்’, ‘பொம்மை’, ‘நடு இரவில்’ உள்ளிட்ட திகில் படங்களையும் இயக்கினார்.

கே.ஜே.ஜேசுதாசை அறிமுகப்படுத்தியது பாலசந்தர்தான். அவர் இயக்கி, இசையமைத்த ‘பொம்மை’ படத்தில் ‘நீயும் பொம்மை நானும் பொம்மை….’ என்று பாடி தனது தமிழ்த்திரைப் பயணத்தைத் தொடங்கினார் ஜேசுதாஸ்.

திரைப்படங்களில் நடிப்பு, இசை, பின்னணிப் பாடகர், இயக்கம் என அத்தனைக் களங்களிலும் முத்திரை பதித்தார். பத்மபூஷண் விருது, சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத கலாசிகாமணி விருது, ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றார்.

தமிழ்த் திரையுலகில் அரை நூற்றாண்டு காலம் வெற்றிகரமாக இயங்கிவந்தவர். அசாதாரணமான பன்முகத் திறன் படைத்த இசைக் கலைஞர், இயக்குநர், இசை இயக்குநர், பாடகர், நடிகருமான இந்தச் சாதனையாளர், 1990-ம் ஆண்டு 63-ம் வயதில் மறைந்தார்.

அவரின் பொம்மைப் படத்தில் டைட்டில் கார்ட் போட்ட யுக்தியை சகலரும் காண கீழே ஷேர் செஞ்சிருக்கேன்.. பாருங்களேன்🥰👇🏻

 

எஸ். பாலச்சந்தர் பிறந்த நாளையொட்டிய பதிவு