September 20, 2021

எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக சுதா சேஷய்யன் நியமனம்!

எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்த கீதா லட்சுமி கடந்த 27-ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில் புதிய துணைவேந்தராக மருத்துவர் சுதா சேஷய்யனை நியமித்து, அதற்கான ஆணையை வழங்கினார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே இந்த தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர். மருத்துவ பல்கலைக் கழக துணை வேந்தர் பதவி காலியாக உள்ளது. துணை வேந்தரை தேர்வு செய்ய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.  இதையொட்டி இந்த துணைவேந்தர் பதவிக்கு தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசையின் கணவர் டாக்டர் சவுந்தரராஜன், முன்னாள் துணை வேந்தர் டாக்டர் மயில் வாகனன் நடராஜன், முன்னாள் பதிவாளர் டாக்டர் சுதா சே‌ஷய்யன், டாக்டர் பால சுப்பிரமணியன், டாக்டர் விமலா, பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் டி.எஸ். செல்வ விநாயகம் மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் பாரத்மன்சுக்லால் மோடி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் காமேஷ்வரன், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் வெங்கடகிருஷ்ண முரளி உள்பட 48 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதனையடுத்து புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய ஆலோசனை நடந்து வந்தது.

மயில்வாகனன் நடராஜன் பல்கலைக்கழகத்தின் சட்டப்படி மீண்டும் துணை வேந்தர் பதவியைப் பெற சட்ட உதவியை நாடி உள்ளார். இதனால் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தராக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் மருத்துவர் சுதா சேஷய்யன் அப்பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்று (டிசம்பர் 29) சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து, எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான நியமன ஆணையை சுதா சேஷய்யன் பெற்றுக் கொண்டார். இப்பதவியில் இவர் மூன்று ஆண்டுகள் நீடிப்பார் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத் துறையில் 30 ஆண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றிய சிறப்பு கொண்டவர் சுதா சேஷய்யன் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருக்கமான தோழிகளுள் ஒருவர் சுதா சேஷய்யன். ஜெயலலிதாவிடம் இருந்து எப்போது அழைப்பு வந்தாலும், உடனடியாக அவரைச் சென்று சந்திக்கும் வழக்கம் கொண்டவர். தற்போது இவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் மனித உடற்கூறியல் பேராசிரியராகவும், அத்துறையின் இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். அக்கல்லூரியின் துணை முதல்வர் பதவியில் இருந்தபோது, அப்போலோவில் இருந்த ஜெயலலிதாவின் உடலைப் பராமரிக்கும்விதமாக எம்பால்மிங் சிகிச்சை மேற்கொண்டார் சுதா சேஷய்யன். சமீபத்தில் ஆறுமுகச்சாமி விசாரணை கமிஷனில் நேரில் ஆஜராகி, ஜெயலலிதா உடலுக்கு எம்பால்மிங் செய்தது குறித்து விளக்கம் அளித்திருந்தார்.

முன்னதாக, இவர் இதே எம்ஜிஆர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளராகவும் பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். ஆன்மீகத்தில் ஆர்வமுடைய சுதா சேஷய்யன் பள்ளிகள், கல்லூரிகள் பலவற்றில் ஆன்மிக உரையாற்றியுள்ளார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழக அரசின் நிகழ்ச்சிகளுக்குத் தொகுப்பாளராகவும் இவர் இருந்துள்ளார். மனித உடற்கூறியல் தொடர்பான ‘Gray’s Anatomy’ என்ற புத்தகத்தை வெளியிட்ட ஆசிரியர் குழுவில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்க்து.