December 8, 2022

சூரரைப் போற்று- விமர்சனம்!- பார்த்தே தீர வேண்டிய படமிது!

கோலிவுட்டில் பெரும்பாலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்காவும், அடிசனலா ஒரு வார எக்ஸ்ட்ரா வசூலுக்காகவும்தான் படம் எடுக்கிறார்கள் என்று சகல சினிமாவாசிகளுக்கும் தெரியும். ஆனால் சோகம் என்னவென்றால் கருப்பு வெள்ளை காலம் தொடங்கி இன்று வரை அப்பா, அம்மா பாசம், அண்ணன் தங்கை பாசம், காதல், நட்பு, காமெடி, பேய் அல்லது சோகம் என்பது போன்ற வழமையான வாழ்வியல் பின்னணி கொண்ட கதை களங்களை யோசிப்பது மட்டுமே வாடிக்கையாகி விட்டது. அதைத் தாண்டி நாம் வாழ்ந்த மண்ணில் நம் மனசை புரட்டிப் போட்டு ,தன்னம்பிக்கையை ஊட்டும் களம் கொண்ட சாதனையாளர்களின் வாழ்க்கைக் குறித்து யாரும் யோசிப்பதே இல்லை.. நம் ரிப்போர்ட்டர் டீம் கட்டிங் கண்ணையா சொன்னது போல் இந்தி அளவிற்கு வாழ்க்கையை மையபடுத்தி எடுக்கப் படும் பயோபிக் படங்கள் தமிழில் அபூர்வம்தான். பாலிவுட் திரையுலகம் தோனி, சச்சின் நீர்ஜா, மணிகர்ணிகா, மேரி கோம், தங்கல் மற்றும் மோடி, சில்க் ஸ்மிதா வரை பல வெற்றி படங்களை தந்திருக்கிறது. ஆனால் மணிரத்னத்தின் இருவர், சமீபத்திய கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநதி என சிலவற்றை தவிர்த்து வேறு குறிப்பிட்ட வெற்றி படங்கள் இல்லாதது கோலிவுட்டின் குறையே. இதை உணர்ந்ததால்தானோ என்னவோ முற்றிலும் மாறுபட்டு நம் சக இந்தியன் இதே நாட்டில் இப்போதும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சாதனை மனிதரான கோபிநாத் வாழ்க்கையை ‘சூரரைப் போற்று’ என்ற தலைப்பில் சூர்யா-வை கேப்டன் கோபிநாத்-தாக்கி இயக்குநர் சுதா கொங்கரா வழங்கி இருக்கும் இப்படம் சகல இளைஞர்களும் பாடம் என்று சொன்னால் அது மிகையல்ல..

ஆம்.. இப்படத்தின் நிஜ நாயகனும் இப்போதும் சாதித்துக் கொண்டிருப்பவருமான கேப்டன் கோபிநாத் என்பவர்தான் . இத்தனைக்கும் இவருக்கு ரத்தன் டாடா போன்ற பணக்கார பின்புலம் கிடையாது, கோடிக்கணக்கான சொத்துக்களோ, வெளிநாட்டில் சென்று படிக்கும் வசதியோ, படித்து முடித்ததும் பணியில் சேர சொந்த நிறுவனமோ கோபிநாத்திடம் இல்லை. பல ஆண்டு கால கடின உழைப்பு, அவமானங்கள், ஏமாற்றங்கள் என அனைத்தையும் கடந்து, தனது கனவை நோக்கிய பயணத்தில் சற்றும் மனம் தளராது ஒரு வெற்றி சாம்ராஜ்யத்தை உருவாக்கி யவர் தான் கோபிநாத். அதிலும் விமானப் பயணம் என்ற வித்தையில் கண்ணைக் கட்டிக் கொண்டு காசு பார்த்த மாஃபியா கும்பலை எதிர்த்து போராடி ஜெயித்தவர். இன்னொரு விசயம் தெரியுமா? அவர் ஈடுபடாத துறைகளே இல்லை. இந்திய ராணுவ அதிகாரியாக பங்களாதேஷ் விடுதலைப் போரில் மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறார். இந்திய சீன எல்லையில் தனியே காவல் பணி புரிந்திருக்கிறார். விவசாயம் செய்திருக்கிறார். பால் பண்ணை, பட்டுப் பூச்சி வளர்ப்பு, மோட்டார் பைக் ஏஜென்ஸி, உடுப்பி ஹோட்டல், பங்குச் சந்தை என்று ஏகப்பட்ட வேலைகளில் நுழைந்து இருக்கிறார். கோபிநாத் வாழ்வில் அரசியலும் உண்டு. தேவே கவுடாவை எதிர்த்து பிஜேபி சார்பில் போட்டியிட்டிருக்கிறார். தோல்வியும் அடைந்திருக்கிறார். ஆனால் மிகக் குறைந்த விலையில் விமானப் பயணங்களை வழங்கிய ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனராகத்தான் கேப்டன் கோபிநாத்தை பலரும் அறிவார்கள். அந்த, ஏர் டெக்கான் நிறுவனத்திற்கு முன்பும் பின்பும் கோபிநாத் செய்த சாதனைகளும் சாகசங்களும் மகத்தானவை. அந்த தன் அனுபவங்கள் பலருக்கு உபயோகப்படும் என்ற நம்பிக்கையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக Simply Fly: A Deccon Odyssey என்ற பெயரில் சுயசரிதையாகவே எழுதிவிட்டார். இந்தப் புத்தகத்தை தமிழிலும் வானமே எல்லை என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அந்த புத்தக்கத்தில் இருந்து ஒரே ஒரு அத்தியாயத்தை – அதுதான் பலருக்கும் தெரிந்த சகல தரப்பினரையும் விமானத்தில் பறக்க வைத்த வீர தீர வரலாற்றை கொஞ்சம் கோலிவுட், டோலிவுட் சினிமா மசாலாக்கள் சேர்த்து வாயைப் பிளக்க வைத்து மனசை புத்துணர்ச்சி ஆக்கி அசத்தி இருக்கிறார்கள் சூரரைப் போற்று டீம்!,

இந்த சூரரைப் போற்று படம் தயாரான விதம் குறித்து இன்று டைரக்டர் சுதா-விடம் கேட்ட போது, “இது முழுக்க முழுக்க ஜி.ஆர்.கோபிநாத்தோட வாழ்க்கைக் கதைதான்னு சொல்ல முடியாது என்பதை உணர முடியுது இல்லையா?. படத்துல சூர்யாவோட பெயர், தோற்றம் எதுவுமே அவரை ஞாபகப்படுத்தலை இல்லையா?. ஆனா இந்தப் படத்துல வரும் பெரும் பாலான சீன்கள் உண்மையாக நடந்ததுதான் என்பதை ஃபீல் பண்ண முடியுது இல்லையா? ஒவ்வொரு சீன் பார்க்கும் போதும் புதுசா இருக்கு இல்லையா?. உண்மையில், ஜி.ஆர்.கோபிநாத் என்னென்ன சாதனைகள் பண்ணியிருக்கார்னு பல பேருக்குத் தெரிய வாய்ப்பில்லை. இந்தக் கதையை முழுமையா எழுதி முடிச்சதும், எனக்கே கோபிநாத்தை நினைக்கும்போது பிரமிப்பா இருந்துச்சு. இதுல நாம எதை எடுக்குறது, எதை விடுறதுங்கிறதுல தான் எனக்கு சவால் இருந்தது.’’ என்று மகிழ்ச்சியாக சொன்னது முழுக்க முழுக்க உண்மை!

இப்படத்தில் வரும் கதை என்னவென்றால் முன்னரே சொன்னது போல் உலகமெங்கும் -குறிப்பாக நம் நாட்டில் எல்லோருக்கும் கிடைக்க வேண்டிய சில பல விஷயங்கள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கிடைப்பதால், மேலே இருப்பவன் எப்போதும் மேலே இருக்க, கீழே இருப்பவன் எப்போதும் கீழவே இருப்பது தொடர் கதையாகி விடுகிறது. இப்படி ஒரு நடைமுறை தான் விமான பயணத்திலும் இருந்தது. அதிலும் கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் ஏகப்பட்ட விமான சேவை நிறுவனங்களின் மாஃபியா போக்கு குறித்துதான் கொஞ்சம் விரிவாக, அதே சமயம் எளிதாகவும் சுவையான கதையாகவும் சொல்லி இருக்கிறார்கள்.,.!

சோழவந்தான் அருகில் உள்ள ஒரு பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த நெடுமாறன் ராஜாங்கம்-மாக வரும் சூர்யா அபாரம்.. அநாவசியமாக பற்களை கடித்துக் கொண்டு வசனம் பேசுதல், வெறித்தனமான பார்வை, முறுக்கேறும் நரம்பு, கத்தி, அரிவாள் எதுவும் இல்லாமல் கூட இவ்வளவு அழகாக நடிக்க வரும் என்பதை சூர்யாவே புரிந்து கொண்டால் தமிழ் சினிமாவுக்கு நலம் பயக்கும்.

நாயகியாக நடித்திருக்கும் அபர்ணா பாலமுரளி-க்கு ஹீரோவுக்கு இணையான ரோல். நடிப்பு, முகபாவனை போன்ற சினிமாவுக்கு தேவையான அனைத்திலும் தனித்து கவனிக்க பொம்மி என்ற கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.

வில்லன் பரேஷ் ராவல், சூர்யாவின் அம்மாவாக வரும் ஊர்வசி, அப்பா கேரக்டரை தாங்கி இருக்கும் பூ ராம், கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் என சூரரை போற்று=வில் வரும் எல்லா ரோலிலும் டைரக்டர் சுதா கொங்கரா-வின் முகம் தெரிகிறது.

நிகேத் பொம்மியின் கேமரா -வாவ் சொல்ல வைக்கிறது. ஜி.வி.பிரகாஷின் இசையில் சில பாடல்கள் மனதி வந்து உட்கார்ந்த நிலையில் காட்சி அமைப்புடன் காண மிக நன்றாக இருக்கிறது. பின்னணி இசையிலும் பின்னுகிறார்..!

வசனகர்த்தா பல இடங்களில் நம்மை கவர்கிறார்.. !

இப்படி பல பாஸிட்டிவ்களுடன் ஒரு படத்தை பக்க ஜனரஞ்சகமாக அதுவும் மோட்டிவேஷன் மெசேஜூடன் முடித்திருக்கும் சுதா கொங்கரா-வுக்கு ஒரு ஸ்பெஷல் பொக்கே பரிசளித்தே ஆக வேண்டும்.

அப்ப குறைகள் ஏதுமில்லையா?

அட.. போங்கப்பூ.. ஏகப்பட்ட நிறைகள் கொண்ட இது போன்ற ஒரு தமிழ் படத்தை பார்த்து எம்பூட்டு நாளாச்சு! மொத்தத்தில் சினிமாவை நேசிப்போர் மட்டுமின்றி வாழ்வில்  முன்னேற ஆசைப்படும் ஒவ்வொருவரும் பார்த்தே தீர வேண்டிய படமிது!

மார்க் 3.75 / 5