பாரா சைக்காலஜி ஹாரர் ஜானரில் உருவாகியுள்ள ‘ஸ்ட்ரைக்கர்’
ASW கிரியேஷன்ஸ் மற்றும் JSJ சினிமாஸ் சார்பில் ஹென்றி டேவிட் மற்றும் ஜஸ்டின் விஜய் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஸ்ட்ரைக்கர்’. எஸ்.ஏ பிரபு இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜஸ்டின் விஜய் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் ராபர்ட் மாஸ்டர், கஸ்தூரி, அபிநயாஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். இந்த படத்தில் பாடல்களுக்கான இசையை விஜய் சித்தார்த்தும் பின்னணி இசையை விடி பாரதி மற்றும் விடி மோனிஷ் ஆகியோரும் அமைத்துள்ளனர். ஒளிப்பதிவை மனீஷ் மூர்த்தி கவனிக்க, படத்தொகுப்பை நாகூரான் ராமச்சந்திரன் மேற்கொண்டுள்ளனர். இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குனர்கள் சுசீந்திரன், பேரரசு, சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், நடிகர் இமான் அண்ணாச்சி, பாரதமாதா மணிமாறன், நடிகர் ஆர்.எஸ் கார்த்திக், விஜய் டிவி புகழ் நவீன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் இயக்குனர் எஸ்.ஏ பிரபு பேசும்போது, “இந்த படம் பாரா சைக்காலஜி ஹாரர் ஜானரில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் கதை பிடித்து போனதால் படத்தின் கதாநாயகன் ஜஸ்டின் தான் இந்த படத்திற்கான தயாரிப்பாளர்களை ஆர்வமுடன் தேடினார். யூடியூப்பில் பார்த்த அஸ்வின் என்கிற குறும்படத்திற்கு இசையமைத்திருந்த விஜய் சித்தார்த்தின் இசையால் ஈர்க்கப்பட்டு அவரை இந்த படத்திற்கு இசையமைப்பாளராக தேர்வு செய்தோம். என்னுடைய கல்லூரி காலத்திலிருந்து நண்பராக தொடர்ந்து வரும் ஹரிசங்கர் ரவீந்திரன் இந்த படத்தின் மூன்று பாடல்களையும் எழுதியுள்ளார். பெரிய பாடலாசிரியராக ஒப்பந்தம் செய்யலாமே என முதலில் தயாரிப்பாளர் தயங்கினாலும் ஹரிசங்கர் எழுதிய முதல் பாடலை பார்த்துவிட்டு அனைத்து பாடல்களையும் அவரே எழுதும்படி கூறிவிட்டார். சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் எனக்கு நீண்ட நாட்களாக நெருங்கிய பழக்கம் உள்ளவர் என்பதால் இந்த கதை குறித்து அவ்வப்போது அவரிடம் விவாதித்து அவரது ஆலோசனைகளையும் கேட்டுக்கொண்டேன். இந்த படத்திற்கு பொருத்தமான டைட்டில் என்பதால், டோரா பட இயக்குனர் தாஸ் தான் அவரிடம் இருந்த இந்த ஸ்ட்ரைக்கர் டைட்டிலை எனக்காக கொடுத்தார்” என்று கூறினார்.
பாடலாசிரியர் ஹரிசங்கர் ரவீந்திரன் பேசும்போது, “கவிஞர் கண்ணதாசன் எழுதிய வசந்த கால நதியினிலே பாடல் போல, இந்த படத்தில் ஒரு பாடலை அந்தாதியில் எழுதியுள்ளேன். இதற்கு முன்னதாக பாசமலர், பொன்னூஞ்சல், வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் பாடல் எழுதியுள்ளேன். நீ வருவாய் என தொடரின் டைட்டில் பாடலை எழுதியது நான் தான். ஆனால் எதிலுமே என்னுடைய பெயர் இடம் பெறவில்லை. இந்த படத்தில் தான் முதல் முறையாக எனக்கு பாடலாசிரியர் என்கிற அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதை எனது வாய்ப்புக்கான மேடையாக நான் பயன்படுத்திக் கொள்கிறேன்: என்று கூறினார்.
படத்தின் நாயகன் ஜஸ்டின் விஜய் பேசும்போது, “என்னுடைய பயணத்தை ஒரு விஜே ஆகத்தான் ஆரம்பித்தேன். காஞ்சனா, மெட்ராஸ் திரைப்படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்தேன். எனது நடிப்பிற்கு லாரன்ஸ் மாஸ்டர் தான் பிள்ளையார் சுழி போட்டு துவங்கி வைத்தார். இசையமைப்பாளர் விஜய் சித்தார்த்திடம் அவரது தவறுகளை சுட்டிக்காட்டினாலும் அவரை பாராட்டினாலும் இரண்டையும் ஒரே மாதிரி எடுத்துக் கொள்ளக்கூடிய நல்ல மனிதர். இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் விதமாக எடுத்துள்ளோம். இந்த படத்திற்கு பின்னணி இசை அமைத்தவர்களில் விடி மோனிஷ் இந்த நேரத்தில் எங்களுடன் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது” என்று கூறினார்.
சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும்போது, “அங்கீகாரத்திற்கு ஏங்கும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து முயற்சி செய்துள்ளது நல்ல விஷயம். இந்த படத்தின் இயக்குனர் எஸ்.ஏ பிரபு, ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த சமயத்தில் அவரிடம் ஒரு படத்தின் மேக்கிங் வீடியோவை எடுக்கும் பொறுப்பையே நம்பி ஒப்படைத்தார்கள்.. அந்த அளவுக்கு திறமையான நபர். பொதுவாக ஹீரோவுக்கு கதை பிடித்து போனபின் அதன் பிறகு அதில் மாற்றம் செய்தால் அது சரியாக இருக்காது. ஆனாலும் இயக்குனர் பிரபு என்னிடம் இந்த கதை பற்றி இறுதி நேரத்தில் சொன்னபோது அதில் முக்கியமான ஒரு சில ஆலோசனைகளை கூறினேன். ஆனாலும் தயங்காமல் அதை ஏற்றுக்கொண்டு சில மாற்றங்களை செய்து படமாக்கி உள்ளார். இசையமைப்பாளர் விஜய் சித்தார்த் மூன்று வித ஜானர்களில் வித்தியாசமான பாடல்களை கொடுத்துள்ளார். நிச்சயம் மிகப்பெரிய இசையமைப்பாளராக அவர் வருவார்” என்று கூறினார்.
நடிகர் ஆர்.எஸ் கார்த்திக் பேசும்போது, “இங்கே புதியவர்களை சப்போர்ட் பண்ண ஆட்கள் இல்லை.. 15 இயக்குனர்கள் 15 நடிகர்கள் என தமிழ் சினிமா தேங்கி நிற்கிறது. தென்னந்தோப்பு, மாந்தோப்பு வைத்திருப்பவர்கள் அதை மட்டுமே நம்பியிராமல் இடையில் ஊடு பயிர் சாகுபடி செய்வார்கள்.. அதுபோல புதியவர்களுக்கும் வாய்ப்பளித்து ஆதரவளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
படத்தின் தயாரிப்பாளர் ஹென்றி டேவிட் பேசும்போது, “இது எனக்கு முதல் படம். இந்த படத்தின் கதையை கேட்டதுமே பிடித்தது. நிச்சயமாக அனைவருக்கும் இந்தப்படம் பிடிக்கும். குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாக இது உருவாகியுள்ளது. புதியவரான ஹரிசங்கர் பாடல்கள் எழுதுகிறார் என இயக்குனர் கூறியபோது நம்பிக்கை இல்லாமல் முதலில் தயங்கினேன். ஆனால் முதல் பாடலை பார்த்ததுமே அவர் மீது நம்பிக்கை வந்தது. அந்த அளவிற்கு நல்ல பாடல்களாக கொடுத்துள்ளார்” என்று கூறினார்.
இந்த நிகழ்வில் நேரில் கலந்துகொள்ள முடியாத சூழலில் படத்தின் நாயகி வித்யா பிரதீப், சிறப்பு அழைப்பாளர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் வீடியோ மூலமாக படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். பலகுரலில் பேசக்கூடிய விஜய் டிவி புகழ் நவீன் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய்சேதுபதி ஆகியோரின் குரலில் படக்குழுவினரை வாழ்த்தியதை விழாவிற்கு வந்தவர்கள் அனைவரும் ரசித்து வரவேற்றனர்.