குழந்தைகளை அதிக நேரம் டி.வி.பார்க்க அனுமதிக்காதீங்க! -உலக சுகாதரா நிறுவனம் எச்சரிக்கை!

நவீனமயமாகி விட்ட இந்த நூற்றாண்டில் தொலைக்காட்சி, வானொலி, கணிப்பொறி மற்றும் செல்போன்களின் தேவை மிகவும் அத்தியாவசியமானதாக உள்ளது. இத்தகைய பொழுதுபோக்கு சாதனங்களால் குழந்தைகளுக்கு நன்மையைவிட பல தீமைகள் ஏற்படும் வாய்ப்புகளே அதிகம். 8 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு நாளைக்கு 6 மணிநேரம் வரை தொலைக்காட்சி பார்க்கிறார்கள் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. தொலைகாட்சியில் வரும் கற்பனை நிகழ்ச்சி களைக் குழந்தைகளால் நிஜவாழ்க்கையில் இருந்து வேறுபடுத்தி எண்ண முடியாது.

தொலைக்காட்சி மற்றும் கணிப்பொறியில் அதிக நேரத்தைச் செலவிடுவதால் குழந்தைகளால் விளையாட்டு, உடற்பயிற்சி மற்றும் பெற்றோர்களிடம் அதிகமாக நேரத்தைச் செலவிட முடிவ தில்லை. வன்முறை நிறைந்த நிகழ்ச்சிகளை அதிக நேரம் காண்பதால், குழந்தைகளும் அத்தகைய எண்ணங்களுடனே வளர்கின்றனர். இத்தகைய வன்முறை நிகழ்ச்சிகளால் குழந்தைகள் தங்கள் படிப்பிலும் கவனம் செலுத்த இயலாது. மேலும், தொடர்ந்து இத்தகைய நிகழ்ச்சிகளால் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர்.

அதிக நேரம் தொலைக்காட்சி மற்றும் கணிப் பொறியில் ஈடுபடும் குழந்தைகளால் தங்கள் நண்பர் களிடமும், பெற்றோர் மற்றும் உறவினரிடமும் அதிக நேரம் செலவிட முடியாமல் தனிமையான சூழ்நிலையில் அதிக நேரத்தைக் கழிக்கின்றனர் . தொலைக் காட்சி பார்ப்பதில் செலவிடப்படும் ஒவ்வொரு அதிக மணிநேரத்தினாலும், குழந்தைகள் உடல் பருமன் ஏற்படும் வாய்ப்பு 2 சதவீதம் அதிகரிக்கிறது. தொலைக்காட்சி மட்டுமின்றி வீடியோ கேம்ஸில் அதிக நேரம் செலவிடுவதால் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுகிறது. தொலைக்காட்சியில் அதிகம் வரும் துரித உணவு (fast food) சம்பந்தப்பட்ட விளம்பரங்களைக் காண்பதால் குழந்தைகள் அவற்றால் ஈர்க்கப்பட்டு சத்தான உணவுகளை விட அத்தகைய உணவுகளை உண்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர் என்றெல்லாம் ஏற்கெனவே எச்சரிக்கை வெளியாகியிருந்த நிலையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு மணி நேரத்துக்கு மேல் டிவி அல்லது மொபைல் போன்களை பயன்படுத்த கூடாது. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதிக நேரம் டிவி, மொபைல் போனை பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு தூக்கமின்மை, உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐநாவின் உலக சுகாதார நிறுவனம் முதல்முறையாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உடல் ஆரோக்கியத்துடன் வளரவும் இளம்பருவத்தில் உடல்பருமனை தடுப்பதற்கான வழிகாட்டுதல் களை வெளியிட்டுள்ளது. முக்கியமாக குழந்தைகள் அதிக நேரம் டி.வி. மொபைல் போனில் செலவிடுவதால் ஏற்படும் விளைவுகள், ஓடி விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஆகியவற்றை பரிசீலித்து அதன் அடிப்படையில் இந்த வழிகாட்டுதல்களை உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு வழங்கியுள்ளது.

அதன் விவரம் இதோ:

உலகில் உள்ள 4 கோடி குழந்தைகளில் 6 சதவீதம் பேர் அதிக உடல் எடையுடன் உள்ளனர். அதில் பாதி பேர் ஆப்பரிக்கா மற்றும் ஆசியாவை சேர்ந்த குழந்தைகள்.

ஆரம்ப கட்ட குழந்தை பருவம் தான் அதிகளவு உடல் வளர்ச்சி ஏற்படும் தருணம். இந்த காலக் கட்டத்தில் குழந்தைகள் நன்றாக தூங்க வேண்டும். ஓடி ஆடி விளையாட வேண்டும். அப்போது தான் அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் வளர்வார்கள். அதற்கு அவர்களின் குடும்ப சூழல் முக்கிய பங்கு வகிக்கும்.

இன்று பெரும்பாலான குழந்தைகள் அதிக நேரம் டீ.வி அல்லது மொபைல் போனில் நேரத்தை செலவிடுகிறார்கள். இது அவர்களின் உடல்நலனை கடுமையாக பாதிக்கும்.

எனவே ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மிகவும் குறைவான நேரம் மட்டுமே டிவி மற்றும் மொபைல் போன் பயன்படுத்த வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு அதிகமாக அவற்றை பயன்படுத்த கூடாது. அதிகம் நேரம் ஓடி ஆடி விளையாட வேண்டும். போதுமான தூக்கம் அவசியம். இதை பின்பற்றினால் தான் குழந்தைகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வளர முடியும்.

இதை தவிர்த்து குழந்தைகள் விளையாட்டில் ஈடுபடாமல் அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து டிவி மொபைல் போன்களை பயன்படுத்தினால் அது உடல்நலனை பாதிக்கும். தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனால் குழந்தைகளுக்கு இளம் வயதில் உடல் பருமன் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் டிவி அல்லது மொபைல் போனை பயன்படுத்தவே கூடாது என்றும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

வாழ்க்கையின் ஆரம்பக்கட்டம் முதல் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதே நல்ல உடல் நலனுக்கு வழி வகுக்கும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயேசுஸ் தெரிவித்துள்ளார்