கம்போடியாவில் தாய்ப்பால் ஏற்றுமதிக்கு நிரந்தரத் தடை!

கம்போடியாவில் தாய்ப்பால் ஏற்றுமதிக்கு நிரந்தரத் தடை!

அமெரிககாவின் யூட்டா நகரைச் சேர்ந்த ‘அம்ப்ரோஸியா லேப்ஸ்’ நிறுவனம், கம்போடியா தலைநகர் நாம்பெனில் தனது கிளை அலுவலகத்தைக் கொண்டுள்ளது. நாம்பெனின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள அந்த நிறுவனத்தின் தொழிற்சாலையில், அந்த நகரையும், சுற்றியுள்ள பகுதிகளையும் சேர்ந்த தாய்மார்களிடமிருந்து அந்த நிறுவனம் தாய்ப்பாலை விலைக்கு வாங்கி, அதனைப் பதப்படுத்தி வருகிறது.அந்தப் பால் பிறகு புட்டிகளில் அடைக்கப்பட்டு, அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

milk mar 30

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய தாய்மார்களிடமிருந்து குறைந்த விலைக்குப் பெறப்பட்ட அந்தத் தாய்ப்பால், 5 அவுன்ஸ் (147 மிலி) புட்டி 20 டாலருக்கு (சுமார் ரூ.1,300) என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அம்ரோஸியா நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, ஏற்கெனவே ஊட்டச் சத்துக் குறைபாடு அபாயத்தை எதிர்நோக்கியிருக்கும் கம்போடியக் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்று ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் கம்போடியப் பிரிவு செய்தித் தொடர்பாளர் இமான் மோரூக்கா, “கம்போடியப் பெண்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி, அவர்களது தாய்ப்பாலை லாபத்துக்காக விற்பனை செய்யும் தாய்ப்பால் வங்கிகளை தடை செய்ய வேண்டும்.மனித ரத்தம், உடலுறுப்புகள் ஆகியவற்றை தானமாக மட்டுமே வழங்க வேண்டும், வர்த்தகரீதியில் விற்பனை செய்யக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருப்பதைப் போல, தாய்ப்பால் விற்பனையும் சட்டவிரோதமாக்கப்பட வேண்டும். ஏற்கெனவே ஊட்டச் சத்துக் குறைபாட்டு அபாயத்தை எதிர்நோக்கியிருக்கும் கம்போடியக் குழந்தைகளின் நலனைப் பேண, தாய்ப்பால் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும்”என்று தெரிவித்திருந்தார் அவர்.

இதற்கிடையே, பிற உடலுறுப்புகள், மற்றும் ரத்த விற்பனையைப் போல, தாய்ப்பால் விற்பனையையும் சட்டவிரோதமாக்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், அதனால் தாய்ப்பால் ஏற்றுமதிக்கு தாற்காலிகத் தடை விதித்துள்ளதாகவும் கம்போடிய அரசு அறிவித்திருந்த நிலையில் கம்போடிய அரசு தாய்பால் ஏற்றுமதிக்கு முற்றிலும் தடை விதித்துள்ளது. மேலும் கம்போடிய அரசு தனது அறிக்கையில் கம்போடியா ஏழை நாடு என்றாலும், பல இன்னல்களை சந்தித்து வந்தாலும் தாய்ப்பாலை விற்க வேண்டிய சூழலில் இல்லை என்று தெரிவித்துள்ளது. கம்போடிய அரசின் இந்த நடவடிக்கைக்கு பெண்ணுரிமை அமைப்புகள் மற்றும் குழந்தை நலம் சார்ந்த அமைப்புகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!