ஆப்பிள் நாயகன் ஸ்டீவ் ஜாப்ஸ் – நினைவஞ்சலி!

ன்று உங்களிடம் ஒரு ஆப்பிள் போன் இருந்தால் இந்த சமூகத்தில் ஒரு பெரிய அந்தஸ்து கிடைக்கும், ஆப்பிள் கணிணியை உங்களுக்கு உபயோகப்படுத்த தெரிந்தாலே நீங்கள் அதி புத்திசாலி இப்படியாக ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் ஒரு மனிதனிற்கான அடையாளத்தை பெற்று தருகிறது. காரணம் அதன் தரம், விலை மற்றும் வடிவமைப்பு. இப்படி உலகம் முழுவதும் வெற்றி கொடி வீசி தனக்கென ஒரு பாதையை வடிவமைத்து அதில் பல வாடிக்கையாளர்களை தக்க வைத்திருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் தந்தைதான் ஸ்டீவ் ஜாப்ஸ். 56 வயதில் அவர் இறந்த போது அவர் சொத்துமதிப்பு 2,12,000 கோடி ரூபாய். இப்படி உலகையே வாய்பிளக்க வைத்த, பல வெற்றிகளுக்கு சொந்தக் காரரான ஸ்டீவ் ஜாப்ஸ் சந்தித்த சறுக்கல்கள் எத்தனை தெரியுமா?

இரண்டு காதலர்கள் கல்லூரியில் கற்றுக் கொண்டிருக்கும்போது ஒருவரை ஒருவர் காதலித்து அதன் பின்னர் உறவில் ஈடுபட்டு பிள்ளையையும் பெற்று எடுக்கின்றனர். திருமணத்துக்கு முன்னரே பிள்ளை பெற்று விட்டதால் அந்தப் பிள்ளையை அனாதை ஆசிரமத்தில் விட்டு விடுவதாக இருவரும் முடிவு செய்து அனாதை ஆசிரமம் ஒன்றில் பிள்ளையை கொடுத்து, இந்தப் பிள்ளையை நன்றாக கல்வி கற்ற, செல்வந்த தம்பதிகளுக்கு மட்டுமே தத்து கொடுக்குமாறு ஒப்பந்தமும் செய்து கொள்கின்றனர்.

அவர்கள் சொன்னபடியே நன்றாக கல்விகற்ற, செல்வந்த தம்பதிகள் அந்தப் பிள்ளையை தத்தெடுக்க வந்தனர். ஆனால் பிள்ளையைப் பார்த்து விட்டு நாங்கள் தத்தெடுக்க நினைத்ததோ பெண் குழந்தை. ஆனால் இதுவோ! ஆண் குழந்தை என குழந்தையை தத்தெடுப்பதற்கு மறுத்துவிட்டனர். அதன்பிறகு சில நாட்கள் கழித்து வேறு தம்பதியினர் இந்த ஆண் குழந்தையை தத்தெடுக்க வந்தாலும் அவர்கள் நடுத்தரக் குடும்பம் மற்றும் நன்றாக கல்வி கற்காதவர்கள் என்பதால் அந்தக் குழந்தையின் உண்மையான பெற்றோர் மறுத்து விட்டனர்.

ஆனால் இந்த ஏழைத் தம்பதியினர் இந்த குழந்தையை நாங்கள் நன்றாக படிக்க வைப்போம் என வாக்குறுதியளித்து தத்தெடுகின்றனர். அவ்வாறு ஏழைத் தம்பதியினர் தத்தெடுத்த பிள்ளைதான் Steve Jobs. இவ்வாறு தன்னை பெற்றெடுத்த பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டு தன்னை பெறாத ஏழை பெற்றோரிடம் இருந்து தொடங்குகிறது Steve Jobs இன் வாழ்க்கை.

ஆனாலும் ஏழ்மையின் காரணமாக கல்லூரிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டவர். இந்தியாவுக்கு வந்து இமயமலைக்கு சென்று, இறைவனைத் தேடிய ஃபிளாஷ்பேக் எல்லாம் கூட ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு உண்டு. முதன்முதலில் ஸ்டீவ் ஆப்பிளைத் தொடங்கியது சிலிக்கான் வேலியின் பிரம்மாண்ட தொழிற்சாலையில் அல்ல. அவர் வீட்டு கார் ஷெட்டில்தான். ஆப்பிள் கணினிகளை வெற்றிகரமாக விற்பனை செய்த வரலாறு மட்டுமல்ல. அதே ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து, தோல்விகளுக்கு குற்றம் சாட்டப்பட்டு துரத்தப்பட்ட வரலாறும் இவருக்கு உண்டு.

அசரவில்லை மனிதர். உடனே நெக்ஸ்ட் என்னும் கணினி நிறுவனத்தை துவங்கினார். பிக்சர் என்னும் கிராபிக்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கினார். இரண்டுமே வெற்றிகரமாக அமைந்தது. ஜாப்ஸை வெளியேற்றிய ஆப்பிள், அவரின் நெக்ஸ்ட் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. மீண்டும் தனது தாய்க் கழகத்துக்குள் வந்து சேர்ந்தார் ஜாப்ஸ். அதன் பின் நடந்தது அனைத்தும் வரலாறு. “நீங்கள் எத்தனை விஷயங்களை செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. அதனை எப்படி செய்கிறீர்கள் என்பதே முக்கியம்” என்பது ஜாப்ஸ் உதிர்த்த வார்த்தைகள்.

இப்பேர்பட்டவருக்கு புற்றுநோய் தாக்கியது தெரிந்து. சில முறை சிகிச்சை மேற்கொண்டார். கல்லீரல் மாற்று அறுவையும் செய்து கொண்டார்.ஆனாலும் கடந்த பிப்ரவரியிலேயே அவருக்குத் தனது இறுதி நாட்கள் தெரிந்துவிட்டன. தனது நாட்கள் எண்ணப்படுவது தெரிந்ததும், மிக நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் விஷயத்தைச் சொல்லிவிட்டார். அந்த நண்பர்கள் மூலம் இன்னும் பலருக்கும் தகவல் பரவ, அடுத்து வந்த நாட்களில் தினசரி நண்பர்கள் அவரது இல்லத்துக்கு வருகை தர ஆரம்பித்துவிட்டார்கள்.குறிப்பாக அவர் தனது ராஜினாமாவை அறிவித்த நாளிலிருந்து ஏராளமான நண்பர்கள் வர ஆரம்பித்துவிட்டனராம். ஸ்டீவுடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அவருக்கு பிரியா விடை கொடுத்துச் சென்றவண்ணம் இருந்தனராம் இந்த நண்பர்கள். தான் வாழும் காலத்திலேயே எல்லாருக்கும் நல்ல முறையில் குட்பை சொன்ன திருப்தி ஸ்டீவுக்கு. வருகிற நண்பர்களை வரவேற்று, நன்றி சொல்லி அனுப்பக் கூட முடியாத அளவுக்கு களைத்துப் போனாராம் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லூரென். இறுதி நாள் நெருங்க நெருங்க, தன் வீட்டில் நடமாடக்கூட முடியாத அளவுக்கு மெலிந்து பலவீனமாகிவிட்டாராம் ஸ்டீவ் ஜாப்ஸ்.

ஆனாலும் யார் யாருக்கெல்லாம் தன் இறுதிப் பயணம் குறித்த சொல்லி விடைபெற வேண்டும் என்பதை மனதுக்குள் ஒரு லிஸ்ட் போட்டுக் கொண்டாராம். தனது நெருங்கிய நண்பரும் உடல்நல ஆலோசகருமான டீன் ஆர்னிஷை ஒரு நாள் இரவு உணவுக்கு அழைத்து விருந்து கொடுத்தாராம். தனது மற்றொரு நண்பரும் வென்சர் கேபிடலிஸ்டுமான ஜான் டோர், ஆப்பிள் போர்டு உறுப்பினர் பில் கேம்ப்பெல், டிஸ்னி நிறுவன தலைமை நிர்வாக ராபர்ட் ஏ ஐகர் என ஒவ்வொரு நாளும் ஒருவரை அழைத்து தன் மனதிலிருப்பதைப் பகிர்ந்து கொண்டுள்ளார். ஆப்பிள் ஐஃபோனின் லேட்டஸ்ட் பதிப்பான 4 எஸ் மாடலை வடிவமைத்தவர்கள், நிர்வாகிகளையும் அழைத்து அதை எப்படி அறிமுகப்படுத்த வேண்டும் என கடைசியாக அறிவுரைகள் தந்துள்ளார். ஆனாலும் தனது பெரும்பாலான நேரத்தை தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் செலழித்துள்ளார். தனது வாழ்க்கை வரலாற்றை எழுத வால்டர் ஜஸாக்ஸன் என்பவரையும் பணித்திருக்கிறார்.

Steve Jobs தன் இறப்புக்கு முன்னரான உரை ஒன்றில் பின்வருமாறு கூறினார். “எனக்கு கணையப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இந்நோயை குணப்படுத்த முடியாது. நீங்கள் மூன்று நாட்களோ அல்லது ஆறு மாதங்களோ தான் உயிர் வாழ்வீர்கள் என்று என்னுடைய மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் நான் இன்று நலமாக இருக்கிறேன். எனினும் என்னுடைய இறுதி நாட்கள் எனக்கு தெரிகின்றது. ஆகவே நமக்கு கொடுக்கப்பட்ட நேரமானது மிக மிகக் குறைவு. அதை வீணாக்காதீர்கள். மற்றவர்கள் கூறிய கருத்துக்களை வேதவாக்காகக் கொண்டு உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்காதீர்கள். உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். பசியோடு இருங்கள்; புதிய சிந்தனையோடு வாழுங்கள்” என தன் உரையை முடித்துக்கொண்டார்.

அவரது இறுதி நாட்கள் குறித்து டாக்டர் ஆர்னிஷ் கூறுகையில், “ஸ்டீவ் ஒரு நிமிடத்தைக் கூட வீணடித்ததில்லை. காரணம் ஏற்கெனவே அவரது வாழ்நாளின் முடிவு தெரிந்து விட்டதால், தனக்கு வேண்டாத ஒரு விஷயத்திலும் மனதைச் செலுத்தியதில்லை. கடைசி நாள் வரை, தன் வாழ்க்கை தனது கட்டுப்பாட்டில் இருக்கும்படியும், தான் செய்ய விரும்பியதைச் செய்து முடிக்கும் வகையிலும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்,” என்கிறார். ஸ்டீவ் ஜாப்ஸ் கேன்சரில் பாதிக்கப்பட்டு, விடுமுறையில் இருந்தபோது, அவருக்கு பல விருதுகள் மற்றும் பாராட்டு விழாக்களுக்கு ஏற்பாடு செய்து அழைத்துள்ளனர். ஆனால் அவை எதையும் ஏற்க மறுத்துவிட்டாராம் ஸ்டீவ். நண்பர்கள் தொடர்ந்து அவரைப் பார்த்து வந்தாலும், இறுதி வாரங்களில் ஸ்டீவ் ஜாப்ஸின் வீடு முழுக்க செக்யூரிட்டிகள் மயமாக இருந்ததாம். கேட் பூட்டப்பட்டு, எப்போதும் இரு கறுப்பு நிற சொகுசு வாகனங்கள் தயாராக இருந்தன. வேறு யாராலும் அவரைப் பார்க்க முடியவில்லை. ஆனால் ஒரு வியாழனன்று கேட் திறக்கப்பட்டு வாகனங்கள் அகற்றப்பட்டன. அந்த இடம் முழுக்க மலர்கள், ஒரு வாய் கடிக்கப்பட்ட ஆப்பிள்கள், மலர் வளையங்கள் என நிரம்ப ஆரம்பித்துவிட்டன!

ஆம்,,, ஆனால், இதே அக்டோபர் 5, 2011 அன்று இறந்தபோது அவர் சொன்ன இறுதி வார்த்தைகளான “Oh wow, oh wow, oh wow” என்பது இன்றுவரை புதிராகவே உள்ளது என்பது தனி எபிசோட்!