பத்தாம் வகுப்பு ரிசல்ட் வரும் 10ம் தேதி வெளியாகப் போகுது!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வரும் 10 தேதியன்று வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது.
இதனால் மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு, பொதுத்தேர்வு, செமஸ்டர் தேர்வு என அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டதுடன், ஒரு சில தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே, தமிழகத்தில் 10 வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்வதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். மேலும், அரையாண்டு, காலாண்டு தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்கள் மற்றும் வருகைப் பதிவேடு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான முடிவுகள் வரும் 10 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என பள்ளிகல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தேர்வு முடிவுகள் இணையதளங்களின் வாயிலாக வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிகளில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன்கள் எண்களுக்கு எஸ்,எம்.எஸ் வாயிலாக மதிப்பெண் பட்டியல் அனுப்பி வைக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது.
தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in, மற்றும் www,dge2.tn.nic.in வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண் தொடர்பான குறைகள் இருந்தால் பள்ளிகளில் கொடுக்கப்படும் குறைதீர் படிவங்கள் பெற்று அதன் மூலன் விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.