October 24, 2021

அரசுப் போக்குவரத்து துறை கையாலாகாத்தனமும், அலட்சியப் போக்கும்!

2 008 இறுதி மற்றும் 2009 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் சென்னை மாநகருக்குள் 30 ஏசி வால்வோ பேருந்துகளை மாநகர நிர்வாகம் அறிமுகப்படுத்தி யது. ஒரு வால்வோ ஏசி பேருந்தின் அன்றைய விலை 80 இலட்சம் மற்றும் நுழைவு வரி 10 இலட்சம் ரூபாய் செலுத்தி பயணிகள் வசதியாக செல்ல இந்த பேருந்துகள் விடப்பட்டன. இதனை பயணிகள் அதிகம் பயன்படுத்தியதால் நாளடைவில் இந்த பேருந்துகள் 100 எனும் இலக்கை எட்டி நகர் முழுவதும் உள்ள முக்கிய டிப்போக்களிலிருந்து இயக்கப்பட்டது. இந்த பேருந்தில் பணிபுரியும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு வேறு விதமான சீருடைகள் மற்றும் காலணிகள் வழங்கப்பட்டது.
கட்டணம் சாதாரண கட்டணத்தை விட இரண்டு மடங்கு கூடுதல் என்றாலும் சுற்றுப்புற சூழல் பாதிப்பின்றி சென்னை நகரில் பயணிக்க இந்த ப‍ேருந்துகளை பெரும்பாலானோர் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

இந்த வகையான பேருந்துகளுக்கு நகரில் நல்ல வரவேற்பும் இருந்தது. எந்த ஏசி ப‍ேருந்தும் காலியாகப் போனது இல்லை. நல்ல வசூலையும் இந்த பேருந்துகள் நிர்வாகத்திற்கு கொடுத்தது. சமீப காலங்களாக இந்த பேருந்துகள் முறையான பராமரிப்பு இல்லாமல் போனதாலும், உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு ஆகும் செலவு அதிகம் என்பதாலும் பல வால்வோ பேருந்துகள் பழுதடைந்து டிப்போக்களில் அனாதையாக நின்றுகொண்டிருக்கின்றது.

தற்போது சென்னை நகரில் ஓடும் ஏசி வால்வோ பேருந்துகளின் மொத்த எண்ணிக்கையே 40 ஐ தாண்டாது போலிருக்கின்றது. அப்படி ஓடிக்கொண்டு இருக்கும் பேருந்துகளும் எப்போது நடுவழியில் பழுதாகி நின்றுவிடுமோ என்று எண்ணுமளவிற்கு அதன் பராமரிப்பு படு மோசமாக உள்ளது. 2009 க்கு பின்னர் இந்த வால்வோ ஏசி பேருந்துகளை புதிதாக வாங்கி விடுவதற்கு மாநகர நிர்வாகம் முன் வரவில்லை.

இதுல கொடுமை என்னென்னா சின்ன சின்ன பழுதுகள் அடைந்தாலும் அதற்கு உதிரி பாகங்கள் வாங்க பணமில்லாமல் போவதால் ஏற்கெனவே பழுதாகி டிப்போக்களில் நிறுத்திவைக்கப் பட்டிருக்கும் சாதாரண ப‍ேருந்துகளில் இருந்து சில உதிரி பாகங்களை கழட்டி வேறு பழுதாகி நிற்கும் பேருந்துகளுக்கு மாற்றி அனுப்புகின்றார்களாம். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அந்த பேருந்துகளில் உள்ள உதிரிபாகங்கள் கழற்றப்பட்டு நாளடைவில் அதுபோன்ற பேருந்துகள் எலும்புக்கூடாக மாறிவிடுகின்றதாம். பின்னர் அவற்றினை ஸ்கிராப்புக்கு அனுப்பிவிடுகின்ற னராம்..

ஆனால் இந்த வால்வோ பேருந்துகளின் இன்ஜினில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய மாநகரப்பேருந்து நிர்வாகத்தில் அனுபவம் வாய்ந்த மெக்கானிக்குகள் இல்லாமலிருப்பதால் இந்த பேருந்துகள் நின்றுபோனால் அத்தோடு அதனை ஓரம் கட்டி விடுகின்றார்கள்.. முறையான பராமரிப்பின்றிப்போனதால் நிர்வாகத்திற்கு எவ்வளவு கோடிகள் நஷ்டம். நிர்வாகத்தில் ஊழல்கள், சீர்கேடுகள். அதிகாரிகளின் அலட்சியப்போக்கு. இவைகள் தான் இத்தனைக்கும் காரணம்.. தனியார் சார்பில் நூற்றுக்கணக்கான வால்வோ ஏசி பேருந்துகள் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களுக்கு இயக்கி நல்ல லாபம் பார்க்கின்றன. வருடத்தில் புதிது புதிதாக பேருந்துகளை வாங்கிக் கொண்டே செல்கின்றனர். நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஒவ்வொரு நிறுவனத்திடமும் இருந்தாலும் முறையான பராமரிப்பினை அவர்களால் மட்டும் எப்படி செய்ய முடிகின்றது? அங்கே பணிபுரியும் ஓட்டுனர்களுக்கு அதிகப்படியான சம்பளத்தை வழங்குகின்றனர்.

அரசு சார்ந்த பேருந்துகளின் ஒவ்வொரு டிப்போவினையும் ஐஏஎஸ் கேட்டகிரியில் உள்ள ஒரு அதிகாரியை நியமித்து அத்தனை விஷயங்களையும் அந்த அதிகாரியால் கண்காணிக்க ப்படவேண்டும். எல்லாவற்றிற்கும் அவர்தான் பொறுப்பேற்க வேண்டும். நிர்வாகத்தில் மாற்றம் கொண்டுவராமல் போனால் இன்னமும் போக்குவரத்துக்கழகங்கள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்.

ரூட்டில் ஓடி ட்ரிப் முடிந்து டிப்போவிற்கு செல்லும் பேருந்துகளை துடைத்து கழுவ ஊழியர்கள் இருந்தும் அவற்றை செய்வதற்கு அவர்கள் தயாராக இல்லை. இவர்களை கண்காணிக்க அதிகாரிகள் இருந்தும் கேள்விகள் கேட்பதில்லை. இந்த இலட்சணத்தில் சில ஊழியர்கள் ஆளும் கட்சி யூனியனில் சேர்ந்துகொண்டு பணிக்கு வராமலேயே சம்பளம் வாங்கிக்கொண்டு திரிகின்றனர்..8 மணி நேரம் சென்னை போன்ற பெருநகரங்களில் பேருந்தினை இயக்குவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயமல்ல. நடத்துனர்களும் பணியின் போது மற்றவர்கள் விடும் மூச்சுக்காற்றி னை சுவாசித்துக்கொண்டு வியர்வை வழியும் மக்க‍ளுக் கிடையே புகுந்தும் தங்கள் பணியினை செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கு நிர்வாகத்தில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் கோளாறினை சரி செய்யாமல் நஷ்டத்தில் இயங்குவதை காரணம் காட்டி சம்பளத்தை உயர்த்தாமல் நிலுவைத் தொகையையும் வழங்காமல் இருப்பது அரசின் கையாலாகா நிலையையே காட்டுகின்றது..

இதில் மிகப்பெரிய வேதனையான விஷயம் என்னென்னா 1970களில் அனைத்து வழித்தடங்களிலும் அரசுடமையாக்கப்பட்ட பேருந்துகள் இயங்க ஆரம்பித்து 2017 வரை எந்த போக்குவரத்துக் கழகங்களும் இலாபத்தை அரசுக்கு ஈட்டித்தரவே இல்லை என்றே ஆண்ட மற்றும் ஆளும்கட்சிகள் கூறிவருவதுதான் வியப்பின் உச்சம்..

உதயகுமார்