September 25, 2021

‘ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை! – ஸ்டாலின் பெருமிதம்!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவை தொடர்ந்த வழக்குகளில், முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 19 பேரை விடுதலை செய்து கடந்த டிசம்பர் 21-ந்தேதி சி.பி.ஐ. கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை சார்பில் நேற்றுமுன்தினம் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, சி.பி.ஐ. சார்பில் நேற்று டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதே சமயம் 2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பான 2ஜி – அவிழும் உண்மைகள் புத்தகத்தின் வெளியீடு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று (மார்ச் 21) மாலை நடைபெற்றது. திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிடத் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார். ‘இந்து’ என்.ராம், வைரமுத்து, சுப. வீரபாண்டியன் ஆகியோர் வழ்த்துரை வழங்கினர்.

இவ் விழாவில் பேசிய இந்து என்.ராம், ’2ஜி வழக்கில் எடுத்து கொண்ட சுறுசுறுப்பை வியாபம் ஊழல் வழக்கில் மத்திய அரசு காட்டவில்லை. ஊழலுக்கு எதிரான வழக்குகள் நம் நாட்டில் எப்படி நடக்கிறது. யார் மூலம் நடத்தப்படுகிறது என ஆராய்ந்தால் நாம் அதில் தத்துவ ஞானியாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. தங்களை எதிர்ப்பவர்களுக்கு அழுத்தம் தர மட்டுமே மத்திய அரசு சி.பி.ஐ, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது’என சொன்னார்.

கவிஞர்.வைரமுத்து, ‘திராவிட இயக்கத்தை அழிக்க ஊதி பெரிதாக்கியதே 2ஜி வழக்கு என்றும், ஆற்றின் நீரோட்டத்தில் குப்பைகளும், அழுக்குகளும் வந்து போகும், ஆனால் திராவிட இயக்கம் என்ற ஜீவநதி என்றும் அழியாது என தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ‘கீழே இருந்து மேல் செல்வார்கள். இந்த வழக்கைப் பொறுத்தவரை தற்போது உச்ச நீதிமன்றத்தில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு வந்துள்ளனர். மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் பொய் சொன்னார் என்று பதிவு செய்துள்ளது இந்த புத்தகத்தை தவிர வேறு எதுவும் இல்லை. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாலும் இனிமேல் அவர்கள் வெற்றி பெற முடியாது’ என்றவர் டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வளைதளங்களில் யாரோ ஒரு ராஜா கருத்தினை தெரிவிப்பதாக பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவை மறைமுகமாக விமர்சித்த அவர், இணையத்தையே அலைபேசியில் விரைவாக வர வழி வகை செய்தவர் இந்த ஆ.ராசா எனவும் தெரிவித்தார்.

பின்னர் பேசிய ஆ.ராசா ‘, 2ஜி அலைக்கற்றை ஊழல் ஆரம்பத்திலேயே என்னால் மறுக்கப்பட்டது. என்னை விசாரித்தவர்களுக்கு 2ஜி ஸ்பெக்டரம் என்றால் என்ன என தெரியவில்லை. அதை நான் விளக்கினாலும் 2ஜி என்றால் என்ன என்று அவர்களுக்கு புரியவில்லை. இறுதியில் நான் ஊழல் செய்ததாக கைது செய்தனர். நீதிமன்றத்தில் 15 முறை ஆஜராகி விளக்கம் அளித்தேன். நானே நீதிமன்ற மேடை ஏறி சொன்னால் மட்டுமே இதன் உண்மை வெளிவரும் என்பதற்காகவே வழக்கில் நானே வாதாடினேன். இதனை தவறாகக் கணித்துள்ளார் வினோத்ராய். இறுதியில் 2ஜி வழக்கில் ஊழல் செய்யப்படவில்லை என்று நிரூபணமானது. சி.பி.ஜ. தரப்பில் சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்காத காரணத்தால் இந்த வழக்கை யூகத்தின் அடிப்படையில் தாக்கல் செய்துள்ளதாக ஓ.பி.ஷைனி இவ்வழக்கின் தீர்ப்பினை வாசித்தார். அதன் அடிப்படையில், இந்த வழக்கில் என்னையும், கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்தனர். இதுவரை யாரும் நான் எழுதிய புத்தகத்திற்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்யவில்லை இதுவே என் புத்தகத்திற்கு கிடைத்த வெற்றி’ என அவர் கூறினார்.

பின்ன, பேச வந்த திமுக செயல் தலைவர் ‘ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை’ என்ற பாடலை பாடி தன் உரையை ஆரம்பித்தார். தொடர்ந்து பேசிய அவர், “திமுக மீது வேண்டும் என்றே திட்டமிட்டு புனையப்பட்ட ஒரு வழக்கு தான் 2ஜி வழக்கு. அந்த வழக்கில் இருந்து விடுதலை பெற்றிருக்கிறோம். இது திராவிட இயக்கத்துக்கு கிடைத்திருக்கிற விடுதலை. நீதித்துறைக்கு உள்ள சுதந்திரத்தை யாராலும் ஆட்டி பார்க்கவோ, அசைக்கவோ முடியாது என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு சாட்சியான தீர்ப்பாக உள்ளது.

16.5.2005ம்தேதியை ராசா மறந்து விடமுடியாது. பெரம்பலூரில் இருந்துவந்த ராசாவை கருணாநிதி மத்தியில் தொலை தொடர்பு துறை அமைச்சராக பொறுப்பேற்க வைத்தார். அதே நேரம் 14.10.2010 தேதியையும் ராசா மறந்திருக்க முடியாது. ஏனென்றால் அன்று தான் ராசாவை தலைவர் கருணாநிதி அழைத்து ஒரு கட்டளை பிறப்பிக்கிறார். அந்த கட்டளையை புன்முறுவலோடு ராசா ஏற்றுக் கொண்டு டெல்லிக்கு சென்று அன்று பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டு கம்பீரமாக வெளியில் வந்தார். 1999 முதல் தகவல் தொழில்நுட்ப துறையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை எந்த துறையில் எந்த முறையில் கையாண்டிருக்கிறார்களோ அந்த முறையை தான் ராசா கையாண்டிருக்கிறார். இருந்தாலும் அதையெல்லாம் மூடி மறைத்து அதை ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையில் நமது ராசாவை ராஜினாமா செய்தே தீர வேண்டும் என்று எல்லோரும் கூக்குரலிடும் நேரத்தில், அதையே காரணமாக வைத்து நாடாளுமன்றத்தை முடக்கி, நாடாளுமன்ற பணிகளை செய்ய விடாமல் தடுத்து அப்படிப்பட்ட சதி திட்டத்தை நிறைவேற்றி கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் கருணாநிதி, ‘நாடாளுமன்ற ஜனநாயகம் தான் நமக்கு முக்கியம். நான் உன்னை நம்புகிறேன்.

நீ ராஜினாமா செய். தம்பி உன் மீது யாருக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ. எனக்கு நம்பிக்கை இருக்கிறது’ என்றார்ராசாவை ராஜினாமா செய்ய சொல்லும் போதே கருணாநிதிக்கு தெரியும், இது புனையப்பட்ட வழக்கு. என் தம்பி நிரபராதி என்று நிரூபித்துவிட்டு வெளியில் வருவான் என்ற நம்பிக்கையில் சொன்னார். அவருக்கு ஆதரவாகத் தான் இந்த தீர்ப்பு வந்துள்ளது. இந்த வழக்கு புனையப்பட்ட நேரத்தில் பத்திரிகையாளர்கள் எந்த அளவுக்கு மிகைப்படுத்தி எழுதினீர்களோ அதுபோல் இன்று விடுதலை செய்யப்பட்டு வெளியில் வந்திருக்கிற நேரத்தில் அதுபற்றி நீங்கள் எழுத வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தேன். ஆனால் அத்தனை பேர் இன்றைக்கு பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தீர்ப்பு திராவிட இயக்கத்துக்கு கிடைத்திருக்கிற பெரிய வெற்றி.

திமுகவிடம் இந்த அமைச்சர் பொறுப்பு இருந்த வரையில் நாட்டின் மொத்த தொலைபேசி இணைப்பு 671.7 மில்லியனாக உயர்ந்தது. 5 ஆண்டுகளில் செய்ய வேண்டிய இலக்கை 2 ஆண்டுகளில் நிறைவேற்றி காட்டிய பெருமை ராசாவுக்கு உண்டு. தீர்ப்பு வெளிவந்த பிறகு இந்த புத்தகம் வெளிவந்துள்ளது. திமுக மீது சுமத்தப்பட்டுள்ள வீண் பழி முழுமையாக துடைத்தெறியப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் சரியான நிகழ்ச்சியாக இந்த விழா நடைபெறுகிறது”என்று அவர் தெரிவித்தார்