December 8, 2021

இலங்கை நாடாளுமன்றம் – இன்றைய அப்டேட் ரிப்போர்ட்!

இலங்கையில் தற்போதும் பிரதமராக பதவி வகிக்கும் ராஜபக்சே முதன் முறையாக டி.வி.யில் பேசினார். அப்போது அதிபர் சிறிசேனா நேர்மையான மற்றும் உண்மையான அரசை நடத்தி வருகிறார். ஆனால் இது இடைக்கால அரசுதான். எனவே நிலையான அரசு அமைய வேண்டியது அவசியம். ஆகவே பாராளுமன்றத்தை கலைத்து விட்டு மீண்டும் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும்” என்றார். அதே சமயம் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக 122 எம்பிக்கள் இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளனர்.

அன்றாடம் ஒரு அரசியல் அவலக் காட்சி அரங்கேறும் இலங்கை நாடாளுமன்றம் வழக்கம் போல் நேற்று மீண்டும் கூடிய போது நாடாளுமன்றத்தை நடத்த சபாநாயகர் கரு ஜெயசூர்ய 12 பேர் கொண்ட தேர்வுக்குழு பட்டியலை வெளியிட்டார். அதில் அதிபர் சிறிசேனா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் 5 உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர்.

அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியில் 5 உறுப்பினர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனதா விமுக்தி பெரமுனா ஆகியவற்றின் சார்பில் தலா ஒரு உறுப்பினர்களும் தேர்வுக் குழுவில் இடம் பெறுவார்கள் என சபாநாயகர் அறிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஜனதா விமுக்தி பெர முனாவும் ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால் தேர்வுக்குழுவிலும் விக்ரமசிங்கேயின் கை ஓங்கியது. இதை ஏற்றுக்கொள்ளாத ராஜபக்சே ஆதரவாளர்கள் சபாநாயகரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தேர்வுக்குழு நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக வாக்கெடுப்பு நடத்தும் படி ஜனதா விமுக்தி பெரமுனா எம்பி விஜிதா கேட்டுக்கொண்டதை அடுத்து வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. இதில் சபாநாயகரின் முடிவுக்கு ஆதரவாக 121 வாக்குகள் கிடைத்தன. ராஜபக்சேவுக்கு ஆதரவாக ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை. நாடாளுமன்றத்தில் 3ஆவது முறையாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் ராஜபக்சேவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

அதையடுத்து, நாடாளுமன்றத்தில் 3 முறை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பின்னரும், யாருடைய அதிகாரத்தின் பேரில் மகிந்த ராஜபக்சே பிரதமராக இருக்க முடியும் என்று 122 எம்பிக்கள் அவருக்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ராஜபக்சேவிற்கு, உச்சநீதிமன்றத்தில் க்வோ வாரண்ட்டோ மனு தாக்கல் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராஜபக்சேவின் அமைச்சரவை மற்றும் அரசாங்கத்தை எதிர்த்தும், சர்ச்சைக்குரிய முறையில் அவர் பிரதமராக நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடாளு மன்றத்தில் விவாதித்தனர்.

இதனிடையே அதிபர் சிறிசேனா வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது பிரதமர் பதவியில் ராஜபக்சேவை நியமித்தது ஏன் என விளக்கம் அளித்தார். அவர் கூறும்போது, “ரனில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியவுடன் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகிய 2 பேரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் பிரதமர் பதவி ஏற்க இருவரும் மறுத்து விட்டனர். எனவேதான் 3-வது நபரான மகிந்த ராஜபக்சேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.