October 17, 2021

சாதிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை! – சாய்ராம் காலேஜ் அசத்தல்!

பொறியியல் மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அனைத்து வகையிலும் தொடர்ந்து ஊக்கமளிக்கப்படும் என்று சாய் ராம் கல்லூரி நிர்வாகத்தின் தலைமை செயல் அதிகாரி திரு சாய் பிரகாஷ் லியோ முத்து தெரிவித்திருக்கிறார். சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி, தரமான பொறியியல் கல்வியை தருவதில் 20 வருடமாக முன்னிலையில் உள்ளது. இக்கல்லூரியின் சிறப்பு அம்சம் ஒவ்வொரு துறையும் தேசிய தர அங்கீகாரம் (NBA) பெற்றுள்ளது. இந்நிலையில்  கோ கார்ட் விளையாட்டில் ஒரு பிரிவான லூஸ்கார்ட் குழு போட்டியில் சாதனை புரிந்த மாணவர்களுக்கும், சூரிய சக்தியில் இயங்கும் வாகனங்கள் வடிவமைப்பு போட்டியில் பங்குகொண்ட மாணவர்களுக்கும், பாஜா என்றழைக்கப்படும் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், ஃபார்முலா கிரீன் 2017 என்ற பெயரில் கோவையில்நடைபெற்ற போட்டியில் பங்குபெற்று பாராட்டைப் பெற்ற மாணவர்களுக்கும், மொபைல் ஆப்ஸ் மற்றும் ஆப்பிள் வேர்ல்ட் டெவலப்பர் மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் மாணவருக்கும் தேவையான நிதி உதவியை வழங்கும் விழா சென்னையில் உள்ள கிரீன் பார்க் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

விழாவில் சாய்ராம் பொறியியல் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு சாய்பிரகாஷ் லியோ முத்து, கல்லூரியின் முதல்வர் முனைவர் திரு ஜெயக்குமார் மற்றும் துறைத்தலைவர்களும் பேராசிரியர்களும், ஊழியர்களும், அறிவியல் கண்டுபிடிப்பில் ஈடுபட்ட மாணவர்களும் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் பேசிய திரு சாய் பிரகாஷ் லியோ முத்து,‘ ‘ இன்றைய சூழலில் நீட் தேர்வு, ரேங்க் அடிப்படையிலான தேர்ச்சி மற்றும் மதிப்பெண் வெளியீடு பிளஸ் ஒன் படிக்கும் மாணவர்களுக்கு பொது தேர்வு என மாணவர்களும் பெற்றோர்களும் ஏராளமான குழப்பத்திற்கு ஆட்பட்டிருக்கும் நிலையில், சாய் ராம் கல்லூரியானது மதிப்பெண்களுடன் கல்லூரிக்குள் வந்த மாணவர்களை வாழ்க்கையில் எந்த சவால் வந்தாலும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் பக்குவம் மிகுந்த பொறுப்புள்ள மாணவர்களாகவும், அவர்களிடம் பொதிந்திருக்கும் அளவற்ற மனித வளத்தை ஆற்றொழுக்கத்துடன் தேச நலனின் அபிவிருத்திக்காக பயன்படுத்தும் வகையில் மாற்றியமைத்து மாணவர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்களின் நம்பிக்கையையும் பெற்று முன்னேறிக் கொண்டிருக்கிறது.இதை மெய்பிக்கும் வகையில் தான் சாய் ராம் கல்லூரியானது அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட சிறந்த பொறியியல் கல்லூரிகளுக்கான பட்டியலில் தொடர்ந்து பத்து கல்லூரிக்குள் ஓரிடத்தை பெற முடிந்திருக்கிறது.

இன்றைய தேதியில் மைக்ரோசாப்ட்டையும், கூகுளையும் நடத்திக் கொண்டிருப்பவர்கள் தமிழர்கள். அதே போல இன்று யாரும் மாதா பிதா குரு தெய்வம் என்று குறிப்பிடுவதில்லை. அதற்கு மாற்றாக மாதா பிதா கூகுள் தெய்வம் என்று தான் குறிப்பிடுகிறார்கள். அந்தளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்திருக்கிறது. இதனால் இன்று மாணவர்களுக்கு வகுப்பறைக் கல்வி என்பது எரிச்சலையும் ஏமாற்றத்தையும் தரும் வகையில் அமைந்திருக்கிறது. அதனால் ஒவ்வொரு மாணவர்களும் ஏதேனும் ஒரு வகையில் சாதனை புரியவேண்டும் என்ற வேட்கையை மனதுள் விதைத்துக் கொள்கிறார்கள்.

அத்துடன் ஏராளமான நவீன தொழில்நுட்பங்களையும், புதிய புதிய வடிவிலான கண்டுபிடிப்புகளையும் கண்டறியவேண்டும் என்ற துடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். மாணவர்களின் இந்த உணர்வை துல்லியமாக உணர்ந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன் எங்களுடைய கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு கனவு காணுங்கள் என்ற சொல்லிய அப்துல்கலாம் பெயரில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டி ஒன்றை அறிமுகப்படுத்தி நடத்தினோம். அதில் நாங்கள் விவசாயம், நீர்நிலை பராமரிப்பு மற்றும் நீர் நிலை பயன்பாடு உள்ளிட்ட ஐந்து பிரிவுகளாக அந்த போட்டியை நடத்தினோம். நாங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு பல மாணவர்கள் தங்களின் திட்டவரைவை சமர்ப்பித்திருந்தனர்.

நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இணைய சமுதாயத்தில் நமக்கான தேவையில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கி ன்றன.  அதற்கேற்ற வகையிலான கண்டுபிடிப்புகளும் அவசியமாகின்றன. உதாரணத்திற்கு பின்லாந்து என்ற நாட்டின் அதிபர் அங்குள்ள மாணவர்களுக்கு அடுத்த தலைமுறைக்கான தேவையான பொருள்களைப் பற்றிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய உத்திகள் குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் ஏராளமான   விஞ்ஞானினிகள், அறிவியலா ளர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டது தான் கல்லூரி மாணவர்கள் வடிவமைப்பில் உருவான நோக்கியா போன். ஆனால் இன்றைய சூழலில் அந்த போனின் பயன்பாடும் மாறிவிட்டது என்றாலும் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தை அவை உணர்த்தின.

அந்த வகையில் சாய் ராம் கல்லூரியில் படித்த ஆடடோ மொபைல் துறை மாணவர்கள், இயந்திரவியல் மாணவர்கள், இயந்திரவியல் மற்றும் மின்னியல் மாணவர்கள், உற்பத்தி பொறியியல் மாணவர்கள், மின்னணுவியல் மற்றும் கருவியியல் மாணவர்கள், கருவிகள் மற்றும் கட்டுப்பாட்டியியல் மாணவர்கள்,கணினி அறிவியல் மாணவர்கள் என பல்துறையில் படித்த மாணவர்கள் குழுவாக பணியாற்றி தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு சாதனைகளைச் செய்து கல்லூரிக்குப் பெருமை தேடித்தந்திருக்கிறார்கள். அதிலும் கணினி அறிவியில் பிரிவில் படித்துக் கொண்டிருக்கும் ராகுல் என்ற மாணவர்ஃபேஸ்புக், போகிமொன் கோ போன்றவற்றில் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி சாதனைகளை செய்திருக்கிறார்.
உலகளவில் பிரபலமான ஆப்பிள் என்ற நிறுவனம் உலகளவில் நடத்தும் ஆப்பிள் வேர்ல்ட் டெவலப்பர் மாநாட்டில் கலந்து கொள்ளும் 350மாணவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ராகுலுக்கு சாய் ராம் கல்லூரி சார்பாக விமான பயணக்கட்டணத்திற்கான நிதி உதவியை அளித்திருக்கிறது. அதே போல் வேறு பிரிவில் சாதிக்கவிருக்கும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் தேவையான நிதி உதவி மற்றும் ஏனைய வசதிகளை கல்லூரி நிர்வாகம் மனமுவந்து செய்து தருவதில் பெருமையடைகிறது. அத்துடன் இது போன்ற கண்டுபிடிப்புகளுக்கு சாய் ராம் கல்லூரி தொடர்ந்து அனைத்து வகையிலான உதவியைச் செய்யும் என்று உறுதியுடன் கூறுகிறேன்.

இன்றைய சூழலில் மாணவர்கள் தோல்வி என்ற ஒன்றைப்பற்றி பேசவே தயங்குகிறார்கள். தோல்வி ஏற்பட்டால்அதை தாங்கிக் கொள்ளும் பக்குவமில்லாமல் தான் வளர்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஏற்கனவே சாதித்த சாதனையாளர்கள் எல்லோரும் தோல்வியைக் கண்டு துவளாதவர்கள் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.நேர்மறையான எண்ணங்க ளுடனும், புதிய கண்டுபிடிப்புகளுக்கான உத்வேகத்துடன் மாணவ வாழ்க்கையை எதிர்கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். “என்றார்.

இதனைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் முனைவர் திரு ஜெயக்குமார் பேசும் போது, ” எங்களுடைய கல்லூரியில் படிக்கும் ஒவ்வொரு மாணவர்களின் முன்னேற்றத்தையும், கண்டு பிடிப்பையும் நாங்கள் முதலில் அங்கீகரிக்கிறோம். அத்துடன் அவர்களுக்கு தேவையான உந்துசக்தியைத் தொடர்ந்து அளிக்கிறோம்.அதே போல் தங்களது புதிய கண்டுபிடிப்புகளால் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பாராட்டு பெற்றிருக்கும் எங்களுடைய மாணவர்களை மனதார பாராட்டுகிறேன். அவர்களின் சாதனைக்குத் தேவையான அனைத்திற்கும் எங்களாலான உதவிகளை தொடர்ந்து செய்வோம் ’ என்று குறிப்பிட்டார். பின்னர் மாணவர்கள் கண்டுபிடித்து தயாரித்த கோ கார்ட் மற்றும் ஏனைய கண்டுபிடிப்புகளை அங்கு கூடியிருந்தவர்கள் பார்த்து,வியந்து மாணவர்களை பாராட்டினர்.