March 26, 2023

ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ்! – புண்ணிய பூமிகளில் 16 நாட்கள் வலம்! – முழு விபரம்!!

புகழ்வாய்ந்த இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் என்ற ரயில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. சிறப்பு சுற்றுலா ரயிலான இந்த ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் டெல்லியின் சஃப்தார்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து தனது முதல் பயணத்தைத் தொடங்கியுள்ளது. டெல்லியில் தொடங்கி தமிழகத்தின் ராமேஸ்வரம் வரையில் ராமாயணம் தொடர்புடைய பகுதிகளை எல்லாம் 16 நாள்களில் இந்த ரயில் வலம் வரும் எனக் கூறப்படுகிறது. நேற்று முதல் நாளில் இந்த சிறப்பு சுற்றுலா ரயில் 800 பயணிகளுடன் தனது முதல் பயணத்தைத் தொடங்கியுள்ளது.

’நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்’ என்னும் கருத்தைப் பாரதிதாசன் தமது குடும்ப விளக்கு என்னும் நூலின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் குடும்பம் தான் மனித நாகரீகத்தின் அடிப்படையாக இருக்கிறது. குடும்பம் என்பது சரியாக இயங்கும் போது தான் சமூகமும், நாடும் தொய்வின்றி இனிமையாக இருக்கும். அப்படி ஒரு ஆணும் பெண்ணும் கணவனும் மனைவியுமாக எப்படி வாழ வேண்டும் என்று உலகுக்கு எடுத்துரைத்த பெருங்காப்பியம் தான் ராமாயணம் ஆகும். திருமணமான தம்பதியரை ராமனும், சீதையும் போல வாழுங்கள் என்று பெரியோர் ஆசிர்வதிப்பதை இன்றும் நம் வீடுகளில் காணலாம். இதோடு மட்டுமில்லாமல் சகோதரத்துவத்தின் எடுத்துக்காட்டாக திகழ்ந்த லக்ஷ்மணன், நட்பின் வடிவான அனுமன் என இந்த காப்பியத்தில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் அற்புதமாக படைக்கப்பட்டிருக்கும். வாருங்கள், இன்றும் அப்படியே இருக்கும் ராமாயணத்தில் வரும் சில முக்கியமான இடங்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோமா?

அயோத்தி :

ரகு வம்சத்தின் தவ புதல்வனான ஸ்ரீ ராமன் பிறந்த புண்ணிய பூமி தான் அயோத்தி ஆகும். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள இந்த அயோத்தி நகரமானது 9000 வருடங்களுக்கு முன்னாள் வேதத்தில் குறிப்பிடப்படும் முதல் மனிதரான ‘மனு’ என்பவரால் நிர்மாணிக்கப்பட்டதாக சொல்லப் படுகிறது. அயோத்தி : வால்மீகி ராமாயணத்தின் தொடக்கத்தில் அயோத்தி நகரை ‘கடவுளால் கட்டப்பட்டது போல தோற்றமளிக்கிறது, தேவலோகத்துக்கு நிகரான செழிப்பை கொண்டிருக்கிறது’ என்று வர்ணித்துள்ளார். கருட புராணத்தில் ஹிந்துக்களின் 7 புனித நகரங்களுள் (சப்தகிரி) ஒன்றாக அயோத்தியும் சொல்லப்பட்டுள்ளது. ராமனின் பிறப்பிடம் என்பதை தாண்டியும் ஏராளமான சிறப்புக்களை தன்னிடத்தே கொண்டிருக்கிறது அயோத்தி நகரம். ஜைன மதத்தை தோற்றுவித்த ரிஷிப தேவ முனிவர் மற்றும் அவரை தொடர்ந்து வந்த இரண்டு தீர்த்தங்கரர்கள் அயோத்தியில் பிறந்ததாக சொல்லப்படுவதால் ஜைனர்களுக்கும் புனித பூமியாக இந்நகரம் திகழ்கிறது.

நாசிக்:

ராமாயணத்தில் நிகழ்த்த முக்கியமான திருப்புமுனைகளில் ஒன்று சீதையை கொல்ல முயலும் இலங்கை மன்னன் ராவணின் தங்கையான சூற்பனகையின் மூக்கை ராமனின் சகோதரன் லக்ஷ்மணன் அறுத்தது தான். அது நடந்த இடம் தான் மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் ‘நாசிக்’ ஆகும். இராமாயண காலத்தில் நாசிக் நகரில் இருக்கும் பஞ்சவடி என்ற வனப் பகுதியில் தான் ராமன் தனது வனவாச காலத்தில் குடிலமைத்து வாழ்ந்து வந்திருக்கிறார். நாசிக்கில் ஏராளமான ஆன்மீக ஸ்தலங்கள் இருக்கின்றன. இங்கு வாழ்ந்த நாட்களில் ராமர் குளித்த இடமாக சொல்லப் படும் இடம் இன்றும் ‘ராம குண்டம்’ என பக்தர்களால் வணங்கப்படுகிறது. இங்குள்ள ‘கலராம்’ என்ற கோயிலில் கருப்பு நிறத்தில் ராமபிரான் அருள்பாலிக்கிறார்.

ஹம்பி :

கவர்ந்து செல்லப்பட்ட காதல் மனைவியை மீட்க தமையனின் துணையை மட்டுமே நம்பி தெற்கே லங்கையை நோக்கி வந்துகொண்டிருந்த ராமன் வானர சேனையை எதிர்கொண்ட இடம் கிஸ்கிந்தை ஆகும். இந்த கிஸ்கிந்தை கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி நகரை ஒட்டி அமைந்தி ருந்ததாக சொல்லப்படுகிறது. துங்கபத்திரை நதிக்கரையில் அமைந்திருக்கும் ஹம்பி ஒரு காலத்தில் உலகத்திலேயே மிகச் செழிப்பான நகரமாக இருந்திருக்கிறது. 15நூற்றாண்டில் விஜய நகர மன்னர்களின் பொற்கால ஆட்சியின் தலைநகராக இது திகழ்ந்திருக்கிறது. அவர்களின் ஆட்சி காலத்தில் கிஸ்கிந்தையும் ஹம்பி நகரின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. நாம் இன்றும் நினைத்து கூட பார்க்க முடியாத நாகரீக உச்சத்தை அடைந்த ஹம்பி நகரம் காலப்போக்கில் அழிந்து போய் இன்றும் மனிதர்களே வசிக்காத பகுதியாக இருக்கிறது. ஆனாலும் விஜயநகர பேரரசின் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் இன்றும் இருக்கின்றன. இங்கிருக்கும் ‘கற்தேர்’ விஜயநகர சிற்பிகளின் வல்லமைக்கு ஒரு சான்றாகும்.

ராமேஸ்வரம் :

இந்திய தேசத்தின் தென்கோடி முனையில் அமைந்திருக்கும் புண்ணிய ஸ்தலம் தான் ராமேஸ் வரம் ஆகும். கவர்ந்து செல்லப்பட்ட தனது மனைவியை மீட்க ராவணனுடன் போருக்கு செல்லும் முன்பாக ராமன் தனது படைவரிவாரங்களுடன் கூடாரம் அமைத்து தங்கிய இடம் தான் ராமேஸ் வரம். சீதையை மீட்க நடந்த யுத்தத்தில் பெரும் சிவ பக்தனான ராவணனை வதம் செய்த பாவத்தில் இருந்து மோட்சம் பெற சிவ பெருமானை வழிபட்ட இடம் தான் இப்போதிருக்கும் ராமலிங்க சுவாமி கோயிலாகும். இங்கே கருவறையில் இருக்கும் லிங்கமானது சீதையால் செய்யப்பட்டதாக நம்பப் படுகிறது. ஒவ்வொரு ஹிந்துவும் தனது வாழ்நாளில் ஒருமுறையேனும் காசிக்கும், ராமேஸ்வர திற்கும் சென்று வழிபட வேண்டும். இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் ராமலிங்க சுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் ஸ்நானம் செய்தால் நாம் செய்த பாவங்கள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே இருக்கிறது.

இப்படி ராமர் கடவுளோடு தொடர்புடைய புனிதத் தலங்களுக்குச் செல்லும் சிறப்பு ரயில் ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ்-தான் நேற்று புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்தியா மட்டுமின்றி இலங்கையில் முக்கிய இடங்களுக்கும் செல்லும் இப்பயணத்தின் கால அளவு மொத்தம் 16 நாட்கள். தங்கும் வசதிகளைக் கொண்ட ரயிலில் ஆர்வமுள்ள பயணிகள் காணப்பட்டனர். 16 நாள் நீண்ட பயணம் மேற்கொள்ளும் அவர்களை ரயில்வே பணியாளர்கள் வரவேற்றனர்.

இப்புனிதப் பயணம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொன்றும் தனித்தனியே இந்தியா மற்றும் இலங்கையில் பயணங்களை மேற்கொள்ளும். டெல்லியை விட்டு புறப்பட்ட உடன் முதல் இடமாக அயோத்திக்குச் செல்லும். அங்கு ஹனுமன் கார்கி ராம்கோட் மற்றும் கானக் பவான் கோயில் ஆகிய இடங்களைக் காணலாம். இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பயணத்தில் முன்னரே குறிப்பிடப்பட்ட ராமாயணம் சார்ந்த நந்திகிராம், சீதாமார்ஹி, ஜனக்பூர், வாரணாசி, பிரயாக், ஷிரிங்வெர்பூர், சித்ராகூட், நாஸிக், ஹம்பி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இடங்கள் முக்கியமாக இடம்பெறும்.

இப்புனிதச் சுற்றுலாவில் அனைத்து வகையான உணவுகள், துணிகளை துவைத்துக் கொள்ளவும் மாற்றிக் கொள்ளவும் வசதியாக ஆங்காங்கே உள்ள யாத்ரீகர்களுக்கான சத்திரங்களில் தங்கிச் செல்லவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகையான இடமாற்றங்கள், புனிதத் தலங்களைப் பார்வையிடுவதற்கான வசதிகளை ஆர்சிடிசியின் சுற்றுலா மேலாளர் உடனிருந்து ஏற்பாடுகள் செய்வார்.இச்சுற்றுலாவில் அனைத்து இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுடன் அவரும் பயணம் செய்கிறார். ராமாயண எக்ஸ்பிரஸ் ரயில் 800 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியது. இதற்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ.15,120.

இச்சுற்றுலாவின் அடுத்த பகுதி இலங்கை ஆகும். இதற்கு கட்டணம் தனியே செலுத்த பதிவு செய்துகொள்ளவேண்டும். ராமாயண யாத்திரையின் நிறைவுப் பகுதியாக அமையும். இதில் சென்னையிலிருந்து கொழும்புக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து இலங்கையில் உள்ள ராமாயணம் தொடர்பான இடங்களைப் பார்வையிட வேண்டும். இலங்கைப் பயணம் 5 இரவுகள்/6 பகல்களைக் கொண்டது. இதற்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ.36,970. இப்பயணத்தில் கண்டி, நுவரயேலியா, கொழும்பு மற்றும் நெகோம்போ ஆகிய இடங்கள் ராமாயண சுற்றுலாப் பயணிகள் காண்பதற்கான முக்கிய இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.