இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தற்போதும் சித்ரவதை?

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தற்போதும் சித்ரவதை?

இலங்கையில் தனி நாடு கேட்டு விடுதலைப்புலிகள் போராடி வந்தனர். இதனால் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் இடையே சுமார் 26 ஆண்டுகள் உள்நாட்டு போர் நடந்தது. கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சே விடுதலைப்புலிகளுக்கு எதிராக போரை அறிவித்தார். இதில் ராணுவத்தினர் விடுதலைப்புலிகளை அழித்தனர். இந்த போரில் அப்பாவி தமிழர்கள் ஈவு, இரக்கமின்றி கொல்லப்பட்டனர். பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர். சுமார் ஒரு லட்சம் பேர் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. இதனை ஏற்க இலங்கை தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில் இலங்கையில் தமிழர்கள் மீண்டும் ராணுவத்தினரால் சித்ரவதை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு சுமார் 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணுவம் மற்றும் போலீஸ் உடையணிந்த சிலர் இவர்களை கைது செய்து சென்றுள்ளனர். தனி அறையில் அடைத்து கொடூரமான முறையில் இவர்கள் சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். பலர் பலாத்காரமும் செய்யப்பட்டுள்ளனர். சிகரெட் சூடு, தலைகீழாக கட்டி தொங்க விடுதல், கம்பிகளால் தாக்குதல்… போன்ற கொடூர சித்ரவதையை கைது செய்யப்பட்டவர்கள் அனுபவித்துள்ளனர்.

இது குறித்து விசாரித்த போது இலங்கையில் மீண்டும் விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் துவங்க இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சமீபத்தில் தகவல் வெளியானது. இதனை ராணுவம் மறுத்து விட்டது. ஆனாலும் இலங்கையில் பாதிக்கப்பட்ட பலர் தற்போது பிரிட்டன் லண்டனில் தஞ்சமடைய முயற்சித்து வருகின்றனர். அதற்கான காரணம் கேட்கப்பட்ட போதுதான், தற்போது இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீண்டும் சித்ரவதை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாக துவங்கியுள்ளன. இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அதே நேரத்தில் தமிழர்களும் அச்சத்தில் உள்ளனர்.

தற்போதைய அரசு தமிழர்களை சித்ரவதை செய்து வருவதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது உண்மை அல்ல. தமிழர்களை மீண்டும் குடியமர்த்தும் திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழர்கள் சித்ரவதை செய்யப்படுவதை அரசு ஒரு போதும் சகித்து கொள்ளாது. இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடக்கவில்லை. தேவைப்பட்டால் எந்த அமைப்புகளை சேர்ந்தவர்களும் நேரடியாக வந்து விசாரணை நடத்தி கொள்ளலாம் என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!