இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் தஞ்சம்?
இலங்கையில் நிலவி வரும் கடும் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாத மக்கள், அந்நாட்டு அரசுக்கு எதிராக வெகுண்டு எழுந்தனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை, லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு உள்ளே புகுந்தனர். அதிபர் மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சிகள், கேரம் போர்டு விளையாடுவது, சோபாவில் படுத்து உறங்குவது, பிரம்மாண்ட பாத்திரத்தில் இரவு உணவு தயாரிப்பது போன்ற காட்சிகளும் வெளியானது
போராட்டக்காரர்கள் மாளிகைக்குள் நுழைவதற்கு முன், கடற்படை உதவியுடன் அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளியேறி, கடற்படைக்கு சொந்தமான இடத்தில் தங்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ராஜபக்சே தனது அதிபர் பதவியை ஜூலை 13ஆம் தேதி அன்று ராஜினாமா செய்வதாக முன்னர் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, ராஜினாமா கடிதத்தில் நேற்று முன்தினம் (ஜூலை 12) அவர் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறிய பின்னர், அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று இரண்டு ஹெலிகாப்டர்களில் அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர், கொழும்பு நகரில் உள்ள கட்டுநாயகா விமானப் படை தளத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து மாலத்தீவு தப்பி சென்று விட்டதாக உறுதி செய்யப்படாத தகவல் வெளியாகியது.