November 29, 2021

ராஜபக்‌ஷே-வுக்கு மெஜாரிட்டி இல்லாததால் தொடரும் குழப்பங்கள்!

தக்கணூண்டு நாடான இலங்கையில் ஏற்பட்டுள்ள  திடீர் அரசியல் மாற்றங்கள் மற்றும் குழப்பத் துக்கு முடிவு ஏற்படும் வகையில் இன்று அந்நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. முக்கியக் கட்சிகளின் 119 எம்.பி.க்கள் இன்று சபாநாயகர் கரு ஜெயசூரியா கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்டு, “நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்றும், ராஜபக்சேவை பிரதமராக நியமித்தது ஏற்க முடியாது என்றும் தீர்மானம் நிறைவேற்றி சபா நாயகரிடம் கொடுத்துள்ளார்கள். இந்தக் கூட்டத்தில் சிறிசேனா, ராஜபக்சே கட்சிகளின் எம்.பிக்கள் வரவில்லை. மேலும் ரனிலின் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜனதா விமுக்தி பெரமுனா ஆகிய கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொண்டன. இதில் ரனில் உள்ளிட்ட சில எம்பிக்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்களையும் சேர்த்தால் சுமார் 125 எம்.பிக்கள் உறுதியாக இருப்பார்கள் என்கின்றன கொழும்பு வட்டாரங்கள்.

இதன் மூலம் 225 எம்.பி.க்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு பெரும் பான்மை கிடைக்காது என்பதே தெளிவாகத் தெரிகிறது. இதையடுத்து தங்களது முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த ஆரம்பித்துவிட்டனர் ராஜபக்சேவின் ஆதரவு வட்டாரத்தினர்.

இன்று கலந்துகொண்ட எம்.பி.க்களின் தீர்மானத்தை அடுத்து வரும் நவம்பர் 7 ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடும் என்று அறிவித்திருக்கிறார் சபாநாயகர்.

இதே நிலை தொடரும் பட்சத்தில் நாடாளுமன்றத்தில் ரனில் பெரும்பான்மை பெறுவதும், ராஜபக்சே பெரும்பான்மை இழப்பதும் உறுதியாகியிருக்கும் நிலையில் தமிழ்த்  தே சிய  கூட்டமைப்பின் எம்.பி ஒருவரை திடீர் பிரதமர் மகிந்த ராஜபக்சே தரப்பு, தங்கள் பக்கம் வளைத்துவிட்டது. அவருக்கு அமைச்சர் பதவியையும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.