இலங்கையில் பள்ளிகள் நாளை முதல் இயங்க நடவடிக்கை!

இலங்கையில் கடந்த 21ம் தேதி ஈஸ்ட்ர் பண்டிகையன்று 9 தற்கொலை படையினர் மூன்று தேவாலயங்கள் மற்றும் 3 சொகுசு விடுதிகளில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்.ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இருப்பினும் உள்ளூர் இஸ்லாமிய அமைப்பான தேசிய தவுஹீத் ஜமாத்தை சேர்ந்தவர்கள் இந்த தற்கொலை தாக்குதலை நடத்தியதாக இலங்கை அரசு அறிவித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் அனைத்து பள்ளிகளும் காலவரையின்றி மூடப்பட்டன. இலங்கையில் தொடர்ந்து அச்சுறுத்தல் நீடித்ததால் இரண்டு வாரமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் நாளை முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும். 6ம் வகுப்பு முதல் 13ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நாளை முதல் வகுப்புகள் துவங்கும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13ம் தேதி முதல் பள்ளிகள் துவங்கும். மாணவர்களின் பாதுகாப்புக்காக இலங்கையின் முப்படைகள், காவல்துறை மற்றும் சிறப்பு பாதுகாப்பு படை இணைந்து சிறப்பு பாதுகாப்பு திட்டம் உருவாக்கியுள்ளன. இந்த சிறப்பு பாதுகாப்பு திட்டம் அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தப்படும் என இலங்கை கல்வி அமைச்சர் அகிலா விராஜ் காரியவசம் செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.

பள்ளிகளுக்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக இலங்கை கல்வி அமைச்சகம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி பள்ளிகள் அருகில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி வாகனங்கள் நிறுத்த தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொள்வார்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து 200 இஸ்லாமிய மதகுருக்கள் உட்பட 600 வெளிநாட்டினர் இலங்கையை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக இலங்கை உள்துறை அமைச்சர் வஜிரா அபேய்வர்த்தனா தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு இருக்கும் சூழ்நிலையில் வெளிநாட்டினர், அதிலும் குறிப்பாக மத குருமார்களுக்கான விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன் காரணமாக விசா காலம் முடிந்தும் நாட்டில் தங்கியிருந்த 200 இஸ்லாமிய மதகுருமார்கள் உட்பட 600 வெளிநாட்டினர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். கால அவகாசத்தை மீறி தங்கியதற்காக அவர்கள் அனைவருக்கும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் வஜிரா அபேய்வர்த்தனா செய்தியாளர்களிடம் கூறினார்.