இலங்கையில் பலத்தரப்பட்ட காரணங்களால் அவசர நிலை பிரகடனம்!!

லங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது. இத்னால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலை உயர்ந்து வருகின்றது. அதுமட்டுமல்லாமல் தினமும் 13 மணி நேரம் வரையில் அங்கு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் பொது போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் நேற்று முன்தினம் கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகை முன்பு 5 ஆயிரம் பேர் திரண்டனர். அவர் பதவி விலக வேண்டும் என்று கோஷங்கள் முழங்கி போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அதிபர் அறிவித்தார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

இலங்கை கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால் நாட்டின் 90% உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. விறகு அடுப்பினால் சமைக்கும் உணவகங்கள் மட்டுமே செயல்படுகின்றன. பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளன. பேக்கரி மற்றும் இனிபகங்களில் திண்பண்டங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு கிலோ சீரகம் 1899, பெரும் சீரகம் ரூ. 1500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பெரிய வெங்காயம் ரூ.400, முட்டை ஒன்றின் விலை ரூ,36,கோழி இறைச்சி விலை ரூ.1000 என்ற அளவில் விற்கப்படுகிறது. ஒரு கிலோ பால் பவுடர் ரூ.2000-க்கு விற்கப்படுகிறது. ஒரு கப் டீ 100 ரூபாய்க்கு விற்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் கடைகளில் பால், டீ விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் கச்சா எண்ணெய் வாங்க இலங்கை தவித்து வருகிறது. இதனால் டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயுக்கு பெரும் பற்றாக்குறையும் நிலவுகிறது. இதனால் கேஸ் சிலிண்டர் விலை 5000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.டீசல், பெட்ரோல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதுடன் அது கிடைக்கவும் இல்லை. வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் பெற நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இப்படி விலைவாசி உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்டவைகளை எதிர்த்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்ட வந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்.2) அதிபர் கோத்தபய ராஜபக்சே,அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார். மேலும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த 11 கூட்டணிக் கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும், அங்கு ஆட்சியைக் கலைத்துவிட்டு ஒரு காபந்து அரசை அமைக்க வேண்டும் என்று ஒரு அறிக்கையை கொடுத்திருந்தார்கள். இந்த கோரிக்கையைத் தொடர்ந்து, அவசர நிலை பிரகடன அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.