பிரதமராக ராஜபக்ச தொடர இடைக்காலத் தடை விதித்தது இலங்கை நீதிமன்றம்!

பிரதமராக ராஜபக்ச தொடர இடைக்காலத் தடை விதித்தது இலங்கை நீதிமன்றம்!

கடந்த இரு வாரங்களுக்கு முன் இலங்கை ஜனாதிபதியான மைத்திரி பால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள், அந்தப் பதவிகளை வகிப்பதற்கு கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டார். இதன்பின்னர் அமைச்சர்களும் தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டனர். பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிக்க சட்டரீதியான அங்கீகாரமில்லை எனத் தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதிப் பேராணை உத்தரவு கோரி இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு, கடந்த வௌ்ளிக்கிழமையன்று மறுபரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்று இரண்டாவது நாளாக, மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துகொண்ட நீதிமன்றம், தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் பொதுமக்களின் பணத்தைக் கொண்டு, அமைச்சரவை, அமைச்சர்கள் மற்றும் அவர்களது துறைகளுக்காக, நிதி ஒதுக்கீடு செய்யக்கூடாதென்று, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணை, 122 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற அமர்வு, டிசம்பர் 5ஆம் தேதி புதன்கிழமை வரை, சபாநாயகரால் ஒத்திவைக்கப்பட்டது.

Related Posts

error: Content is protected !!