September 25, 2021

ஸ்பைடர் திரை விமர்சனம்!

ஒவ்வொரு மனிதருக்கும் ஆதார் அட்டை முக்கியம் என்பது போல செல்போன் என்பதும் ஒவ்வொரு ஜீவனுக்கும் இம்பார்ட்டெண்ட் என்று ஆகி விட்ட காலமிது, அதிலும் ஆன்லைன் பயன்பாட்டில் ஒரு அப்பா அல்லது அம்மாவை விட குழந்தைகள் அறிந்து கொண்டது அதிகம் என்பது உங்களுக்கு புரியுமா?…ஆம் இன்றைய பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டியது எது? எந்த புரிதலும் இல்லாமலும் தான் சந்தைகளில் வரும் அனைத்து தொழில் நுட்ப சாதனங்களையும் வாங்கி தங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருக்கும் வாங்கிக் கொடுத்து சமுதாயத்தில் டெக்னாலஜியை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். அதே சமயம் நம் அக்கம் பக்கம் வீட்டில் உள்ள உறுப்பினர்கள் யார்? அவர்களுக்கும் நமக்குமான நெருக்கம் எம்புட்டு என்று யாராவது எப்போதாவது யோசித்து இருக்கிறோமா? அதைத்தான் இரண்டரை மணி நேரத்தில் நூறு கோடி செலவு செய்து படம் பார்க்க வரும் ஒவ்வொருவரும் உணருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் ஸ்பைடர் என்ற பெயரில் ஒரு சினிமா-வை கொடுத்து ஏமாற்றி உள்ளார் ஏஆர் முருகதாஸ்.

படத்தின் கதாநாயகன் மகேஷ்பாபு ஹைடெக் உலகையும் கண்காணிக்கு இன்டலிஜென்ட் பீரோவில் விரும்பி இணைகிறார். நாட்டின் தேசவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களின் உரையாடல்களை ஒட்டு கேட்டு மேல் அதிகாரிகளுக்கு சொல்லும் பணிதான் அவருடையது. ஆனால் சராசரி பொது மக்கள் பலரது பர்சனல் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டு அதில் யாராவது ஆபத்தில் இருந்தால் அவர்களுக்கு உதவி செய்யும் ஹீரோயிச வேலை செய்கிறார் .அச்சமய்ம் ஒரு பெண் ஆபத்தில் இருப்பதை உணர்ந்து உதவ முயன்று தன் போலீஸ் தோழியை உதவிக்கு அனுன்னிய நிலையில் அவர்கள் இருவரும் கொடூரமாக கொல்லப்படுவதில் அபசெட்டாகிறார்.

அப்பாலே என்ன? அந்த கொலைக்கு காரணமானவனைத் அவன் தேடி சொந்த ஊர் கண்டறிந்து செல்கிறார். அந்த வில்லன் அங்கிருந்த கிராமத்தில் ஒரு வெட்டியானின் மகன் என தெரிய வருகிறது. அவனது அண்ணன் எஸ்.ஜே.சூர்யா இவர்கள் இருவரும் குழந்தையில் இருந்து அடுத்தவர்கள் அழுவதை பார்த்து ஆனந்தம் அடையும் குணாதிசயம் உள்ளவர்களாம். ஒரு கட்டத்தில் ஊரில் இழவு விழாததால் கிராமத்தினரை கொன்று மகிழ்கின்றனர். இந்த விநோத மனநோய் அதிகரித்து, கூட்டம் கூட்டமாக மக்களைக் கொன்று அதில் ஆனந்தம் அடைய நினைக்கிறார் மெயின் வில்லன் எஸ்.ஜே. சூர்யா இதை கண்டறிந்த மகேஷ்பாபு சூர்யாவின் தம்பி கேரக்டரான் பரத்தை பொறி வைத்து பிடித்து பொது மக்கள் முன்னிலையில் ஷூட் செய்து கொல்கிறார். இதை நேரடியாக பார்க்கும் எஸ்.ஜே.சூர்யா டென்ஷனாகி மகேஷ்பாபுவை பழிவாங்க நினைக்கிறார். அவரிடமிருந்து நாயகன் எப்படி தப்பித்தார்? வில்லன் நோக்கம் என்ன? அதன் ரிசல்ட் என்ன என்பதுதான் ஸ்பைடர் என்று சொன்னால் நம்பி விட்டு எதிர் கேள்வி கேட்கப் படாது.

உண்மையிலேயே ரொம்ப புதுமையான ஹைடெக்கான கதைதான். அதே சமயம் இது நாள் வரையிலான தன் ஒவ்வொரு படத்திலும் நம்பகத்தன்மையான திரைக்கதையை கையாண்டிருந்த முருகதாஸ் இப்படத்தில் அதை எல்லாம் சட்டையே செய்யாமல் ஸ்பைடர் பார்க்க வருபவர்கள அத்தனை பேருக்கும் லாலி பாப் ஒன்றை தயார் செய்து கொடுத்து சப்ப சொல்லி உள்ளார். எக்கச்சக்கமான செலவில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் எடுக்கப்பட்டிருந்தாலும் இது ஒரு தெலுங்கு படம்தான் என்று காட்சிக்கு காட்சி வெளிப்படுத்தி உள்ளார். போலீஸ் கடைசி வரை தெலுங்கானா போலீஸ்தான்..ஆக, தெலுங்கில் டாப் கதாநாயகன் என்பதால் மகேஷ்பாபுவுக்கு பில்ட் அப் காண்பித்து புரமோட செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு தேவையற்ற கிராபிக்ஸ் காட்சிகளை வைத்து பல கோடிகளை வீணடித்து இருக்கிறார். இத்தனைக்கும் மனவாடு மகேஷ்பாபு தமிழில் கூட தனியாக இப்படத்தில் அறிமுகமாகி சொந்த குரலில் பேசி இருந்தாலும், கொல்டி படம் பார்த்த உணர்வுதான் ஒவ்வொரு பிரேமிலும் உள்ளது.

இதனிடையே தம்பி முருகதாஸ் படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இதில் வரும் ராகுல் ப்ரீத்தி சிங் வந்து செல்கிறார். ஆடுகிறார், பாடுகிறார். அம்புட்டுதேன். நிறைய பேசும் ஆர்.ஜே.பாலாஜிக்கு தனி ரோல் இருந்தாலும் காமெடிக்கு ரூட்டே போட வில்லை. ஆனால் வில்லனாக நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா ரியல் கதாநாயகன் ரேஞ்சில் தன் கேரக்டரை புரிந்து தன் வீட்டில் ரிகர்சல் எல்லாம் செய்து வந்து காட்டி இருப்பதால் தனிக் கவனம் பெறுகிறார். பரத் வேஸ்ட்.சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் காட்சிகளும், பாடல்களும் பளிச்சிடுகின்றன, ஹாரீஸ் ஜெயராஜ் மியூசிக் தியேட்டரில் கேட்கும் போது பிடித்த அளவுக்கு தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகு கவரவில்லை.

மேலும் பல சீரியஸான சீன்களை காமெடி காட்சிகளாக சித்தரித்த பெருமை முடுகதாஸூக்குதான் போய் சேரும். குறிப்பாக எஸ் ஜே சூர்யா இருக்கும் வீட்டை கண்டறிந்து அவைப் பிடிக்க குடும்ப பெண்கள் படை ஒன்றை தயார் செய்து அவர்கள் ஒவ்வொருவரையும் விஜய்சாந்தி ரேஞ்சில் ஆக்ஷன் செய்ய வைத்துள்ள போது தியேட்டரே காமெடியில் குலுங்குகிறது. அத்துடன் ரோலர் கோஸ்டர் சணடைக் காட்சியில் சரியான எடீடிங் இல்லாததால் சகலரும் போனில் வாட்ஸ் அப செக் அப் பண்ணும் நேரமாகி விட்டது. இன்னும் பல சொதப்பல்களை சொல்லலாம்தான்.. ஆனால் சாதனை செய்த இயக்குநர் இனி அந்த தவறுகளை செய்ய மாட்டார் என்று மட்டும் நம்பலாம்.

இதனிடையே ஆரம்பத்தில் சொன்னது மாதிரி சகலரும் ஹைடெக் உலகாகி போய் விட்ட வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் மட்டுமே வாழுவதை விட்டு விட்டு அக்கம் பக்கத்து மனிதர்களுடன் நேரில் பழகி அனபை உ?ண்மையாக பரிமாறிக் கொள்ளுங்கள் என்ற கிளைமேக்ஸ் வசனத்தை கேட்கக் கூட இல்லாமால் ஜனங்கள் தியேட்டரை விட்டு வருவதை இயக்குநர் கண்டால் கண்ணீர் சிந்துவார் என்பது மட்டும் நிச்சயம்!

மொத்தத்தில் முதல் பாதி ஒட்டியும் ஒட்டாமலும், 2-வது பாதி ஆமைத்தனமாகவும் நகர்கிறது. அதாவது முருகதாஸ் படம் மாதிரியும் இல்லாமல், மகேஷ்பாபு படம் மாதிரியும் இல்லாமல் ஸ்பைடர் நூல் லிங்க் இல்லாமல் அறுந்து தொங்குகிறது/

மார்க் 5 / 2. 25