December 8, 2022

ஸ்புட்னிக் வி தடுப்பூசியால் ஒமைக்ரான் வைரஸை எதிர்கொள்ளலாம் – ரஷ்யா உறுதி!

தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட‘ஒமைக்ரான்’ வைரஸ், 50 பிறழ்வுகளைக் கொண்டுள்ள உருமாறிய கொரோனா வைரசாக உள்ளது. இதனால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இந்த வைரஸ் பெல்ஜியம், இஸ்ரேல், ஹாங்காங்க், கனடா ஆகிய நாடுகளுக்கு ஏற்கனவே பரவி விட்டது. வீரிய கொரோனா ரகமான ஒமைக்ரான், ஏற்கெனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களை குறிவைத்து தாக்குகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகள், முந்தைய வகைகளை விட வேகமான பரவல், தற்போதைய தடுப்பூசிக்கு அடங்காதது என வெளியாகி வரும் பல்வேறு தகவல்களால் ஒமைக்ரான் வைரஸ் மீது கவலையை அதிகரித்துள்ளன. இந்த நிலையில் ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகள் ஒமிக்ரான் கொரோனா வகைக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்று ரஷ்ய சுகாதாரத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய சுகாதாரத்துறை, ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகள் ஒமைக்ரான் கொரோனா வகை வைரசை அழிக்கும் தன்மை கொண்டது. மேலும், கொரோனா வகை வைரசில், எத்தகைய திரிபுகள் ஏற்பட்டாலும், அவற்றை எதிர்கொள்ளும் திறன் வாய்ந்தவை ஸ்புட்னிக் தடுப்பூசி என்றும், தேவைப்பட்டால் லட்சக்கணக்கான பூஸ்டர் தடுப்பூசிகளை தயாரிக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

உலகிலேயே முதன்முதலில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த கொரோனா தடுப்பூசி ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ரஷ்யாவில் இந்த தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இதற்கு அனுமதி உள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசி 2 டோஸ்கள் கொண்டது. வலுவிழந்த வைரஸை உடலுக்குள் செலுத்தி அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி செல்சியசில் பராமரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.