October 27, 2021

தமிழ்த்திரைத் துறை சார்பில் நடந்த அறவழி போராட்டம்! – ஸ்பாட் ரிப்போர்ட்!

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் ,ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் தமிழ்த்திரைத் துறையினர் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மவுன அறவழி போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் நடிகர் ரஜினி, கமல்ஹாசன், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் மற்றும் திரைத்துறையை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். காலை 9 மணிக்கு தொடங்கிய இப்போராட்டம் மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது. இதையடுத்து மக்களின் அடிப்படைத் தேவைகளை பாதிக்கும் எந்தவொரு விசயத்தையும் அரசு செயல்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1 :

மக்களின் அடிப்படைத் தேவைகளை பாதிக்கக்கூடிய எந்தவொரு விசயத்தையும் அரசாங்கம் அமல்படுத்தக்கூடாது.

தீர்மானம் 2:

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழக விவசாயிகளுக்கான உரிமைகள் முறைப்படி கிடைக்க வேண்டுமென்று நாங்கள் கோருகிறோம்.

தீர்மானம் 3 :

நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கக்கூடிய காவிரி நதிநீர் பிரச்சனை தமிழக மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு அரசியலற்ற பொதுநோக்கத்துடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அதற்கு ஒரு நிரந்தர தீர்வை காண வேண்டுமென மத்திய அரசுகளை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

தீர்மானம் 4:

ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடும் அப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்த்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். மேலும் இவ்வளவு காலம் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கும், பாதிப்புகளுக்கும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை தமிழக திரைத்துறை சார்பாக வலியுறுத்துகிறோம்.

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் திரைத்துறையைச் சார்ந்த 25000 பேரின் கையொப்பமிட்ட மனுவை தமிழக ஆளுநரிடம் கொடுக்க உள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற இப்போராட்டத்தை நடிகர் சங்க தலைவர் நாசர் தொடங்கி வைத்தார். மவுன அறவழி போராட்டம் என்பதால் போராட்டத்தை தொடங்கி வைத்த நாசர் மட்டுமே தொடக்கவுரை நிகழ்த்தினார் . அப்போது பேசிய நாசர், “இந்தப் போராட்டத்தை துறை சார்ந்த அறிஞர்கள், தொடர்புடைய வல்லுநர்களை எல்லாம் அழைத்து வந்து ஒருநாள் முழுக்க மக்களுக்கான தேவை, தீர்வுகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் பேசவேண்டும் என்று திட்டமிட்டோம். ஆனால், அது ஈடேறவில்லை. இந்தக் குறுகிய காலகட்டத்தில், எங்களுக்கு கிடைத்த இந்தச் சிறிய இடத்தில் நடத்தும் இந்தக் கண்டனப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்த திரையுலகினருக்கு நன்றி.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் எல்லைகள் வகுத்த பிறகு, நீருக்கான இந்தப் பிரச்சினை பெரிதாக இருந்து வருகிறது. இறைவனுக்கு இணையான விஷயம்தான் தண்ணீர். எதிர்காலத்தில் மூன்றாம் உலகப்போர் வருமென்றால், அது தண்ணீருக்காகத்தான் வரும் என்கிறார்கள், வல்லுநர்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மக்களின் உரிமை. நேர்மையான தேவையும்கூட. அதேபோல ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது உள்ளிட்ட மக்களின் பிரச்சினைகளுக்கும் முக்கியத் தீர்வுகள் காணப்பட வேண்டும். இந்த விஷயத்தில், மக்களின் உரிமைக்குரலுக்கு மத்திய மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும். மக்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரும் என்று கருதுகிறவர்களே பாதிக்கப்பட உள்ளோம் என்பதைப் புரிந்து போராட்டம் செய்யும்போது, அதற்குத் தீர்வுகாண வேண்டும்.

சினிமா சார்ந்த பிரச்சினைகள் நெருக்கடியில் நாங்களும் தவித்துக் கொண்டிருக்கிறோம். அதுவும் கடந்த ஒரு மாதகாலமாக வேலை வாய்ப்பில்லாத ஃபெப்சி தொழிலாளர்கள், மக்களின் உரிமைக்காக இங்கே போராட்டத்துக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒட்டுமொத்தத் திரையுலகமும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது.

மேலும், இங்கே தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், ஃபெப்சி அமைப்பு, ஒளிப்பதிவாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் அமைப்பு, சின்னத்திரை நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட ஒட்டுமொத்தத் திரையுலகமும் அழைப்பை ஏற்று வந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரது தனிப்பட்ட குரலும் மக்களின் நன்மைக்கானதே… ஆகவே, இந்தப் போராட்டத்துக்கு மவுனமே சிறந்த ஆயுதமாகக் கருதி, இங்கே கூடியுள்ள ஒட்டுமொத்தத் திரையுலகினரும் தங்களது மவுன அறவழி கண்டனப் போராட்டம் வாயிலாகப் பதிவு செய்வோம்” என்று பேசினார் நாசர்.

இதனிடையே, சத்யராஜ் பேச வேண்டும் என்று அங்கிருந்தவர்கள் முழக்கமிட்டதால் போராட்டக் களம் பரபரப்பானது. இதையடுத்து பேசிய சத்யராஜ் , நான் என்றுமே தமிழர்களின் பக்கம். தமிழ் உணர்வுகளின் பக்கம் தான். அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம், குரல்கொடுக்க தைரியம் உள்ளவர்கள் தமிழர்களின் பின்னால் நில்லுங்கள்; இல்லையேல், ஒளிந்துகொள்ளுங்கள்” என்று ஆவேசமாக முழக்கமிட்டார்.

இந்த போராட்டத்தில் நகைச்சுவை நடிகர் சூரி கலந்து கொள்ளவில்லை. தான் போராட்டத்தில் கலந்து கொள்ளாததன் காரணத்தை சூரி ட்விட்டரில் விளக்கியுள்ளார். பெரியம்மாவின் திடீர் மரணத்தால், காவிரிக்காக நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. ஆனாலும், பச்சைத் தண்ணீர் கூடப் பருகாமல் நானும் உண்ணாவிரதம் மேற்கொள்கிறேன். பெரியம்மாவுக்கு நிகரானவர்கள்தானே சோறாக்கிப் போட்ட அத்தனை அம்மாக்களும்! என்று ட்வீட்டியுள்ளார் சூரி.

அதே சமயம் இந்த போராட்டத்தில் தமிழ் சினிமாவால் பிரபலமடைந்த கர்நாடகத்தைச் சேர்ந்த பிரகாஷ் ராஜ், அர்ஜூன், அதர்வா, பிரபுதேவா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை என்பதால் அவர்களை ஹேஷ்டேக் போட்டு கலாய்த்து வருகிறார்கள் .

மேலும் இதில் கலந்துகொள்ளாதது குறித்து நடிகர் சிம்பு செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது, தமிழ் திரையுலக சங்கம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்க எனக்கு அழைப்பில்லை; மவுன போராட்டத்தில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. பேசினால் தான் பிரச்னை தீரும். திரைத்துறையில் பல பிரச்னைகள் இருக்கும்போது பிற போராட்டங்களில் பங்கேற்பதில் உடன்பாடில்லை என தெரிவித்தார்.