April 13, 2021

இதய நோயால் அதிகம் அவதிப்படும் இந்தியர்கள்! – பாதுகாத்துக் கொள்வதெப்படி?

நம் நாட்டில் நிகழும் தினசரி உயிரிழப்புகளில் கிட்டத்தட்ட 28%, இதய நோய் சார்ந்த பாதிப்பு களாலேயே ஏற்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நான்கு இந்தியரில் ஒருவருக்கு இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்படுகிறது. ஆண்டு தோறும் 17 லட்சம் எனும் அளவில் இருக்கக்கூடிய இதய நோய் சார்ந்த உயிரிழப்புகள், இன்னும் பத்து வருடங்களில் கோடியைத் தொட வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்த நிலையில் இந்தியாவில் இதய நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.

உலக இதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ஆம் தேதி உலக இதய அறக்கட்டளை யால் ஒழுங்கு செய்யப்படுகிறது. உலகத்தில் மரணத்துக்கும் ஊனத்துக்கும் மாபெரும் காரணமான இதயக்குழல் நோய்களைப்பற்றி மக்களுக்குத் தெரிவிப்பது இதன் நோக்கம். இந்த நோய்களைத் தடுத்துக் குறைக்கும் விழிப்புணர்வை இந்த நாள் ஏற்படுத்துகிறது. புகையிலை பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடல் செயல்பாடு இன்மை ஆகிய ஆபத்துக் காரணிகளைக் கட்டுப்படுத்த இந்த நாள் மக்களை ஊக்குவிக்கிறது. இவற்றைக் கட்டுப் படுத்துவதன் மூலம் இதய நோய்கள் மற்றும் மாரடைப்பால் ஏற்படும் 80 % அகால மரணங்களைத் தவிர்க்கலாம்.

இந்த இதய நோய் என்பது தற்போது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வயதில் பெரியவர்களுக்கு மட்டுமே வந்துகொண்டிருந்த மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான நோய்கள், தற்போது வயதில் சிறியவர்களுக்கும் ஏற்படுகிறது. உறவினர்கள், நண்பர்கள் என சிலர் சிறுவயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். உலகெங்கிலும் ஏற்படுகிற மரணங்களில் இதயம் தொடர்பான பிரச்சனைகளால் ஏற்படுகின்ற உயிரிழப்புகள் சற்று அதிகமாக உள்ளது. அதாவது, ஒரு ஆண்டில் மட்டும் 1.75 கோடி பேர் உலகம் முழுவதும் இதயம் தொடர்பான நோயால் உயிரிழக்கின்றனர்.உலகெங்கிலும் இதய நோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து உள்ளது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, இதயம் தொடர்பான நோய்கள் உலக அளவிலும் இந்தியாவிலும் அதிக உயிரிழப்புக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. இந்தியா வில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் பேர் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதாக அதிர்ச்சி தகவல்களும் வெளியாகிறது. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்து வரும் ஆண்டுகளில் இதயம் தொடர்பான பிரச்சனைகளால் அதிக மக்கள் பாதிப்படைவர் என்று ஆய்வுகள் கூறுகின்றது.

2016 ம் ஆண்டில் அதிகமான இந்தியர்கள் (28%) இதய நோயால் உயிரிழந்து உள்ளதாக செப்டம்பர் 2018ம் ஆண்டு உடல்நலம் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990 ஆகிய காலகட்டங்களில் உலக அளவில் இதய நோய்கள் தொடர்பான மரணங்களில் 15% இந்தியாவில் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல, இந்தியாவில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டு களில் 53 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதயம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் மாரடைப்பு எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால் இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பது மிகவும் முக்கிய மானதாக இருக்கிறது. இதனால் இதய நல மருத்துவகளிடம் உரையாடியபோது, கிடைத்த தகவல்கள்.

ஆரோக்கியமான இதயம் வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்?

ஆரோக்கியமான இதயம் வேண்டுமென்றால் அதற்காக சில வழிமுறைகளை பின்பற்றவேண்டும். நாம் பொதுவாக மாரடைப்பு வந்துவிடும் என அனைவரும் சொல்லிவிடுவார்களோ என்று பயப்படுவோம். பெண்ணாக இருந்தால் 45 வயது வரைக்கும் மாரடைப்பு வருவது மிகவும் அரிது. ஏனெனில் பெண்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் அவர்களுக்கு மாரடைப்பு வராமல் பாதுகாக்கும். இதே ஆண்களுக்கு அந்த பாதுகாப்பு கிடையாது. ஆண்களுக்கு சிறுவயதிலேயே இதய கோளாறு ஏற்படலாம். ஆண்கள் மற்றும் பெண்களில் இதுதான் வித்தியாசம்.

மாரடைப்புக்கு மிகப்பெரிய காரணம் புகைப்பிடித்தல், பெரும்பாலான மக்களுக்கு சிகரெட் பிடித்தால் புற்று நோய் வரும் என்பது மட்டுமே தெரியும். விளம்பரங்கள் உள்ளிட்ட பலவற்றி அவ்வாறே சொல்கின்றனர். ஆனால், புகைப்பிடித்தல் மாரடைப்பு மற்றும் திடீர் உயிர் பிரிதலை ஏற்படுத்தும் என்பது பெரும்பாலான மக்களுக்கு தெரியாத விஷயம். “வயதானவர்கள் சிலர் ஒரு நாளைக்கு பல சிகரெட்டுகளை புகைக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. ஆனால், நான் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு சிகரெட்டுகள் மட்டுமே புகைக்கிறேன். ஆனால் எனக்கு மாரடைப்பு வருகிறது” என்று சிலர் கூறுகின்றனர். ஏனெனில் அவர் வாழ்ந்த காலகட்டம் வேறு மற்றும் தற்போதைய காலகட்டம் வேறு. உடற்பயிற்சி இல்லாதது, உடல் பருமனாக இருப்பது, மன அழுத்தத்துடன் இருப்பது போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படலாம். சிகரெட் பிடிப்பதால் ரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்படுவதால் மாரடைப்பு ஏற்படலாம்.

சிகரெட் பிடிப்பது மட்டும்தான் மாரடைப்புக்கான காரணமா?

சிகரெட் பிடிப்பது மட்டுமல்லாமல், மது அருந்துவது, சரியாக உடற்பயிற்சி செய்யாதது போன்ற பல காரணங்களால் மாரடைப்பு ஏற்படலாம். சிலர் ஒரே இடத்திலேயே எப்போதுமே அமர்ந்திருப்பார்கள். அருகில் உள்ள கடைக்கோ அல்லது பக்கத்து வீட்டிற்கோ கூட செல்ல மாட்டார்கள். அவ்வாறு ஒரே இடத்தில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கிறது. உடல் பருமன், ரத்த அழுத்தம், கொழுப்புச்சத்து அதிகரிப்பு போன்ற பலவிதமான காரணங்களால் மாரடைப்பு ஏற்படலாம்.

மாரடைப்பு மற்றும் சாதாரண வலியை எவ்வாறு வேறுபடுத்துவது?

மாரடைப்பு மற்றும் சாதாரண தசை வலியை கண்டுபிடிக்கவேண்டுமென்றால் உங்களுக்குள்ளேயே சில கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள். பெண்களாக இருந்தால் நீங்கள் 45 வயதுக்கு குறைவாகவோ, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்பவர்களாகவோ, மாதவிடாய் பிரச்சனை இல்லாதவர்களாகவோ, சர்க்கரை நோய் இல்லாமலோ இருந்தால் உங்களுக்கு மாரடைப்பு ஏற்படாது, அது சாதாரண தசைப் பிடிப்பாக இருக்கலாம். ஆண்களாக இருந்தால், 30 வயதை தாண்டியவர்கள், அதிகமாக புகைப்பிடிப்பவர்கள், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஒரே ஒரு இடத்தில் மட்டும் குத்துவது போன்ற வலி ஏற்பட்டால் அதற்கு அதிகம் பயப்படத்தேவையில்லை. மார்புப் பகுதி முழுவதும் அடைப்பதைப் போல உணர்ந்தாலோ, உட்கார்ந்திருக்கும்போது அது சரியாகவும் நடக்கும்போது அடைப்பு ஏற்படுவதுபோன்ற உணர்வாக இருந்தாலும் அது மாரடைப்பு என்பதை புரிந்துகொள்ளவேண்டும். மாரடைப்பு ஏற்பட்டு அந்த வலி தாடை, தோள்பட்டை, முதுகு போன்ற பகுதிகளுக்கு பரவினால், அது மிகவும் ஆபத்தானது. உடனே, நீங்கள் மருத்துவரை அணுகவேண்டும். மாரடைப்பு ஏற்பட்டால் உடனே மிகவும் பயந்து விடக்கூடாது, மருத்துவரை அணுகி தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்?

மிகவும் முக்கியமானது, மருத்துவர்கள் கொடுத்த மாத்திரைகள் மற்றும் மருந்தை கண்டிப்பாக தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். கரோனா காலகட்டத்தில் யாராலும் வெளியே செல்ல முடியாத காரணம் இருப்பதால், ஆன்லைன் மூலமாக கட்டாயம் மருத்துவரைப் பார்த்து மாத்திரைகளை வாழ்நாள் முழுவதும் உட்கொள்ளவேண்டும். சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டு, இதயம் ஆகிய நான்கு விஷயங்களுக்கும் என்றைக்குமே மாத்திரையை நிறுத்தக் கூடாது. பைபாஸ் அறூவை சிகிச்சை செய்த பிறகு சிலர் மிகவும் சாதாரணமாக இருப்பார்கள். அதாவது உடற்பயிற்சி செய்யாமலும், புகைப்பழக்கத்தைத் தொடரவும் செய்வார்கள். ஆனால், அவ்வாறு செய்தால் மிகவும் ஆபத்தில் முடியும். பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தாலும், சரியாக நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கவில்லை என்றால் உங்களுக்கு மீண்டும் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்க என்னமாதிரியான உடற்பயிற்சிகள் மேற்கொள்ளலாம்?

ஒரு ஆரோக்கியமான வலுவான இதயம் வேண்டுமென்றால் தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம். சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது, ஜாகிங் செல்வது போன்றவற்றை மேற்கொள்ளலாம். ஒரு நாளைக்கு 30ல் இருந்து 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யவேண்டும். ஒரு வாரத்திற்கு 4ல் இருந்து 5 நாட்களுக்கு கட்டாயம் உடற்பயிற்சி செய்யவேண்டும். வயதானவர்கள் சிலருக்கு மூட்டு வலி ஏற்பட்டால், அவர்களால் இதுபோன்ற உடற்பயிற்சிகளை செய்யமுடியாது. ஆகவே, அவர்கள் உட்கார்ந்த இடத்திலேயே சில உடற் பயிற்சிகளை செய்யலாம். கைகளுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய சைக்கிள்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். பள்ளிகளில் செய்யக் கூடிய ட்ரில் போன்ற மெல்லிய உடற்பயிற்சிகளை செய்யலாம்.

இதயத்தை ஆரோக்கியமாக வைக்க என்னென்ன உணவு வகைகளை எடுத்துக்கொள்ளலாம்?

உப்பு, காரம் அதிகம் இல்லாத உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். நம் பாரம்பரிய உணவு வகைகளான அரிசி, பருப்பு வகைகளை சாப்பிடலாம். பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை உண்பது நல்லதல்ல. கெச்சப், நூடுல்ஸ், சூப் இவற்றில் உப்பு மிகவும் அதிகமாக இருப்பதால் அவற்றை உண்பதை தவிர்க்கவேண்டும். அவற்றில் அமிலங்கள் மிகவும் அதிகமாக இருக்கும். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். அரிசி சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படும் என்று சிலர் தகவல் தெரிவித்துவருகின்றனர். அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்கள் அரிசி அதிகமாக உட்கொண்டால் அவர்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கும். அதனால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்ற காரணத்திற்காக அவர்களுக்கு மட்டுமே அரிசி சாப்பிடுவதை குறைக்குமாறு வலியுறுத்துவோம்.