September 25, 2021

குழந்தைகளின் பாலியல் வன்கொடுமை வழக்குகளை சீக்கிரம் முடிக்கப் பாருங்கப்பூ!

யுனிசெஃப் ஆய்வின்படி உலக அளவில் பெண் குழந்தைகள் பிறப்பதற்குப் பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு பத்தாண்டு கணக்கெடுப்பின்போதும் வருந்தத்தக்க அளவில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. அத்துடன் இந்தியாவில் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தக் குற்றங்கள் 150% அதிகரித்துள்ளன. மேலும் பெண் குழந்தைகளைக் கடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதும் அதிகரித்துவருகிறது என்றெல்லாம் ஏற்கெனவே செய்திகள் வெளியான நிலையில் நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவற்றில் 229 வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் அலாக் அலோக் ஸ்ரீவஸ்தவா உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்த பொது நலன் மனுவில், அவரது உறவினரின் 8 மாத குழந்தை சமீபத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் தேசிய குற்ற ஆவண அறிக்கையின்படி, கடந்த 2016 ஆம் ஆண்டு வரை 1,01,326 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அவற்றில் 229 வழக்குகளுக்கு மட்டுமே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். இதற்கு முந்தைய ஆண்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகள் 70,435 என்றும் 2016 ஆம் ஆண்டு மட்டும் புதிதாக 30 ஆயிரத்து 891 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலியல் வன்கொடுமை வழக்குகளை 6 மாதங்களுக்குள் விசாரித்து தீர்வு காண நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள் வகுக்க வேண்டும் எனவும் மனுவில் கேட்டு கொள்ளப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஓய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, நாடு முழுவதும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் குறித்த எண்ணிக்கையை கணக்கெடுக்கவும், எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்தும் நாட்டில் உள்ள அனைத்து உயர் நீதிமன்ற பதிவாளர்களும் 4 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.

மேலும் மாவட்ட வாரியாக எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்த அறிக்கையையும் உயர் நீதிமன்ற பதிவாளர்கள் அளிக்கவும் ஆணையிட்டு வழக்கின் மறுவிசாரணையை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.முன்னதாக 8 மாத குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில் குற்றவாளி ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.