January 29, 2022

ஜர்னலிஸ்ட் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய ஸ்பெஷல் ஆக்ட் வோணும் – பிரஸ் கவுன்சில் கோரிக்கை

கடந்த ஒரு வாரத்தில் ஜார்க்கண்ட் மாநிலம், சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் அகிலேஷ் பிரதாப் சிங் (கடந்த வியாழக் கிழமையும்), பீகார் மாநிலம், சிவான் மாவட்டத்தைச் சேர்ந்த செய்தியாளர் ராஜ்தேவ் ரஞ்சன் (வெள்ளிக்கிழமையும்) ஆகியோர்  மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்

jounalist may 15

கடந்த  இரண்டே தினங்களில் நிகழ்ந்த பத்திரிகையாளர்கள் இருவரின் கொலைக்குக் கண்டனம் தெரிவித்த இந்திய பிரஸ் கவுன்சில் (பிசிஐ), பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக பிசிஐ-யின் தலைவர் நீதிபதி சந்திரமெளலி குமார் பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 4 மாதங்களில் பத்திரிகையாளர்கள் 3 பேர் கொல்லப்பட்டதும், பணியில் இருந்தபோது விபத்தில் ஒரு பத்திரிகையாளர் உயிரிழந்ததும் பெரும் கவலையளிக்கிறது. பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய சிறப்புச் சட்டம் ஒன்றை மத்திய அரசு இயற்ற வேண்டும். மேலும் பிரஸ் கவுன்சிலால் நியமிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் பாதுகாப்புக்கான துணைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் மீதான தாக்குதல், கொலை வழக்குகளை சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் மூலம் விசாரிக்க வேண்டும்.

கடந்த ஆண்டில் பத்திரிகையாளர்கள் 9 பேரும், இந்த ஆண்டில் இதுவரை 3 பேரும் கொல்லப்பட்டது, நாட்டில் வருங்காலத்தில் பத்திரிகைச் சுதந்திரத்துக்கும், பத்திரிகையாளர்களின் பாதுகாப்புக்கும் நல்ல அறிகுறியாக இல்லை. கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மாநில அரசுகள் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்” என்று அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இரு பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டதற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சுட்டுரை (டுவிட்டர்) வெளியிட்ட பதிவில் குறிப்பிடுகையில், “பத்திரிகையாளர்கள் ராஜ்தேவ் ரஞ்சன் மற்றும் அகிலேஷ் பிரதாப் சிங் ஆகியோர் கொல்லப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. இதுதொடர்பான வழக்குகளில் தனித்தனி விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.