March 21, 2023

இந்தியக் கிரிக்கெட் வாரிய தலைவரான தாதா கங்குலி – பேட்டி முழு விபரம்!

சமீபத்தில், பிசிசிஐ-ன் பொதுக்குழுக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 39 வது (பிசிசிஐ) தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அதிகாரப்பூர்வமாக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் மேட்ச் ஃபிக்சிங் புகார்கள் எழுந்து வந்த நிலையில், பிசிசிஐ செயல்பாடுகளை வெளிப்படையாக நடத்தவும், நீதிபதி லோதா குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும் ஒரு குழுவை நியமித்தது.

இதனை தொடர்ந்து கடந்த 2017 முதல் சிஓஏ தரப்பு பிசிசிஐ நிர்வாகத்தை மேற்கொண்டு வந்தது. மேலும் அக்டோபர் 23 ஆம் தேதி நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும் எனவும் சிஓஏ அறிவித்திருந்தது.
தலைமை பதவிக்கு முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி மட்டுமே மனு அளித்திருந்தார். ஆதலால் சவுரவ் கங்குலி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் சவுரவ் கங்குலி 10 மாதங்கள் மட்டுமே தலைமை பொறுப்பில் இருப்பார் எனவும் கூறப் படுகிறது. மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கங்குலி தலைவர் பதவியை ஏற்றார். இந்நிலையில் அவரது சிஓஏ (Committee of Administrations) பதவியை உடனடியாக நிறைவுக்கு வருகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக விஜயநகரம் மகாராஜாவுக்குப் பிறகு இரண்டாவடாக தேர்ந்தெடுக்கபட்ட இந்திய கிரிக்கெட் வீரர் கங்குலி என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்க மாநிலத்தில் பேசும் பெங்காலி மொழியில் ‘தாதா’ என்றால் ‘அண்ணா’ என்று பொருளாகும்.

இதை அடுத்து கங்குலி அளித்த முதல் பேட்டியின் போது, “இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பொறுப்பை ஏற்று இருப்பது மிகப்பெரிய கவுரவம். இது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தொடக்கமாகும். இது இளம் நிர்வாகிகள் படையாகும். இந்திய கிரிக்கெட் வாரியத்தில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். ஏனெனில் கடந்த 3 ஆண்டுகளாக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் எதுவும் நடக்கவில்லை. எனவே இந்த காலங்களில் என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியாது. இவை எல்லாவற்றையும் நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தியது போல் இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் சிறப்பான முறையில் முன்னெடுத்து செல்வேன். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நம்பகத்தன்மை விஷயத்திலும், ஊழலற்ற நிர்வாகத்திலும் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளமாட்டோம் என்ற நிலை தொடரும்.

இந்திய கிரிக்கெட்டின் மிகவும் முக்கியமான நபர் கேப்டன் விராட்கோலி. அவர் சொல்லும் விஷயத்தை கவனத்தில் எடுத்து கொள்வோம். நான் விராட் கோலியுடன் நாளை (அதாவது இன்று) பேசுவேன். அவர் என்ன கேட்டாலும், முடிந்தவரை எல்லா வகையிலும் அவருக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம். இந்திய கிரிக்கெட் அணியை உலகிலேயே சிறந்த அணியாக உருவாக்க விராட்கோலி விரும்புகிறார். உள்ளபடியே சொல்ல வேண்டுமானால் கடந்த 3-4 ஆண்டுகளாக இந்திய அணி விளையாடி வரும் விதத்தை பார்க்கையில் அதனை சிறந்த அணி என்று சொல்லலாம்.

தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உள்ளிட்ட இந்திய அணி நிர்வாகத்தினருடன் எல்லா விஷயங்களிலும் முறையாக கலந்து பேசி முடிவுகள் எடுக்கப்படும். அவர்களின் பணியை எளிதாக்கவே நாங்கள் இந்த பதவிக்கு வந்து இருக்கிறோம். அவர்களின் பணியை கடினமாக்க மாட்டோம். ஆட்டத்திறன் அடிப்படையில் அனைத்தும் முடிவு செய்யப்படும். திறமை தான் மிகவும் முக்கியம். அது தான் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். நான் கேப்டனாக இருந்து இருப்பதால் விராட்கோலியின் நிலையை என்னால் புரிந்து கொள்ள முடியும். இருவருக் கும் இடையே பரஸ்பர மரியாதை உண்டு. கருத்துகளுக்கும், விவாதங்களுக்கும் இடம் இருக்கும். ஆட்டத்துக்கு எது நல்லதோ? அதனை நாங்கள் செய்வோம்.

2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணி ஐ.சி.சி. போட்டியில் கோப்பையை வெல்லவில்லை என்று நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் எல்லா நேரங்களிலும் உலக கோப்பையை வெல்வது என்பது முடியாத காரியம். இந்திய கிரிக்கெட் முன்னேற்ற பாதையில் செல்வதை உறுதி செய்வோம்.

ஒவ்வொரு வடிவிலான போட்டிக்கும் தனித்தனி கேப்டன் கொண்டு வர வேண்டும் என்ற கேள்வி தற்போது எழுவதாக நான் நினைக்கவில்லை. தற்போது இந்திய அணி வெற்றிப்பாதையில் பயணிக்கிறது. உலகின் சிறந்த அணியாக இந்தியா திகழ்கிறது. டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் குறிப்பிட்ட மைதானங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று விராட்கோலி கூறியிருக்கிறார். நம்மிடம் நிறைய மாநிலங்களும், நிறைய மைதானங்களும் உள்ளன. எனவே இது குறித்து அவருடன் நாங்கள் பேசுவோம். அவர் விரும்பியபடி செய்யலாம்.

அப்புறம் இந்த டோனியின் மனதில் என்ன இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து அவர் என்ன நினைக்கிறார் என்பது தெரியவில்லை. எனவே அதனை நாங்கள் பார்த்து கொள்வோம். தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் டோனியும் ஒருவர். டோனியை நாம் பெற்று இருப்பது இந்திய கிரிக்கெட்டுக்கு பெருமையாகும். தனது சாதனைகள் மூலம் இந்தியாவை பெருமைப்பட வைத்து இருக்கிறார். அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு செய்து இருக்கும் சாதனைகளை பட்டியலிட்டு பார்த்தால் நீங்கள் கூட ஆச்சரியப்படுவீர்கள். நான் பதவியில் இருக்கும் வரை அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும். அதில் மாற்றம் எதுவும் இருக்காது. டோனியிடம் நான் இன்னும் பேசவில்லை. விரைவில் அவருடன் பேசுவேன். நான் விளையாடிய காலத்தில் என்னை அணியில் இருந்து நீக்கிய போது இனி கங்குலி அவ்வளவு தான். மீண்டு வரமாட்டார் என்று விமர்சித்தார்கள். ஆனால் நான் மறுபடியும் அணிக்கு திரும்பி அதன் பிறகு 4 ஆண்டுகள் விளை யாடினேன். சாம்பியன்கள் விரைவில் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து கொள்ளமாட்டார்கள் என்பது உங்களுக்கே தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.