சவுரவ் கங்குலிக்கு அஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமானவர் சவுரவ் கங்குலி. இவர் தற்போது இந்திய கிரிக்கெட் வாரிய சங்க தலைவராக (பிசிசிஐ) செயல்பட்டு வருகிறார். மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த கங்குலி தனது சொந்த ஊரில் வசித்து வருகிறார்.  இந்நிலையில், கொல்கத்தாவில் அவரது வீட்டில் இருந்த சவுரவ் கங்குலிக்கு இன்று மதிய 2 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து, அவர் உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லேன்ட்ஸ் பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த கங்குலிக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வந்ததாகவும் தகவல்கள் வெளியாகிவுள்ளன. மேலும் கங்குலி தற்போது நலமாக இருப்பதாகவும், அவருக்கு அஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை செய்யப்படவுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “சவுரவ் கங்குலி மாரடைப்பு காரணமாக மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. அவர் விரைவாக பூரண நலம் பெற வேண்டும். எனது சிந்தனையும் பிரார்த்தனையும் அவரிடமும் அவரது குடும்பத்தினரிடமும் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.