டெல்லியில் ஆகஸ்ட் 3வது வாரத்தில், மழை கால கூட்டத்தொடர்!- ஏற்பாடுகள் ஜரூர்!
ஆகஸ்ட் 3வது வாரத்தில், மழை கால கூட்டத்தொடரை கூட்டுவதற்கான பணிகளை விரைவாக முடிக்கும்படி அவைத்தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதற்காக அவையில் கூடுதலாக 4 திரைகள் அமைக்கப்பட்டு ராஜ்யசபா மாடங்களில் 6 சிறிய திரைகள், ஆடியோ கன்சோல்கள், கிருமிகளை நீக்கும் புற ஊதா கதிர்வீச்சு, லோக்சபா, ராஜ்யசபாவை இணைக்கும் ஆடியோ- வீடியோ சிக்னல்கள், சேம்பரில் கேலரிகளை பிரிக்கும் திரைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகி உள்ளது..
கொரோனா தாக்கத்துக்கு இடையில் ல்பார்லிமென்டில் இரு அவைகளிலும் சேம்பர்கள் மற்றும் கேலரிகளை பயன்படுத்தி மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவும், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவும் ஆலோசனை நடத்தினர்..
அதன்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மழைக்கால அமர்வின் போது செயல்படும் என்றாலும், அவை ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்திற்கு மட்டுமே செயல்படும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி முதலில் மக்களவை கூட்டத்தொடரும் அதைத் தொடர்ந்து மாநிலங்களவை கூட்டத்தொடரும் நடைபெறும். மக்களவை உறுப்பினர்களுக்கான கூட்டம் முடிந்த பின்னர் அவர்கள் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறுவார்கள். அதன் பின்னர் மாநிலங்களவை கூட்டம் நடைபெறும்.இந்த கூட்டத்தொடரில் பத்திரிக்கையாளர்கள் குறைந்த அளவிலேயே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த ஏற்பாடுகள் அனைத்தும் கரோனா வைரஸ் தொற்றுநோயால் தேவைப்படும் சமூக விலகல் விதிமுறைகளுக்கு இணங்க நடைபெறுகிறது என்பதும் 1952 முதல் இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் தற்போது தான் முதல்முறையாக மாற்றம் செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.