August 4, 2021

சோனு சூட்டுக்கு தனி கௌரம் கொடுத்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்!

க்டர் சோனு சூட் கொரோனா காலத்தில் மக்களுக்கு செய்த ஏகப்பட்ட நல உதவிகளை திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். மேலும் அவரை பஞ்சாபின் அடையாளம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து கவுரவித்தது. இந்நிலையில் கொரோனா காலத்தில் மக்களுக்குப் பல உதவிகள் செய்த சோனு சூட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அவரது புகைப்படத்தைப் பதித்து நன்றி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஊரடங்குக் காலக்கட்டத்தில் புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப வாகனங்கள் அமைத்துத் தொழிலாளர்களுக்கு உதவினார். மேலும் பொருளாதார ரீதியாக அவதிப்படும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தைத் தொடங்கினார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தார். இன்னும் பல உதவிகளை மக்களுக்குச் செய்தவர் இந்தி நடிகரான சோனு சூட். திரைப்படங்களில் வில்லனாகவே நடித்த இவர் நிஜ வாழ்வில் மக்களிடையே ஹீரோவாகத் திகழ்ந்து வருகிறார்.

இத்தகைய நல உதவிகள் செய்ய தனது 8 சொத்துகளை வங்கியில் அடமானம் வைத்து ரூ.10 கோடி கடன் வாங்கியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. மனீ கண்ட்ரோல் என்கிற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மும்பை ஜூஹு பகுதியில் இருக்கும் 2 கடைகள் மற்றும் 6 வீடுகளை சோனு சூட் வங்கியில் அடமானம் வைத்து ரூ.10 கோடி கடன் பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தக் கடனுக்காக ரூ. 5 லட்சம் பதிவுக் கட்டணத்தையும் செலுத்தியுள்ளார்.

இப்படி சோனு சூட் செய்த அனைத்து உதவிகளுக்கும் பாராட்டும் வண்ணம் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் தங்களது போயிங் 737 ரக விமானத்தில் அவரது புகைப்படத்தைப் பதித்துப் பாராட்டுத் தெரிவித்துள்ளது. “இப்பாராட்டுகள் அனைத்தையும் கண்டு நான் நெகிழ்ச்சி அடைகிறேன். இது ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் மிகவும் இனிமையான செயல். இதுபோன்ற ஒரு அழகான பரிசைக்கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கொரோனவின்போது உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல இந்தியர்களைப் பாதுகாப்பாக தங்கள் தாய்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான முயற்சிக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு நான் நன்றி கூறுகிறேன்.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.