காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியே மீண்டும் தேர்வு!

காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி செயல்படுவார் என்று தெரிவித்தார்.

நடந்து முடிந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 54 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை மீண்டும் ஒருமுறை இழந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத் தக்கது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே தொடர வேண்டும் என கட்சி யில் பெரும்பாலனோர் கூறிவந்தனர். ஆனால் தன்னுடைய ராஜினாமா முடிவில் ஸ்திரமாக ராகுல் இருப்பதால், நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூடும் என தகவல் வெளியாகியது.

இதனையடுத்து, நேற்று புதிய தலைவரைத் தேர்வு செய்ய காங்கிரஸ் காரியக் கமிட்டி டெல்லியில் கூடியது. இந்த கூட்டத்தில் சோனியாகாந்தி, பிரியங்கா, அகமது பட்டேல், ஏகே.அந்தோணி, ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால் பங்கேற்ற சிறிது நேரத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் கூட்டத்தில் இருந்து உடனடியாக கிளம்பி விட்டார்கள்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சோனியா காந்தி, கட்சிக்கு அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பான கூட்டத்தில் நானும், ராகுலும் பங்கேற்பது முறையாக இருக்காது என்றார்.எனினும், இந்தக் கூட்டத்தில் முடிவு எட்டப்படாமல் காரியக் கமிட்டி மீண்டும் இரவு 8.30 மணி அளவில் நடைபெறும் என்றும் அதன் முடிவில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, காரியக் கமிட்டி கூட்டம் மீண்டும் நேற்று இரவு கூடியது. இந்த கூட்டத்தின்போது சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் தவிர மன்மோகன் சிங், மல்லிகார்ஜுன் கார்கே, ப. சிதம்பரம், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த மற்றும் முக்கிய தலைவர்கள் அடுத்த காங்கிரஸ் தலைவர் யாரை நியமிப்பது என்பது குறித்து விரிவாக விவாதித்து. சோனியா காந்தி தற்காலிக தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.