முதியோரை புறக்கணிக்கும் மருமகன், மருமகள்-களுக்குக் கூட சிறை – மத்திய அரசு முடிவு!!

2017 நிலவரப்படி உலக மக்கள் தொகையில் 70 கோடி பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள். வரும் 2020 ம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 120 கோடி. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இது போன்ற நிலை அதிகம் இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. மருத்துவ முன்னேற்றம் மனிதனின் சராசரி ஆயுளை கூட்டியுள்ளது. அதனால் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டம் 2007ல் இயற்றப் பட்டது. இதன்படி மூத்தகுடிமக்களுக்கு பாதுகாப்பு வழங்குதல், உறவுகளால் அபகரிக்கப் பட்ட சொத்துக்களை மீட்டுத்தருதல், பெற்றோரை பாதுகாக்காத பிள்ளைகளுக்கு சிறை தண்டனை விதிக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டன. குடும்ப கவுரவம், பெருந்தன்மை, பிள்ளைகள் மேல் பெற் றோர் கொண்டுள்ள அன்பு காரணமாக 90 சதவீத பெற்றோர் இச்சட்டத்தை கையில் எடுக்காமல், தானாகவே முதியோர் இல்லங்களை நாடி செல்கின்றனர். இந்நிலையில் முதியோர்களை கவனிக் காமல் புறக்கணித்தால் பிள்ளைகள் மீது மட்டுமல்லாமல் இனி மருமகன், மருமகள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது 2007ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை திருத்த வகை செய்யும் மசோதா நாடாளு மன்றத் தில் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த பெற்றோர்கள், முதியோர் பராமரிப்பு மற்றும் நலன் சட்டத் திருத்த மசோதா 2019க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எனவே இந்த குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படலாம்.

அந்த மசோதாவின் சில அம்சங்கள் பின்வருமாறு :

புதிய சட்டத்திருத்த மசோதாவின் படி பெற்றோர்களின் பராமரிப்பு செலவாக அதிகப்பட்சம் ரூ.10,000 வழங்க வேண்டும் என்ற விதி நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அதிகமாக சம்பாதிக்கும் பிள்ளைகள், மருமகன், மருமகள் அதிகளவில் பெற்றோருக்கு பணம் கொடுக்க வேண்டும் என திருத்தப்பட்டுள்ளது.

பெற்றோருக்கு பணம் கொடுக்க தவறினால் குறைந்தபட்சம் 5000 ரூபாய் அபராதம் அல்லது 3 மாதங்கள் சிறைதண்டனை அல்லது இரண்டும் வழங்கப்படும்.

மேலும் தற்போதுள்ள சட்டத்தின் கீழ் பெற்றோரை பராமரிக்க தவறினால் மகன் மற்றும் மகள் மீது மட்டும் தான் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் இந்த சட்டத்திருத்த மசோதாவின்படி மருமகன் மற்றும் மருமகள் மீதும் நடவடிக்கை பாயும்.

80 வயதை தாண்டிய முதியவர்கள் அளிக்கும் புகார்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

அனைத்து முதியோர் இல்லங்கள் மற்றும் காப்பங்கள் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். அவை குறைந்தபட்ச தரம் மற்றும் வசதிகளுடன் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து காவல்நிலையங்களிலும் முதியோர்களின் புகார்களை ஏற்க தனி அதிகாரி நியமிக்கப் படுவார். முதியோர்கள் உதவி கேட்கவும் புகார் அளிக்கவும் தனி தொலைபேசி எண் உருவாக்கப் படும்.

பெற்றோரின் பராமரிப்பு என்பது உணவு, உடை, இருப்பிடம் மட்டுமன்றி அவர்களுக்கான பாதுகாப்பையும் கவனிக்க வேண்டும்.

கடந்த 2007ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட பெற்றோர்கள், முதியோர் பராமரிப்பு மற்றும் நலன் சட்டத்தில் செய்யப்படும் முதல் திருத்தம் இதுவாகும்.