October 25, 2021

சோம்நாத் சாட்டர்ஜி காலமானார் – தலைவர்கள் இரங்கல்

மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மக்களவை முன்னாள் சபாநாயகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவருமான சோம்நாத் சாட்டர்ஜி (89), கடந்த 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, மக்களவை சபாநாயகராக இருந்தார். கடந்த 2008ம் ஆண்டு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாபஸ் பெற்றபோது, சோம்நாத் சாட்டர்ஜி தன்னுடைய பதவியிலிருந்து விலகவில்லை. இதையடுத்து, அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

மூத்த அரசியல்வாதியான அவர், 10 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில், 1968ம் ஆண்டு தன்னை இணைத்துக் கொண்ட சோம்நாத் சாட்டர்ஜி, அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினராக நீண்ட நாட்கள் இருந்தார். இவரது மகன் பிரதாப் சாட்டர்ஜி, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் செல்வாக்குமிக்க வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வயது மூப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக, தொடர் சிகிச்சை பெற்று வந்த சோம்நாத் சாட்டர்ஜிக்கு, கடந்த ஜூலை மாதம் திடீரென பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது. ஓரளவு குணமடைந்து வந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், கொல்கத்தாவில் உள்ள பெல்லி வேவ் கிளினிகில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து, 12 மருத்துவர்கள் கொண்ட குழு, அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்தது. இதற்கிடையே, இன்று காலை 8:30 மணியளவில், சோம்நாத் சாட்டர்ஜிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவர் மரணம் அடைந்தார்.

இவரது மறைவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.