ஜெய்பீம் படம் பார்த்தே இரண்டு நாட்கள் தூங்காத முதலமைச்சர்!?

காவல்துறை மட்டும் தனித்தே இத்தகையை கொடூரங்களை நிகழ்த்துவதில்லை. அவர்களுடன் அரசு பிம்புலம் கொண்டோரும் அரசியல்வாதிகளும், பணக்காரர்களும் கைகோர்த்தே லாக்அப் மரணங்களை சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக மனித உரிமை இயக்கங்கள், பொது சேவை அமைப்புகள், கம்யூனிஸ்ட் கட்சியினரின் முயற்சியால் இந்தக் காவல் மரணங்கள் வெளியே தெரியவந்த நிலையில் இப்போது சில குறிப்பிட்ட ஊடகவாசிகளால் எக்ஸ்போஸ் ஆகிறது .

இந்நிலையில், சோழவரம் காவல் நிலைய லிமிட்டில் பி கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜசேகரை நேத்திக்கு கொடுங்கையூர் போலீஸ் வழக்கு ஓன்றின் விசாரணைக்காக அழைச்சு வந்து லாட்ஜில் வைத்து விசாரணை நடத்தி இருக்காய்ங்க. பின்னர் அவரை கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தபோது அவருக்கு இன்று உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து, போலீஸார் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளனர். பின்னர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு ராஜசேகரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ராஜசேகர் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

விசாரணை கைதி சந்தேக மரணத்தைத் தொடர்ந்து சென்னை காவல் துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, காவல் இணை ஆணையர் ராஜேஸ்வரி, புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வாராய்ங்க.

ஆனால் ஒவ்வொரு முறை லாக்கப் மரணங்கள் நிகழும் போதும் காவல்துறையினர் கதையாசிரியர்களாக மாறுவிடுகின்றனர். லாக்கப் மரணங்களுக்கு பின்னால் உள்ள உண்மைக் கதை காவல்துறையினருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். திருட்டு சம்பவங்களில் பிடிபடுபவர்களையும், வேறு சில்லறை குற்றங்களில் ஈடுபடுபவர்களையும் கை, கால்களை உடைத்து விட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக மறுநாளில் செய்திதாள்களில் வெளிவரும். இதை பார்த்து நாமும் சிலாகிப்போம். இது பத்திரிக்கையாளர்களுக்கும், நீதிபதிகளுக்கும் தெரியாதா? தெரியும். ஆனால் யாரும் கேள்வி எழுப்பமாட்டார்கள். இந்த அதிகார திமிரை கேள்வி கேட்காததன் விளைவு, லாக்கப் மரணங்கள் இன்றும் தொடர்கின்றன. வங்கியில் பல்லாயிரம் கோடி கடனை கட்டாமல் நாட்டை ஏய்ப்பவர்களும், போராடும் விவசாயிகளை காரை ஏற்றிக் கொள்பவனும் என்றுமே பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக செய்தி வந்ததில்லை. சட்டங்கள் எல்லாம் சாமனியன் மேல் தான் பாயும்.

கடந்தாண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸூக்கு நடந்த கொடூரங்களும் அதை அரங்கேற்றிய போலீஸார் இப்போது வரை ஜெயில்தான் இருக்காய்ங்க என்று தெரிந்த மனநிலையில் கூட அக்யூஸ்டுகளை அட்டாக் செய்து சாகடிக்கும் போலீஸ் துறையால் ஆட்சியாளர்களுக்குத்தான் பிரச்னை என்பதை புரியாத வரை சிரமம்தான்.

குறிப்பாகச் சொல்வதானால் ஜெய்பீம் படம் பார்த்தே இரண்டு நாட்கள் தூங்காத முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது காவல்துறை அமைச்சராவும் இருப்பதால் எத்தனை நாள் தூங்காமல் இருக்கப் போகிறாரோ?

நிலவளம் ரெங்கராஜன்