December 5, 2021

இனி நம் வருமானம் குறைய…இன்னொரு பக்கம் வேலை பளுவும் நேரமும் அதிகரிக்கும்!

கொரானாவுக்குப் பிறகு இந்தியாவின் பொருளாதாரம் மல்லாக்க விழுந்துவிடும் என்றும் அதை மீட்டெடுக்க இந்தியர்கள் யாவரும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்காவது வாரத்துக்கு 60 மணிநேரம் காட்டுத்தனமாக வேலை செய்தால் மட்டுமே… அதள குப்புறக் கவுந்துகிடக்கும் பொருளாதாரத்தை செங்குத்தாக நிமிர்த்த முடியும் என்று சொல்லியிருக்கிறார் இன்போஸிஸ் நாராயண மூர்த்தி.

ரட்சகன் நாகார்ஜூனா போல நாக்குபூச்சிகளை உடலெங்கும் சுமந்து அலையும் தேச பக்தர் களுக்கு இதை படித்ததும் வெறியேறும்தான். ஆமாம் இந்திய பொருளாதாரத்தை காப்பாற்ற வேண்டாமா… நாட்டின் வளர்ச்சிக்கு உழைக்கவேண்டாமா… யெஸ் நிச்சயமாக இந்திய பொருளாதாரத்தை நிமிர்த்த உழைக்கலாம்தான். இப்படித்தான் உலகப்போருக்கு பிறகு ஜப்பானில் உழைத்தார்கள்… ஜெர்மனியில் உழைத்தார்கள்… மீட்டெடுத்தார்கள்… நிமிர்ந்து நின்றார்கள்… நாமும் உழைப்போம் என்கலாம். அதற்கு முன்னால் சில விஷயங்கள் சொல்லிவிடுவோம்.

முதலில் இந்திய பொருளாதாரம் பாதாளத்தில் இருப்பதற்கு காரணம் கொரானா மட்டுமே அல்ல. ஆறு வருடமாக ஆட்சி செய்தவர்களின் கிறுக்குத்தனமான சைக்கோத்தனமான அதிரடி முடிவுகள். கோடி கோடியாக கடன் வாங்கியவர்களுக்கு காட்டிய சலுகைகள். கறுப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என ஆட்சிக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஆனபின்னும் நேரு பேரிலேயே எல்லா தப்பையும் எழுதிகொண்டிருக்கிற கையாலாகாததனம். சரியான திட்டமிடலோ எதிர்காலம் குறித்த விஷனோ இல்லாத ஆட்சியால்தான் பொருளாதாரம் விழுந்தது. சிறுகுறு தொழில்களை முற்றிலும் முடக்கிவிட்டார்கள். அதை நம்பி இருந்தா தொழிலாளர்கள் ஏற்கனவே வேலையிழப்பை சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். பணப்புழக்கம் எப்போதோ நின்றுவிட்டது. தொழில் நசிவு என்பது அன்றாட வழக்கமாக மாறி ஆண்டுகள் கடந்துவிட்டன.

என்னமோ இவர்கள் சொல்வது போல கொரானா வந்து ஒரே ஒரு ஏப்ரலில் எல்லாம் அது விழவில்லை. ஒருமாத வீழ்ச்சியை சமாளிக்க மூன்றாண்டுகள் உழைக்க வேண்டும் என்பதற்கு பின்னால் இருக்கிற குரூரம் புரிகிறதா…அப்படியே பொருளாதாரம் விழுந்தாலும் அதை கூடுதல் நேரம் பணியாற்றி மேலேற்றி விடமுடியுமா…

கொரானாவுக்கு பிந்தைய காலத்தில் நாம் எதிர்கொள்ளக்கூடிய பெரிய சவாலாக இருக்கப் போவது மலிவாக கிடைக்கப்போகிற Workforce பற்றியதுதான். அதீத வேலையிழப்பும் சம்பளக் குறைப்பும் இனி தவிர்க்க முடியாது. லாபத்தில் இயங்குகிற நிறுவனமும் கூட கொரானாதான் காரணம் என்று கைநீட்ட வக்கைனயான ஒரு காரணம் கிடைத்திருக்கிறது. இது நாடு முழுக்க Cheap labour சிக்கலை பெருமளவில் உருவாக்கும். அது பரவலாக உண்டாக்கக் கூடிய வேலை யிழப்பு, சம்பளக்குறைப்புகளும் நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு இருக்கப் போகிறது. ஒருபக்கம் நம்முடைய வருமானம் குறைய… இன்னொரு பக்கம் நம் வேலை பளுவும் நேரமும் அதிகரிக்கும். இது யாருக்கு சாதகமாக இருக்கும். யாருக்கு பாதகமாக இருக்கும்…

ஏற்கனவே இந்தியாவில் வேலை செய்கிற முறைசாரா தொழிலாளர்கள் வாரத்துக்கு 60 மணி நேரத்திற்கும் அதிகமாகத்தான் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போதே அந்த கூடுதல் வேலைக்கு உரிய சம்பளமோ போனஸோ கிடைப்பதில்லை. சொல்லப் போனால் அவர்களுக்கு முறைபடுத்தபட்ட வேலைகளில் கிடைக்கிற அடிப்படை சலுகைகளான பிஎஃப் ஈஎஸ்ஐ முதலானவை கூட கிடையாது. முறைபடுத்தப்பட்ட நிறுவனங்களில் கூட இந்த வாரத்திற்கு 48மணிநேர வேலை எல்லாம் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. இந்திய உழைப்பாளிகளில் இப்படி கூடுதலாக உழைப்பவர்கள் 60-70சதவீதத்திற்கும் அதிகம் (முறைசாரா தொழிலாளர்கள் மட்டும்). இன்போஸிஸ் நாராயணமூர்த்தி இப்போது அதையே தேசபக்தியின் பேரால் ஓசியில் செய்யச்சொல்கிறார்.

இந்தக்கூடுதல் உழைப்பால் கிடைக்கும் லாபத்தில் நிறுவனங்கள் பங்கு கொடுக்கப் போகிறதா… இல்லை. 60 மணிநேர உழைப்புக்கு ஊதியம் கொடுப்பார்களா… இல்லை. அதே சம்பளமோ அல்லது குறைக்கப்பட்ட சம்பளத்தையோதான் பெறப்போகிறார்கள். எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு சம்பள உயர்வு தராமால் இருப்பதற்கான கொழுத்த காரணமாக (எச்ஆர்களுக்கு) கொரானா இருக்கப்போகிறது. அப்படி இருக்க இந்த கூடுதல் உழைப்பால் தொழிலாளர்களிடம் உருவாகும் உடல் நலக் குறைப்பாடுகளுக்கும் மன அழுத்தங்களுக்கும் யார் பொறுப்பு… கூடுதலாக பணியாற்றி உற்பத்தியை மட்டுமே அதிகரித்துவிட்டால் பொருளாதாரம் மேலெழுமா… என்கிற கேள்வியும் இருக்கிறது.

ஐடி நிறுவனங்களில் தொடங்கி ஜவுளிக்கடை வரை தொழிலாளர்கள் வேலைபறிக்கப்பட்டு துரத்தப்படுகிறார்கள். முதல் லாக்டௌனில் மட்டுமே நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டன. தொழிலாளர் நலன் பற்றியெல்லாம் அறிவித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அடுத்தடுத்த முறைகளில் அது எதுவுமே பேசப்படவில்லை. காரணம் இந்த அரசுக்கு முக்கியம் முதலாளிகள்தான்….

இன்போஸிஸ் நாராயணமூர்த்தி போன்றவர்களுக்கு தொழிலாளிகள் என்பவர்கள் replaceable தானே… அவர்கள் எக்கேடும் கெட்டுப்போனால் என்ன! அதனால்தான் வைரஸ்களோடு நாம் வாழப்பழகவேண்டும் என்கிறார்… அது ஒரே ஒரு நாராயணமூர்த்தியின் குரல் அல்ல.

அதிஷா