March 28, 2023

சாகித்திய அகாதமி விருது பெறும் எழுத்தாளர் அம்பை!- சில சிறப்புத் தகவல்கள்!

2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் அம்பை அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை என்கிற சிறுகதை தொகுப்பிற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

1960ஆம் ஆண்டிலிருந்து, எழுத்தாளர் அம்பை பல்வேறு நூல்களை எழுதி வருகிறார். வீட்டின் மூலையில் ஒரு சமையல் அறை, சக்கர நாற்காலி, பயணப்படாத பாதைகள் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். தமிழின் மிகச்சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவரான இவருக்கு, இந்தாண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் அம்பை, ‘சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை’ என்ற சிறுகதைக்காக சாகித்ய அகாடமி விருதைப் பெறுகிறார். சாகித்ய அகாடமி விருதுடன் ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் ஏழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது. 1955-ம் ஆண்டிலிருந்து சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுவரும் நிலையில், இதுவரையிலான விருதாளர்களில், ராஜம் கிருஷ்ணன் (1973), லட்சுமி திரிபுரசுந்தரி (1984), திலகவதி (2005) ஆகியோரைத் தொடர்ந்து, இந்த விருதைப் பெறும் நான்காவது பெண் எழுத்தாளர் அம்பை ஆவார்.

இந்த அறிவிப்பை அடுத்து பேட்டியளித்த எழுத்தாளர் அம்பை, ”சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. வாசிப்பு குறைந்துள்ளது என்பதைத் தாண்டி வாசிப்பு முறை மாறியுள்ளது!” எனத் தெரிவித்துள்ளார்.

லஷ்மி என்னும் இயற்பெயர் கொண்டவர் அம்பை. அவர் தென்னகத்துத் திராவிடர் பெண் தெய்வமாம் அம்பையின் பெயரைச் சூடிக்கொண்டு எழுத்துலகில் பிரவேசித்தவர். 1944-ல் கோயம்புத்தூரில் பிறந்தார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பும், பெங்களுரூவில் முதுகலைப் படிப்பும் கற்ற அம்பை, தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வை முடித்தார். அதன் பிறகு, தமிழ்நாட்டில் பள்ளி ஆசிரியராகவும், கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர், திரைப்பட இயக்குநர் விஷ்ணு மாத்தூரைத் திருமணம் செய்துகொண்டார்.

அவரைப்பற்றி பிரபல எழுத்தாளரும் விமர்சகருமான வெங்கட சாமிநாதன் அவர்கள் குறிப்பிடும்போது “வேடிக்கையான முரண்தான், லஷ்மி என்ற பெயர் கொண்ட, ஒரு தீவிர பெண்ணியவாதி பழமையின் நினைவலைகளை எழுப்பும் வகையில் அம்பை என தனக்குப் புனைபெயர் சூட்டிக்கொண்டது. ஆனால் அந்தப் பெயர் பெங்களூரில் தன் பாட்டியின் கவனிப்பில் வளர்ந்து வந்த ஒரு பள்ளிச் சிறுமி தானும் தமிழில் கதை எழுதுகிறேன் என்று மற்ற பெண் எழுத்தாளர்களைப் போல ஒப்புக்கொள்ளப்பட்ட வரம்புக்குள் ‘நல்ல’ கதைகள் எழுதத் தொடங்கியபோது சூட்டிக் கொண்ட பெயர். எழுதும் திறமையும் ஆசையும் தான் அம்பையுடையது. அவர் கதைகள் நமக்குப் காட்டிய உலகமோ அம்பையின் பாட்டியும் அம்மாவும் கொண்டிருந்த பாரம்பரிய நம்பிக்கைகளும் அம்பைக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்ததும் தான். அந்த உலகம் தான் அம்பைக்கு அந்த வயதில் படிக்கக் கிடைத்த எழுத்துக்களும்.” என்று குறிப்பிடுகின்றார்.

இந்திய சமுதாயத்தில் பெண்களுக்கான இரண்டாந்தர நிலை பற்றி அம்பை சிந்தித்து தனது எழுத்துக்களில் அவற்றிற்கான விடைகளைத் தேடியுள்ளார். பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை மிகத் துணிந்து தனது கதைகளில், எழுத்துக்களில் வடித்து வெற்றி கண்டவர். பள்ளி மாணவியாக இருக்கும்போதே எழுத ஆரம்பித்த அம்பை தனது புரட்சிகர எழுத்துக்களைப் பிரசுரிக்க பல பத்திரிகைகளை நாடிய போதிலும் அவை அவருக்குக் கைகொடுக்க முன்வரவில்லை அவரது எழுத்துக்கள் இந்திய சமுதாய மரபுமுறைகளுக்கு மாறானவையாக அவற்றைக் கண்டிப்பனவாக அமைந்தமையே அதற்குக்காரணமாக அமைகின்றது. பெண் என்றால் அவள் கணவனை இழந்தாலோ அன்றி அவனால் கைவிடப்பட்டாலே வீட்டு மூலையில் ஒதுங்கி இருக்கவேண்டியவள் என்ற அடிப்படை வேதாந்தத்தை உடைத்தெறியும் பாங்கில் எழுதத் தொடங்கியமையே பிரபல பத்திரிகைகள் அவரது படைப்புக்களை பிரசுரிக்க மறுத்ததற்கான காரணங்கள் ஆகும்.

பெண் எழுத்தாளர்களின் வரவு அதிகரிக்கத்தொடங்கிய காலகட்டத்தில் தான் அம்பையும் வந்திருந்தார் எனினும் மற்றைய எழுத்தாளர்களிலிருந்து தன்மை வேறுபடுத்திக் காட்டும் வகையில் அமைந்தது அவரது கதைகள். ‘அந்தி மாலை’ (நாவல்) ‘சிறகுகள் முறியும்’ (1976) – (முதலாவது தொகுதி – ஓர் பெண்ணின் வாழ்வில் ஏற்படும் பலவிதமான சம்பவங்களை சம்பிரதாயங்களை பேசும் கதைகள்), ‘வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை’ (1988) ‘காட்டில் ஒரு மான்’ (2000) ‘சக்கர நாற்காலி’, ‘ஸஞ்சாரி’, ‘தண்ணியடிக்க’, ‘வற்றும் ஏரியின் மீன்கள்;’ (2007), ‘பயணப்படாத பாதைகள் ‘சொல்லாத கதைகள்’ (சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றிய பெண்கள், தலித்எழுத்தாளர்கள் ஆகியவர்களின் வாய்மொழி வரலாற்றுப்பதிவு) என்பன அம்பையின் வெளிவந்த தமிழ் நாவல்கள்.

அம்பையின் ‘காட்டில் ஒரு மான்’ நூல், லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது. இந்திய மொழிகளில் புனைவு மொழிபெயர்ப்புக்கான Vodafone Crossword Book Award-ஐ லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராமுடன் இணைந்து 2016-ல் பெற்றார் அம்பை. தமிழிலக்கியத்துக்கான அம்பையின் பங்களிப்புகளுக்கான, கனட இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது 2008-ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.