August 8, 2022

கல்வி கடன் ரத்து அறிவிப்பு : ஸ்டாலின் அரசு சொன்னால் மோடி அரசு ஏற்குமா?

மாணவர்களின் கல்விக் கடன் சார்ந்த திமுகவின் தேர்தல் வாக்குறுதி தமிழக மாணவர்களிடையே பரபரப்பாகப் பேசப்படுகிறது. பல்வேறு யூகங்களை வைத்து, விதவிதமான வியூகங்களை வகுப்பதில் பெற்றோர் முனைப்பு காட்டி வருகின்றனர். எனவே இதுதொடர்பான மிகத் தெளிவான விளக்கத்தைத் தருவது தான் திமுக முன் இருக்கின்ற முக்கியமான சவால். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ள அம்சங்களில் ஒன்று இதோ: “30 வயதுக்கு உட்பட்ட தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்”. இதுதொடர்பாகத் தான் மாணவர்கள் பரவலாகப் பகிர்கின்றனர்.
எனவே கல்விக் கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் பயன் அடையப் போகும் மாணவர்கள் யார் யார், அவர்களின் தகுதிகள் என்னென்ன என்று தமிழக அரசு தீர்மானிக்க வேண்டும்.

ஒரு தேசியமய வங்கியின் மூத்த அதிகாரியிடம் இதுகுறித்து நான் விவாதித்தேன். ” தமிழகத்தில் மாணவர்களின் கல்விக் கடன் தொகை சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய்” என்று தெரிவித்தார். இந்த கல்விக் கடன்களை வழங்கியவை தேசியமய வங்கிகள், தனியார் வங்கிகள், அயல்நாடுகளின் வங்கிகளது தமிழகக் கிளைகள், மாற்றுக் கடன் திட்டத்தின் கீழ் கூட்டுறவு வங்கிகள் என பலதரப்பட்ட வங்கிகள் இக்கல்விக் கடன்களை வழங்கியுள்ளன. இவற்றில் தேசியமய வங்கிகள் எனில், அவை மத்திய அரசைக் கேட்டுத்தான் எந்த முடிவையும் எடுக்கும். இதில் குறுக்கே ரிசர்வ் வங்கியும் உண்டு. தனியார் வங்கிகளைப் பொறுத்தவரை அரசின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கும் என்று எண்ணிவிட முடியாது. ரிசர்வ் வங்கியின் அழுத்தமான ஆணைகள் வேண்டுமானால் ஓரளவுக்குப் பயன் கொடுக்கக்கூடும். ஆனாலும் இதை ரிசர்வ் வங்கி செய்யுமா? பாலைவனத்தில் பனிமலரைத் தேடும் கதைதான்.

அயல்நாடுகளின் வங்கிகளது கிளைகள் தமிழ்நாட்டில் உள்ளன. வெளிப்படையாக வெறுப்பை விதைத்தபடியேதான் இவை மறுப்பைப் பரப்பும். கூட்டுறவு வங்கிகள் மட்டுமே மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்துவந்தன. இவையும் மத்திய அரசின் ஒற்றை ஆணையின்படி நேரடியாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டன. தற்போது இந்த கூட்டுறவு வங்கிகளின் மீதான மாநில அரசுகளின் அதிகாரம் என்னென்ன என்பது குறித்து இன்னும் தெளிவான அறிவிக்கை வெளியாகவில்லை. எனவே இன்றைய நிலையில் கூட்டுறவு வங்கிகளின் மீது ஆதிக்கம் செலுத்தும் அதிகாரத்தையும் மாநில அரசுகள் பறிகொடுத்து நிற்கின்றன. தேர்தல் நடத்திக் கூட்டுறவு வங்கிகளுக்கு மக்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்துவந்த மாநில அரசுகள், இப்போது வேல் இழந்த வேடனாய் நிற்கின்றன.

இந்த நிலையில் கல்விக்காக பர்சனல் கடன், அடமானக் கடன் போன்ற மாற்றுத் திட்டக் கடன் தொகையை ரத்து செய்ய ஆணையிடும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டா? மாணவர்கள் நிலுவை வைத்துள்ள கல்விக் கடன்களை அவர்களின் சார்பில் தமிழக அரசே கட்டினால் தான் உண்டு. தேர்தல் வாக்குறுதியைத் திமுக கொடுத்ததாலும், அக்கட்சியே ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்டதாலும், ஏராளமான மாணவர்கள், கல்விக் கடன் தவணை கட்ட வசதி இருந்தும், பணம் செலுத்தாமல் அமைதி காக்கின்றனர். அரசே கட்டப் போவதாக அறிவிப்பு வந்துவிட்ட பின்பு அவர்கள் எப்படித் தவணைத் தொகையைக் கட்டுவார்கள்? வங்கிக்கடன் திருப்பிச் செலுத்துதல் தொடர்பாக தமிழக அரசு காலம் தாழ்த்திக் கொண்ட போனால் கடன் சுமையானது வட்டி, அபராத வட்டி என்ற பெயரில் உயர்ந்து கொண்டே போகும். அந்த பளுவையும் தமிழக அரசே சுமக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விடும். எனவே எவ்வளவு விரைவில் அரசு முடிவு எடுக்கிறதோ… அவ்வளவு கடன் சுமை குறையும். இதில் தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசர அவசியம் ஆகும்.

இனி தமிழக அரசு என்ன செய்யவேண்டும்? கடன் தள்ளுபடித் திட்டத்துக்குத் தகுதியானவர்களின் பட்டியலைத் தயாரிக்க வேண்டும். இவர்களின் மொத்தக் கடன்களைக் கணக்கிட்டு எடுக்க வேண்டும். மத்திய அரசுக்குச் சொந்தமான வங்கிகள் மற்றும் தேசிய வங்கியின் அறிவிக்கைகளுக்கு அடங்கி நடக்கும் தனியார் வங்கிகள் ஆகியவற்றின் வங்கிக் கடன் தொகையைத் தனியே தொகுத்தெடுக்க வேண்டும். பின்னர் இத்தொகையைத் தமிழக அரசே கட்டுவது குறித்துக் கொள்கை முடிவு எடுக்கலாம். இந்த தொகையைப் பாதியைவிடக் குறைவாக மாற்றி, அதனைக் கட்டுவதற்கும் கூட வழிகள் உண்டு. இந்திய வங்கிகள் அனைத்திலுமே ஒரே முறையில் பணம் செலுத்தும் முறை உண்டு. “ஒன் டைம் செட்டில்மென்ட்” என்று அதற்குப் பெயர்.
வங்கிகளில் என்.பி.ஏ. எனும் கணக்கில் இருக்கும் நிலுவைத் தொகை அதிகரித்தால் அந்த வங்கியின் மீதான நம்பிக்கைக் குறையும். வெளிச்சந்தையில் அந்த வங்கியின் மீதான மதிப்பு குறையும். இதனால் பங்கு மார்க்கெட்டில் அவ்வங்கியின் பங்கும் வீழ்ச்சி அடையும்.

அனைத்துக்கும் மேலாக அந்த வங்கியின் இந்த வராக்கடன் சுமை காரணமாக அனைத்து வளர்ச்சித் திட்டங்களின் போதும் பாதிப்பு ஏற்படும். ஒருகாலத்தில் இந்தியன் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் நிலை ஏற்பட்டதை இங்கு நினைவு கூர்ந்திடலாம். எனவே வராக் கடன் தொகையின் அளவைக் குறைக்கத் தான் வங்கிகள் ‘ஒன் டைம் செட்டில்மென்ட்’ என்ற சலுகைத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளன. இவற்றின் மூலமாகப் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் தொகையை வங்கிகள் மீட்டெடுத்து இருக்கின்றன.

எனவே, ” இதே திட்டத்தின் கீழ் மாணவர்களின் கல்விக் கடன் அளவை பாதிக்கும் குறைவாக நிர்ணயம் செய்து அறிவித்தால் அத்தொகையைக் கட்டத் தயார்” என்று தமிழக அரசு அறிவிக்கலாம். இதற்கான அறிவிப்பை ஆளுநர் உரையில் மாநில அரசு வெளியிடலாம். பின்னர் தமிழக அரசின் டெல்லிப் பிரதிநிதி மூலமாகவும், இதர அதிகாரிகளின் வாயிலாகவும், முதல் அமைச்சரே நேரடியாக டெல்லியுடன் தொடர் கொண்டும் இதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.

லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன் தொகையை இந்திய வங்கிகள் கார்பொரேட் அதிபர்களிடம் இருந்து வசூலிக்காமல் தள்ளுபடி செய்திருக்கின்றன. இதேபோன்று ஒன் டைம் செட்டில்மென்ட் தொகையில் வங்கிகள் விட்டுக் கொடுத்த தொகையைக் கணக்கிட்டால் அதுவும் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டக் கூடும். இவற்றில் தாராளம் காட்டும் மத்திய அரசு, தமிழக மாணவர்களின் கல்விக் கடன் மீதும் கருணை பொழியாதா?

நூருல்லா ஆர். செய்தியாளன்

18-06-2021.