திறந்த புத்தகத் தேர்வு முறை சரிதான் : ஆனால்..!?

திறந்த புத்தகத் தேர்வு முறை சரிதான் : ஆனால்..!?

புத்தகங்களைப் பார்த்து எழுதலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறதாம். வழக்கம்போல ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பொங்கல்கள் சமைக்கப்படுகின்றன. நான் என்னளவில் திறந்த புத்தகத் தேர்வுக்கு ஆதரவாளன். என் வேலை தொழில்நுட்பப் பொறியாளர்களுக்கு இயந்திரங்களின் இயங்குமுறையைக் கற்பிப்பது என்பதால், என் வகுப்புகளில் முதலில் சொல்வது – புத்தகங்களைப் பார்க்காமல் வேலையில் இறங்காதீர்கள், நீங்கள் மனப்பாடம் செய்த நாளில் இருந்து எவ்வளவோ மாறியிருக்கலாம்.அப்படிப்பட்ட நபர்களுக்குச் சொல்லித்தருவதால், தேர்வையும் திறந்த புத்தகத் தேர்வுமுறையாகத்தான் அமைப்பேன். ஞாபகசக்தியை மதிப்பிடுவது நோக்கமல்ல, சரியான விடையை விரைவாகத் தேர்ந்தெடுக்கும் திறனை மதிப்பிடுவதுதான் நோக்கம் என்பதால்.

ஆனால், அடிப்படையில் இரண்டுவிதமான தேர்வு முறைகளுக்கும் கேள்வியின் விதத்தில் வித்தியாசம் இருக்கும், இருக்கவேண்டும். வழக்கமான தேர்வு முறையில் கேட்கப்படும் “மேற்படி விதியை வரையறு” “இதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம், கூறு” போன்ற கேள்விகள், திறந்த புத்தகத் தேர்வைக் கிண்டல் செய்வதாகத்தான் அமையும். அரை நொடி கூகுள் தேடலில் காபி பேஸ்ட் செய்துவிடுவதையா திறன் என்று சொல்ல முடியும்?

விதிகளையும் தேற்றங்களையும் தேடி எடுத்துக்கொள், அவற்றைப் பயன்படுத்தி, இந்தக் கணக்கைப் போடு – போன்ற கேள்விகள்தான் தேவை. ஆனால் அப்படிக் கேள்விகள் அமைக்கப்படுகின்றனவா? அப்படிப்பட்ட கேள்விமுறைதான் புழங்கும் என மாணவர்கள் தயார் படுத்தப்பட்டிருக்கின்றார்களா? இந்தத் தயார்படுத்தல்கள் இல்லாமல் கடைசி நிமிடத்தில் “இவருக்குப் பதிலாக இவர்” எல்லாம் ஏமாற்றுவேலை.

ஒருவருடம் ஆகிவிட்டது, கிராமப்புற/ இணைய வசதியில்லா மாணவர்களுக்கு எப்படிக் கற்பிப்பது, தேர்வு இருக்குமா இருக்காதா, இருந்தால் என்ன மாதிரித் தேர்வு நடக்கும் என்பதில் எல்லாம் ஒரு தெளிவும் இல்லாமல்தான் (நான் கவனிக்கும்) சி பி எஸ் ஈ இருக்கிறது; மற்ற பாடத்திட்டங்களும் அப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன். தேர்வு தினம் வரை மாணவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி, கடைசி நிமிடத்தில் இல்லை என்றோ மாற்றுமுறை என்றோ சொல்வது கொடுமை.

இன்றைய நாளுக்கான தீர்வு தேவைதான், ஆனால் பின்னணியில் நீண்ட காலத்திற்கான திட்ட வரைவும் தேவை. இந்த நிலை அடுத்த வருடமாவது மாறுமா என்ற தெளிவும் இல்லை. ஒருவருடம் என்ற நீண்ட காலத்தை் அன்றன்றைய தீயணைப்பாகவே போக்கிக்கொண்டிருக்கும் கல்வி அமைப்புகள், அடுத்த வருடமும் மாறும் என்ற நம்பிக்கையும் இல்லை. யூகேஜி முதல் பிஎச்டி வரை கட்டணம் வாங்க மட்டுமே ஆன்லைன் வைத்திருக்கும் நிறுவனங்களுக்கும் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை.

இதில் நான் நேரடியாகப் பாதிக்கப்படவில்லைதான். என் கடைசி மகளும் போனவருடமே இந்தத் தேர்வு முறையில் இருந்து விடுதலையாகிவிட்டாள். ஆனால் அவர்கள் படிக்கும் கல்லூரிகளில் இந்தப் பெருந்தொற்றுக் காலத்துக்கு ஏற்றபடி செய்யப்பட்டிருக்கும் மாறுதல்கள், அவற்றை மாணவர்களிடம் தெரிவிக்கும் வெளிப்படையான அணுகுமுறை ஆகியவை கிடைக்காத மற்ற மாணவர்களைப் பற்றிய ஆதங்கம்தான் இது.

சுரேஷ் பாபு

error: Content is protected !!