December 8, 2022

தங்கத்தை கொஞ்ச காலத்துக்கு கண்டுக்காம இருந்தா என்னவாகும் தெரியுமா?

தங்கம் பாதுகாப்பான முதலீடு என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நம்பிக்கை. கடினமான, அவசரமான தருணங்களில் தங்கம்தான் உதவுகிறது. உடனடியாகப் பணம் கிடைப்பதற்கும் வழியை ஏற்படுத்துகிறது.திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளில், நகைகளையே உடலாக மாற்றிக் காட்சியளிக்கும் பெண்கள் இருந்தனர். தங்க மோகம் அதிகரித்தபோதும், இப்படி அணிபவர்களை இப்போது காண முடிவதில்லை. குறைந்த அளவு நகைகள், அதே சமயம் வடிவமைப்பில் அசத்ததக்கூடியவற்றை அணிவது குறிப்பாக இளம்பெண்களிடம் அதிகரித்துவருகிறது.

இதனிடையே அன்றாடத் தேவைகள் ஆயிரம் இருந்தாலும் தங்கத்தின் மீது மக்கள் காட்டும் அக்கறையே தனிதான். ஒரு பொருளின் தேவை அதிகரிக்கும்போது அதன் மீதான விலையும் அதிகரிக்கும் என்கிறது பொருளாதாரக் கல்வி. தேவை குறையும்போது அதன் விலையும் குறைகிறது. ஆக, சமீப காலமாக தங்கத்தின் விலையில் நிலைத்தன்மை இல்லை. மற்ற முதலீடுகளைக் காட்டிலும், தங்கத்தின் மீதான முதலீடு அவ்வளவு லாபகரமானதாக இல்லை என்றாலும்கூட, தங்கம் கைவிடாது என்ற நம்பிக்கை, மக்களிடம் அகல்வதில்லை. இதற்கேற்ற வகையில் நகைக்கடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நகை சேமிப்பு ‘ரிஸ்க்’ என்று சொல்வதற்கு, இது களவு போகக்கூடியது என்பதுதான் முக்கியக் காரணம். தமிழகத்தில் தினமும் நடைபெற்று வரும் கொள்ளைகள், தங்கத்தைக் குறிவைத்ததாகத் தான் இருக்கின்றன. சில நேரங்களில் குண்டுமணியளவு நகைக்காக உயிர்கள் பறிக்கப்பட்ட கொடூரங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

ஆனாலும் சமீப காலமாக வரலாறு காணாத அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்து வருவது, பின்னர் சிறிதளவே குறைவதும் அனைவருக்கும் கவலை அளிப்பதாக இருக்கிறது. திருமணம் போன்ற விசேஷ நாள்கள் இல்லாத காலங்களில் தங்கத்துக்கான தேவை குறையலாம். அதன் காரணமாக தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு உண்டு.

எனவே, தங்கத்தை நகையாகவோ, முதலீடாகவோ செய்ய, வாங்க விரும்புபவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அறிய வேண்டிய அற்புதம் என்னவென்றால், உலகச் சந்தையில் தங்கத்தின் விலையை கணிசமாக இந்தியச் சந்தைதான் தீர்மானிக்கிறது என்பதுதான். நமது பண்பாட்டில் தங்கம் என்பது வளமையின் அடையாளமாகவும் ஆடம்பரத்தின் சின்னமாகவும் விளங்குவதே தங்கத்தின் மேல் நமக்கு மோகம் அதிகரிக்கக் காரணமாக அமைகிறது என்பதை மறுப்பதற்கில்லை. மேலும், திருமணம் போன்ற சிறப்பு நிகழ்வுகளில் பணமாகக் கொடுத்தால் செலவாகிவிடும்.

நகையாகக் கொடுத்தால் சேமிப்பாகவும் இருக்கும். அவசரச் செலவுக்கும் குடும்பத்திற்கு உதவும். சுற்றத்தினரிடையே மதிப்பும் கூடும். மணமக்களின் வாழ்வு சிறக்க சிக்கலான காலங்களில் இருக்கின்ற தங்க நகைகள் உதவிக்கரம் நீட்டும் என்னும் எதிர்பார்ப்புகளுடன்தான் நமது முன்னோர் இத்தகைய பழக்கங்களை ஏற்படுத்தினர்.

ஆனால், தற்காலத்தில் ஆணுக்கு நிகராக பெண்களும் படித்து தம்மை ஒரு நல்ல பணிக்கு தகுதி யுடையவர்களாக உருவாக்கிக்கொண்டு வருகின்றனர். பல்வேறு தருணங்களில் இருவரும் பணிக்குச் சென்று குடும்பத்தைச் செம்மையாக நடத்தி வருவதை நாம் பார்க்க முடிகிறது. சில சமயங்களில் கணவனைவிட மனைவி நல்ல பதவியில் இருப்பதையும் நம்மால் காண முடிகிறது. எனவே, தங்கம் ஒரு பாதுகாப்புக்கான வாழ்வியல் சாதனம் என்று நாம் இனியும் கருதத் தேவை யில்லை. மேலும், தங்கத்தைப் பாதுகாக்க நாம் எடுத்துக்கொள்ளும் பிரத்யேக முயற்சிகள் நமது பொன்னான காலத்தையும் உழைப்பையும் வீணாக்குகின்றன என்பதே உண்மை.

வங்கிகளில் பாதுகாப்புப் பெட்டகங்கள் பெற்று பாதுகாத்தாலும் அதற்கான கட்டணங்களும், அதைச் செயல்படுத்துவதற்கான செயல்களும் அசாதாரணமானவை. அண்மைக்கால ஊடகச் செய்திகள் அங்கும் பாதுகாப்பு இல்லை என்பதையே உறுதிப்படுத்துகின்றன. வங்கிப் பணியாக ஒரு நாள் சென்றால் அன்று முழுவதும் வேறு பணியைச் செய்ய முடியாது. வீட்டில் தங்கத்தை வைத்திருந்தாலும் நிம்மதி இருக்காது. தங்க நகைகள் மீது கடன் வாங்கி நிம்மதியாக இருக்கலாம் என்றால், அது சார்ந்த ஊடகச் செய்திகள் அதற்கான உத்தரவாதத்தை நமக்குத் தருவதாக அமைவதில்லை.

பெயர் போன நகைக் கடைகளிலேயே கைவரிசை காட்டும் திருடர்கள் நிறைந்த சமுதாயத்தில் நம் நம்பிக்கைக்குரிய இடங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் நமது ஆயுள்காலமே முடிவுக்கு வந்து விடும்போல இருக்கிறது. இதற்கான ஒரே தீர்வு தங்கத்தின் மீது நமக்கு இருக்கும் மோகத்தைக் குறைத்துக் கொள்வதுதான். மேலும், தங்கம் வாங்கும்போது ஏற்படும் செய்கூலி சேதாரக் கணக்கு இன்னும் பல பேருக்குச் சரியாக விளங்காத புதிராகவே இருக்கிறது. தங்கம் வாங்கினால்தானே இவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

முதலீடு என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால்கூட மண்ணின் மீது போடலாம். பின்னர், சொந்தப் பணத்திலோ, வங்கிகள் தரும் கடன் வசதிகளையோ முறையாகப் பெற்று வீட்டு வாடகையை மிச்சப்படுத்தலாம். சொந்த வீடு ஏற்கெனவே இருப்பின் வீட்டு வாடகை என்னும் கூடுதல் வருமானத்தைப் பெறலாம்; நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழலாம்.

தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை குறையும்போது, தங்கத்திற்கான தேவை கணிசமாகக் குறையத் தொடங்கும். தேவையெனில் அப்போது வாங்கிக் குவிக்கலாம். எப்படியும் தங்கத்தை வாங்கி வைத்துக் கொண்டு அதைப் பாதுகாக்க நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய முயற்சிகள், வேலியில் ஓடும் ஓணானை தோளில் தூக்கி போட்டுக் கொள்வதற்குச் சமமாகும். கழுத்தில் அணிந்து கொண்டு நடந்தாலும் நாம் குறைந்தது நான்கு மெய்காப்பாளர்களுடன் நடைபோட வேண்டும். அதுவும் கண்காணிப்புக் கேமராக்கள் உள்ள வீதிகளில், கூடுமானவரை வெளிச்சத்தில் நடைபோடுவதுதான் புத்திசாலி பெண்கள் செய்யும் வேலையாக இருக்கும்.

தற்போதைய சமுதாயத்தில் மக்களிடையே காணப்படும் வறுமை,வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவை பாதுகாப்பான வாழ்வுக்குச் சவாலாக அமைந்துள்ளன. இவற்றை எல்லாம் கண்டு உணர்ந்தவர்கள் பல்வேறு சாத்தியமான ஆபத்துகளிலிருந்து தம்மையும், தம்மைச் சார்ந்தவர் களையும் தற்காத்துக் கொள்வதுதான் அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்.

பாதுகாப்பான முதலீட்டுக்கான வழிகள் நம் கண் முன்னே ஏராளமாக இருக்கும்போது, சிக்கலைத் தராத ஒன்றை நாம் தேர்ந்தெடுப்பதே நலம் பயக்கும் செயலாகும். அப்போதுதான் குழந்தைகளைக் கூட தங்கமே, வைரமே என்று நாம் நிம்மதியாகக் கொஞ்ச முடியும்.

முனைவர் என். பத்ரி