கிளப் ஹவுஸ் என்றழைக்கப்படும் கூடுமடம் – சில குறிப்புகள்!

கிளப் ஹவுஸ் என்றழைக்கப்படும் கூடுமடம் – சில குறிப்புகள்!

கூடுமடத்தில் (தமிழாக்கம் உபயம்: கவிஞர்.தாமரை) அதாவது.. கிளப் ஹவுசில் முகம் காட்டாமல் சில நாட்கள் அங்குமிங்கும் உலவினேன். இளையராஜாவின் பாடல்களில் பொதிந்திருக்கும் நுணுக்கங்களை பிரித்து மேய்ந்தார்கள் ஒரு அறையில். அவரின் தீவிர ரசிகர்களும் அதீத இசை ஞானத்துடன் இருப்பது தெரிகிறது.

Patt

புதிதாக தொழில் துவங்கியவர்கள் ஆர்வலர்களுக்கு அட்வைஸ் செய்த அறையில் உபயோகமாக பல தகவல்கள் பேசினார்கள். ஜி.எஸ்.டி எண் மட்டும் இருந்தால் வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதாக ஒருவர் சொன்னார்.

மலேஷியா வாசுதேவனை பரவசத்துடன் கொண்டாடியது ஒரு அறை.

எது கருத்துரிமை என்று உச்சக் குரலில் ஆவேசம் காட்டியது ஒரு அறை. ஒரு கருத்தை லைக் செய்ததற்கெல்லாம் கைதுகள் நடந்திருக்கிறதே என்று கொந்தளித்தார் ஒருவர்.

ஹரஹரமஹா தேவகி ஸ்வாமிஜி இங்கேயும் வந்துவிட்டார். முதல் காதல் அனுபவத்தை வற்புருத்திக் கேட்டும் பலரும் தனக்கு அந்த அனுபவம் இல்லை என்று பொய் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

இன்னொரு அறையில் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான எஸ்.டி. மில்டன் இனி எல்லா இயக்குனர்களுமே தயாரிப்பாளர்களாகி விடுவார்கள் என்றார். ஒரு ரசிகர் கேட்டதற்காக டிஜிட்டல் கேமிராவிலும் ஏன் பல வகை லென்ஸ்கள் அவசியம் என்று பொறுமையாக விளக்கினார்.

சோனி லைவ் ஓ.டி.டி தளத்தின் தமிழ் நிர்வாகியாக பொறுப்பேற்றுள்ள தனஞ்ஜெயன் (வாழ்த்துகள் சார்!) வெப் தொடர்களின் எதிர்காலம், அதில் இருக்கும் வாய்ப்புகள் குறித்து விரிவாகப் பேசினார். இங்கே எழுத்தாளர்களின் பங்குதான் முக்கியம் என்றார். (இதை அவர்களுக்கான சம்பளம் பேசும்போது நினைவு வைத்துக்கொண்டால் சரி..)

வெட்டித்தனமான அரட்டைகளும், விஷமமான அரட்டைகளும், விஷயமுள்ள அரட்டைகளும், ரசனையான அரட்டைகளும் கலந்துகட்டியிருக்கிறது. ஆனால் எந்த அறைக்குள் நுழைகிறோம் என்பது நம் தேர்வில்தானே இருக்கிறது.

ஒரு செளகரியம்.. அரட்டையில் கலந்துகொண்டேயாக வேண்டும் என்று அவசியமில்லை. பேச விரும்பினால் கையைத் தூக்கி அனுமதி பெற்று பேசலாம். அல்லது போரடிக்கும் வரையிலும் ஒட்டுக்கேட்டுவிட்டு வந்த சந்தடியில்லாமல் விலகிவிடலாம்.

பத்திரிகைகளுக்கு ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், மீம்ஸ் ஆகியவை கண்டென்ட் கொடுப்பதைப்போல இனி க்ளப் ஹவுசில் கேட்டவை என்றும் ஒரு பகுதி வரலாம். (எனக்கு ஒரு பதிவுக்கான கண்டென்ட் கொடுத்திருக்கிறது)

குரலால் மட்டுமே இணைந்து பேசும் இந்தப் புதிய சமூக தளம் நேரத்தை இன்னும் கொள்ளையடிக்கப் போவது நிச்சயம். எக்கச்சக்கமாக நேரம் வைத்திருப்பவர்கள் பயன்படுத்தலாம். எனக்கு கட்டுப்படியாகாது,

பட்டுகோட்டை பிரபாகர்

error: Content is protected !!