கொரோனாவுடன் விளையாடலாம் என கம்பு சுற்றுபவர்கள் யார்?

கொரோனாவுடன் விளையாடலாம் என கம்பு சுற்றுபவர்கள் யார்?

கொரோனா வேகமாக பரவினாலும் உயிரிழப்பு குறைவுதான்; அதுவும் தமிழகத்தில் மிகமிக குறைவு; எனவே, பயப்படாதீர்கள்; கொரோனாவுடன் விளையாடலாம், கட்டிப் பிடிக்கலாம், கொஞ்சலாம் என்கிற மாதிரி பேசுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு ஒவ்வொரு தடைகளாக நீக்குவது மாதிரி மக்களும் தற்காப்பு நடவடிக்கைகளை தளர்த்துகிறார்கள். சென்னையில் நாங்கள் குடியிருக்கும் அடையாளம்பட்டு கிராமத்தில் வெளியாட்கள் உள்ளே வருவதை தடுக்க சாலையை அடைத்து வைக்கப்பட்டிருந்த முள்வேலியை நேற்று நீக்கிவிட்டார்கள்.!

சரி, உண்மையிலேயே கொரோனா உயிரிழப்பு சதவிகிதம் குறைவுதானா?

உலகளவில் இந்த நிமிடம் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 46 லட்சத்து 40 ஆயிரத்து 322. இதில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் 25 லட்சத்து 64 ஆயிரத்து 772. இவர்களின் நிலை இனிமேல்தான் தெரியும். அதாவது, நலம்பெற்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப போகிறவர்கள் எத்தனை பேர்; சிகிச்சை பலனளிக்காமல்…. எத்தனை பேர் என்பது இப்போது நமக்கு தெரியாது; எனவே, இவர்களை கழித்துவிடலாம்.

முடித்து வைக்கப்பட்ட பாதிப்புகள் 20 லட்சத்து 75 ஆயிரத்து 550. இதில் 17,66,722 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார்கள். 3,08,828 பேர் மரணமடைந்துள்ளார்கள். அதாவது முடித்து வைக்கப்பட்ட வழக்குகளில் 85% நலம் பெற்றுள்ளார்கள்; 15 சதவிகித்தினர் இப்போது இல்லை. 15 சதவிகித்தினர் மரணம் என்பது அலட்சியப்படுத்தக்கூடிய எண்ணிக்கை இல்லை. இதே நிலையில் தொடர்ந்தால் முடித்துவைக்கப்பட்ட பாதிப்புகள் ஒரு கோடி ஆகும்போது 15 லட்சம் பேர் இறக்க வேண்டியதிருக்கும்.

இன்னொரு பக்கம், எல்லோர் கவனமும் கொரோனாவில் குவிந்துள்ளதால் மருத்துவ மனைகளில் போதுமான சிகிச்சை கிடைக்காமல் மரணமடையும் மற்ற நோயாளிகள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்துக்கு வருவோம்…

பத்து நாட்களுக்கு முன்னால், “தமிழகத்தில் இறப்பு சதவிகிதம் வெறும் 0.72% மட்டுமே” என்று சொல்லப்பட்டது. இது மொத்த பாதிப்பில் பலியானவர்கள் விகிதம். அப்போது மொத்த பாதிப்பு 4829, பலியானவர்கள் 35. ஆனால், இப்படி கணக்கிடுவது சரியா என எனக்கு கேள்வி எழுகிறது. சிகிச்சையில் இருப்பவர்களின் வரும் நாட்களை ஜாதகக்காரர்களாலும் கணிக்க முடியாது என்பதால் அவர்களை நலம் பெற்றவர்கள் விகிதத்தில் சேர்க்காமல் சிகிச்சையில் இருப்பவர் களாகத்தான் காட்ட வேண்டும். முடித்து வைக்கப்பட்ட பாதிப்புகளில் நலம் பெற்றோர் எத்தனை, பலியானோர் எத்தனை விகிதம் என்று பார்ப்பதுதான் சரியாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

அதன்படி பார்த்தால் நேற்று தமிழக சுகாதார துறை வெளியிட்ட விவரங்கள் படி, தமிழகத்தில் முடித்துவைக்கப்பட்ட வழக்குகள் 2670. இதில் நலம் பெற்றவர்கள் 2599, உயிரிழந்தோர் 71. அதாவது ஃபைல் க்ளோஸ் பண்ணப்பட்ட பாதிப்புகளில் நலம் பெற்றோர் 97.34%, பலியானோர் 2.66%. உலகளவிலான 15% உடன் ஒப்பிடும்போது 2.66% குறைவுதான். இந்த நிலையை தொடர்வது, உயிர்ப்பலியை குறைப்பது அல்லது அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது நம் கையில்தான் உள்ளது.

கொரோனாவுடன் விளையாடலாம் என கம்பு சுற்றுபவர்கள் டாக்டர்கள் இல்லை என்பதையும், டாக்டர்கள் குழு ஊரடங்கு தளர்வு குறித்து பரவல் அதிகமாகும் என்று எச்சரித்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்னொரு பக்கம், “டெல்லி அரசு கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக அம்பலப் படுத்துகிறது” என ஒரு கட்டுரையை பகிர்ந்துள்ள ரவிக்குமார் எம்.பி., “மறைப்பது டெல்லி மட்டும்தானா? மற்ற மாநில அரசுகள் தரும் புள்ளி விவரம் நம்பகமானதுதானா?” என்ற ஐயத்தையும் எழுப்பியுள்ளார்.

ஆகவே, தற்பாதுகாப்பை தளர்த்த வேண்டாம்; கொரோனாவை அலட்சியப்படுத்த வேண்டாம்.

தளவாய் சுந்தரம்

Related Posts

error: Content is protected !!