January 22, 2022

அதிகரித்து வரும் வாரிசுரிமை அரசியல்!

எந்த ஒரு அரசியல் கட்சியும் பலரின் உழைப்பில் உருவாகிறது. பலரின் நிதி அளிப்பிலும் கூட.சிலர் தங்கள் குடும்பத்தின் முன்னேற்றத்திற்குச் செலவிடும் நேரத்தையும் உழைப்பையும் விட தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் வளர்ச்சிக்காகச் செலவிடும் நேரமும் உழைப்பும் பொருளும் அதிகம். தங்கள் தலைவர் மீதிருக்கும் ஈர்ப்பின் காரணமாக அவர்கள் இவ்விதம் இயங்குகிறார்கள்.

அவர்களது குழந்தைகளுக்கு கட்சித் தலைவரின் பெயரோ, கட்சியின் சின்னத்தின் பெயரோ சூட்டப்படும். சில நேரங்களில் ஒரு சிறு தொகையைப் பெற்றுக் கொண்டு கட்சியின் தலைவரே அதைச் சூட்டுவதுண்டு. அவர்கள் வீடுகளில் குடும்பத்து முன்னோர்களின் படங்களோடு கட்சித் தலைவரின் படங்களும் இடம் பெற்றிருக்கும். குலதெய்வம் கோயில் திருவிழாவிற்குப் போவது போல அவர்கள் குடும்பத்தோடு கட்சியின் மாநாடுகளுக்கு போவார்கள். (சற்றொப்ப இது மதத்தலைவர்களையோ, மடத்தின் தலைவர்களையோ பின்பற்றுவதைப் போலத்தான். இந்தப் போக்கை ஆங்கிலத்தில் cult என்று சொல்வார்கள்)
இதனால் இந்தக் குடும்பத்தில் பிறந்தவர்கள் அந்தக் கட்சியின் மீதோ, கட்சித் தலைவர்கள் மீதோ ஈடுபாட்டோடு வளர்வார்கள். வளர்ந்த பின் அந்தக் கட்சியின் உறுப்பினராகவோ, அனுதாபியாகவோ ஆவார்கள். இது இயல்பு

இவ்விதம் தொண்டர்களால் கட்டப்படும் கட்சியின் தலைமை தனக்களிக்கப்பட்ட அதிகாரத்தைத் தனக்குப் பின்னால், பெரும் பாலும் தான் இருக்கும் போதே தங்களது குடும்பத்தினருக்கு மாற்றிவிடுவார்கள். அந்தக் குடும்பத்தினர் அதுவரை கட்சிக்கு, அதன் வளர்ச்சிக்கு, முதலில் குறிப்பிட்ட தொண்டர்களைப் போல உடலுழைப்பால் அல்லது தியாகங்களால் பெரிதும் பங்களித்திருக்க மாட்டார்கள். ஆனாலும் தலைவர்கள் தங்கள் அதிகாரத்தை அவர்களுக்கு மாற்றிவிடுவார்கள். காரணம் பெரும்பாலும் அதிகாரத்தைக் கொண்டு ஈட்டிய வளங்களைக் காத்துக் கொள்வதாக இருக்கும். அல்லது அந்த வளத்தை ஈட்டுவதற்கு மூல காரணமாகிய அதிகாரத்தைத் தங்களால் முடியாத போது தங்கள் குடும்பத்தினரிடமே, அதாவது மறைமுகமாக தங்களிடமே, தக்க வைத்துக் கொள்வதற்காக இருக்கும்

இந்திரா காந்தி இந்தியன் ஏர்லைன்ஸ் பைலட் ஆக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த தனது மகன் ராஜீவ் காந்தியிடம் பொறுப்பை ” ஒப்படைத்தது” போல. அவருக்குப் பின் அவர் மனைவி, அவருக்குப் பின் அவர் மகன் என அது தொடர்வது போல. தேவிலால் தன் மகன் செளதாலாவிடம் கொடுத்ததைப் போல. சரண்சிங் அஜித் சிங்கிடம் கொடுத்ததைப் போல. முலாயமி டமிருந்து அகிலேஷ் எடுத்துக் கொண்டதைப் போல. சரத்பவாரிடமிருந்து அவர் மகள் சுப்ரியாவிற்குப் போனதைப் போல. பிரகாஷ் சிங் பாதலிடமிருந்து அவர் குடும்பததினருக்குப் போனதைப் போல. தேவே கெளடாவிடமிருந்து குமாரசாமிக்குப் போனதைப் போல.சந்திரபாபு நாயுடுவிடமிருந்து அவர் மகனுக்குப் போவதைப் போல. சந்திரசேகர ராவிடமிருந்து அவர் மகள், மகனுக்குப் போய்க் கொண்டிருப்பதைப் போல

கருணாநிதி தன்னோடு கூட்டங்களுக்கு வந்து கொண்டிருந்த மகளுக்கும் பேரனுக்கும் கொடுத்ததைப் போல. டாக்டர் ராமதாஸ், மருத்துவத் தொழிலில் இருந்த மகனுக்கு அதிகாரம் கொடுத்தது போல.சசிக்லா தனது மகன் முறை உறவான தினகரனிடம் கட்சிப் பொறுப்பை ஒப்ப்டைத்ததைப் போல.,

இது “முறையாக” அதாவது கட்சியின் சட்ட விதிகளைப் பின்பற்றிச் செய்யப்படும். கடசியின் இரண்டாம் நிலையில் இருப்பவர்கள் அதை எதிர்க்க மாட்டார்கள். எதிர்த்தால் அவர்களது அதிகாரம் பறி போகும். அவர்களுக்கும் அதிகாரம்தான் வளத்திற்கான மூல ஊற்று.

இன்னொன்றையும் பார்க்கலாம். சிலர் தந்தை அல்லது தாய் அரசியலில் இருந்ததன் காரணமாக அரசியல் ஈடுபாடு கொண்டு அரசியலுக்கு வருவார்கள். ஆனால் ‘அதிகாரம்’ பெற மாட்டார்கள். மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி பாஜகவில் உறுப்பினராக இருக்கலாம். ஆனால் பாஜகவை வழி நடத்தும் அதிகாரத்தை அவர் தன் தாயின் காரணமாகப் பெற முடியாது, ராகுல் பெற்றிருப்பதைப் போல [ ஒருவேளை சஞ்சயின் மரணத்திற்குப் பின் இந்திராவுடன் பிணக்குக் கொள்ளாமல் அவருடனேயே தொடர்ந்திருந்தால் இன்று ராகுல் இருக்கும் இடத்திற்கு வருண் வந்திருக்கக் கூடும். ஏனெனில் காங்கிரஸ் கட்சி அதற்கு இடமளிக்கும். பாஜகவில் அது சாத்தியமில்லை]

ஓ.பி.எஸ் மகன் அதிமுக வேட்பாளராகக் களம் இறங்கலாம், ஆனால் அதிமுகவை வழிநடத்தும் அதிகாரத்தைப் பெற இயலாது ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் எம்.பி. ஆக இருக்கலாம். ஆனால் கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு வருவது கடினம்.. என்றாலும் இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும்.

Dynasty என்ற ஆங்கிலச் சொல்லுக்கு a sequence of rulers from the same family என்று விளக்கமளிக்கிறது அகராதி. இதில் முக்கியமான சொல் family அல்ல. Rulers என்பது

மாலன் நாராயணன்