August 12, 2022

மீண்டும் கொரோனா ? என்னக் காத்திருக்கிறது அடுத்து? ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

மீண்டும் கொரோனாத் தொற்றின் அச்சம் உலகைப் பீடித்திருக்கிறது. நோய்த்தொற்றின் சிதைவு வடிவமான ஓமைக்ரான் உலகம் முழுதும் ஏற்கனவே பரவி இருக்கக்கூடும் என்றும்; வேகமாகப் பரவக்கூடியத் தொற்று வடிவமான ஓமைக்ரான் இருமுறை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் பாதிக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். இதனிடையே சர்வதேச விமானப் பயணங்களைத் துவங்குவது குறித்து உலகம் தழுவிய தடுமாற்றம் தெரிகிறது, ஏனெனில் ஏற்கனவே பாதிப்படைந்திருக்கும் பொருளாதாரம் மீண்டும் சுணங்கக்கூடிய நிலை வந்தால் பல அரசுகள் கடும் பாதிப்பைச் சந்திக்கும். இந்தியா தனது மக்களிடையே கடும் அச்சம் தேவையில்லை என்றாலும் வல்லுநர்களின் கருத்து மாறுபட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் 18 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு டிசம்பர் இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கான கட்டாயம் ஏன் திடீரென எழுந்துள்ளது என்பது தெரியவில்லை. ஒருவேளை இம்மாதத் துவக்கத்திலேயே அறிவித்த ஓமைக்ரான் நோய்க்கிருமியின் பரவல் செய்தி வந்திருந்தாலும் அது எப்போது உருவாகியது என்பதும் எங்கெல்லாம் பரவி இருக்கக்கூடும் என்பது குறித்தும் முழுமையாக அறிந்திருக்க இயலாத சூழலில் இப்போதுதான் ஒரு தெளிவு பிறந்துள்ளது போலும்!

கொரோனா சிதைவு வடிவங்களுக்கு கிரேக்க எழுத்துக்களின் பெயர்களையே வைத்து வந்தனர். அதன் வரிசையில் அடுத்து வரவேண்டியது ‘நு’ அல்லது ‘ஸீ’ என்பனவே, ஆனால் ‘நு’ என்பது ‘நியூ’ என்பது போலவும், ‘ஸீ’ என்பது சீன அதிபரின் பெயரைப் போல இருப்பதாலும் அவைகளுக்கு அடுத்தப்படியான ஓமைக்ரானின் பெயர் இச் சிதைவு வடிவத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. கிரேக்க எண்கள் வரிசையில் ஓமைக்ரானின் மதிப்பு ‘70’ ஆகும். இதுவரை நோய்க்கிருமி எந்த நாட்டிலிருந்து கண்டறியப்பட்டதோ அந்த நாட்டின் பெயரைப் பயன்படுத்தி அதை அழைக்கது துவங்கியது பலருக்கு தர்மசங்கடத்தைக் கொடுத்ததால் அதை நிறுத்தவே கிரேக்க எழுத்துக்களைப் பயன்படுத்தத் துவங்கினர். இப்போது பலரும் கேட்கும் கேள்வி கிரேக்க எழுத்துக்களின் எண்ணிக்கையையும் கடந்து சிதைவு வடிவங்கள் வந்தால் அவைகளுக்கு எப்படி பெயர் வைப்பார்கள் என்பதே.

பெயர் எப்படி வைத்தாலும் நோய்க்கிருமி பரவுவதை எப்படி தடுப்பது? அப்படி பரவியிருந்தாலும் அது மேலும் பரவுவதை எப்படி தடுப்பது? இப்போதைய தடுப்பூசிகளால் நோயுறும் ஆபத்தைத் தடுக்க முடியாது என்றாலும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதைத் தடுக்கும் என்றும் சில வல்லுநர்கள் சொல்கின்றனர். குறிப்பாக கோவிஷீல்ட் தடுப்பூசி ஓமைக்ரானுக்கு சவாலாக இருக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால் இந்தியாவில் பரவலாக போடப்படும் இரண்டு தடுப்பூசிகளும் ஓமைக்ரானுக்கு சவாலாக இருக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் அறிவியலர்கள் கூறுகின்றனர். இதையே இங்கிலாந்து நாட்டின் வல்லுநரான காலும் செம்பிள் அந்நாட்டின் அரசிற்கு கொடுத்துள்ள அறிவுரையில் உலக நாடுகள் அச்சப்படுவது போல் ஓமைக்ரான் கடும் ஆபத்தை உருவாக்காது என்கின்றார்.

இருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு நோயின் அறிகுறிகள் கடுமையாக காணப்பட்டாலும் உயிருக்கு ஆபத்தில்லை என்கிறார் செம்பிள். இதையே வல்லுநர்கள் பலர் சொன்னதாலோ என்னவோ இந்திய அரசு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை விரைவுப்படுத்த வேண்டும் என்கின்றது  சிறுவர்களுக்கான தடுப்பூசி போடப்பட வேண்டும் எனும் சூழலில் மீண்டும் இளைஞர்கள் முதல் வயோதிகர் வரை அனைவருக்கும் தேடித்தேடி தடுப்பூசி போட வேண்டிய நிலை எழுந்துள்ளது. ஆனாலும் இந்திய அரசு வீடு தேடிச் சென்று தடுப்பூசி போட வேண்டும் என்ற இயக்கத்தை முன்னெடுக்கும் வேளையில் ஓமைக்ரான் அதற்கொரு பொருத்தமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா உட்பட பல வளரும் நாடுகளில் உடல் ஆரோக்கியம் குறைந்தோரின் எண்ணிக்கை அதிகம். எனவே நோய்க்கிருமி முந்திக்கொண்டு அவர்களை பலி கொள்ளும் முன் தடுப்பூசி போடப்பட வேண்டும். வளர்ந்த நாடுகளிலேயே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு குறைவாக இருக்கும் போது வளரும் நாடுகளில் அது எப்படியிருக்கும்? இப்போது நம் முன் இருக்கும் கேள்வி ஏற்கனவே பிற நோய்கள் இருக்கும் ஆரோக்கியமற்ற மக்களை இந்த ஓமைக்ரானோ அல்லது வேறொரு சிதைவுக் கிருமியோ மக்களை பேரளவு கொல்லும் முன் மக்களுக்கு இதன் ஆபத்து புரிந்து தடுப்பூசி போட்டுக்கொள்வதை மக்கள் இயக்கமாக்க வேண்டும். இல்லையென்றால்…?.

ரமேஷ் பாபு