November 27, 2021

நீட் – முன்னும் பின்னும்!

இந்தியாவின் மக்கள் தொகை அடிப்படையில் நமக்கு 6 லட்சம் டாக்டர்களும் 20 லட்சம் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ அலுவலர்களும் தேவை. இன்றைய நிலவரப்படி, பொதுமக்களுக்கு சேவையாற்றக்கூடிய அரசு மருத்துவர் என்று எடுத்துக்கொண்டால், 1:11,526. அதாவது 11,526 பேருக்கு ஒரு டாக்டரே இருக்கிறார்.எல்லா டாக்டர்களையும் சேர்த்துக் கணக்கிட்டால், 1:1457 என்பதே நமது கணக்கு. அதாவது 1457 பேருக்கு ஒரு டாக்டர்.

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை 1:1000. அதாவது குறைந்தபட்சம் ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டர் தேவை. ஒரு மருத்துவப் பட்டதாரியை உருவாக்குவதற்கு அரசு சுமார் 1.7 கோடி ரூபாய் செலவிடுகிறது. இதில் வெகு சொற்பமாகவே மாணவர்களிடமிருந்து கட்டணமாக வசூலிக்கிறது.

கிராமப்புற மக்கள் அவசர மருத்துவ சேவைக்கு பெரிதும் நம்பியிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல ஒரு டாக்டர்கூட இல்லாமல் செயல்படுவதாக செய்திகள் பதிவாகின்றன.

இன்னொரு பக்கம்….

இங்கிலாந்தில் பதிவு பெற்ற மருத்துவர்களில் 9 சதவிகிதம் பேர் இந்தியாவில் படித்து, பயிற்சி பெற்றவர்கள். கிட்டத்தட்ட 50,000 இந்திய மருத்துவர்கள் இங்கிலாந்தின் பாதி மக்கள்தொகைக்கு சேவையாற்றுகிறார்கள். இந்தியாவில் படித்து, பயிற்சி பெற்ற 1 லட்சத்துக்கும் மேலான டாக்டர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் பணியாற்றுகிறார்கள்.

மேலும்…

இன்றைய நமது மருத்துவப் படிப்பு பெரிதும் வகுப்பறை சார்ந்ததாகவே இருக்கிறது. மாணவர்களுக்கான நடைமுறை மற்றும் நேரடிப் பயிற்சி குறைவே. அதனால்தான், படிப்பு முடிந்து வெளியேறும் மாணவர்களுக்கு நோயாளிகளை தனித்துக் கையாளும் நம்பிக்கை இல்லை. நமது மருத்துவ பாடத்திட்டம் மற்றும் பயிற்றுவிப்பு முறையை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கவலையுடன் கூறுகிறார்கள்.

முதலில் மருத்துவப் படிப்பில் நுழைவதற்கு சமூகத்தின் எல்லாத் தரப்பினருக்குமான நியாயமான வாய்ப்பு அவசியம். பிறகு, மருத்துவக் கல்லூரிகளை அதிகரித்து இடங்களையும் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் மேலே பார்த்தபடி, நமது மக்கள்தொகைக்குத் தேவையான எண்ணிக்கையில் மருத்துவர்களை உருவாக்க முடியும். அதைத் தொடர்ந்து, மருத்துவப் படிப்பின் தரத்தையும் மேம்படுத்த வேண்டும்.

இவற்றில், முதல் கட்டத்திலேயே நமக்கு இத்தனை போராட்டம் என்றால் எந்தக் காலம் மற்றதெல்லாம் நடக்கும்? இவற்றுக்கிடையில், மருத்துவச் சுற்றுலாவின் மையாக இந்தியா (குறிப்பாக சென்னை) திகழ்கிறது என்றெல்லாம் பேசி புளகாங்கிதம் அடைகிறோம்.

நீட்

நீதி நிறைந்திருந்தால் குழப்பம் இராது
நியாயம் மறைந்திருந்தால் தெளிவு வராது