December 8, 2022

பத்திரிகையோ.. மீடியாவோ – வேலையை விட்டு தூக்கறதெல்லாம் சகஜமப்பா!

ஒரு ஊழியர ஒரு கம்பெனி வெளிய அனுப்றது செய்தியே இல்ல. காலம் காலமா நடக்ற சம்பவம். மீடியா கம்பெனி விதி விலக்கு கிடையாது. பத்திரிகைகள்ல நடந்துது. இப்ப சேனல்ஸ்லயும் நடக்குது. திறமைசாலி, அறிவாளி, உழைப்பாளி, நேர்மையாளர், கம்பெனி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்.. இதெல்லாம் நிர்வாகம் எடுக்ற முடிவுக்கு குறுக்க வராது. தங்க ஊசின்னா கண்ல குத்திக்க முடியுமா?னு கேப்பாங்க.

அரசு அலுவலர் நடத்தை விதிகள்னு ஒண்ணு இருக்கு. அரசாங்கத்ல சம்பளம் வாங்றவங்க எதுல்லாம் செய்ய கூடாதுனு அதுல சொல்லிருக்கு. அந்த விதிகள்ல எதாச்சும் ஒண்ண மீறினாலும் வேலை போய்ரும். அரசாங்கமே அப்டி விதிகள் வச்சிருக்கும்போது முதலாளிகள் வச்சிருக்க மாட்டாங்களா.. அரசாங்கம் மாதிரி அச்சடிச்சு குடுக்காட்டியும், வேலைல சேரும்போது எச்சார்ல சொல்லிருவாங்க. சொல்லாததும் இருக்கும். அத போக போக தெரிஞ்சுக்க வேண்டியதான்.

நமக்கு பல நம்பிக்கைகள் இருக்கும். கொள்கைகள் இருக்கும். விருப்பு வெறுப்புகள் இருக்கும். அதுல எதெல்லாம் கம்பெனியோட கொள்கைகளோட ஒத்து போகுதோ அத வெளிப்படையா செயல்படுத்தலாம். ரெண்டு தரப்புக்கும் சந்தோசம். எதெல்லாம் எதிரா இருக்கோ அதை எல்லாம் வீட்ல வச்சு லாக் பண்ணிர வேண்டியதுதான். அல்லது அடக்கி வாசிக்கணும். கோடி கோடியா பணம் போட்ட முதலாளி அவரோட பாலிசிய செயல்படுத்த ஆளுங்கள வேலைக்கு வைப்பாரே தவிர, நம்ம நம்பிக்கைகள நம்ம விருப்பங்கள நிறைவேத்திக்க மேடை போட்டு தர மாட்டார். பெஸ்ட் எம்ப்ளாயர்னு சொல்ற கூகுள்லயும் இது கோல்டன் ரூல். சம்மதம்னா தொடரலாம். இல்லையா.. போய்ட்டே இருக்கணும். இதான் நிதர்சனம்.

சில முதலாளிகள் லாங் ரோப் குடுப்பாங்க. நிர்வாகத்துக்கு உடன்பாடு இல்லாத விஷயங்கள்ல ஈடுபட்றது தெரிஞ்சாலும் உடனே ஆக்சன் எடுக்க மாட்டாங்க. போக போக மாத்திக்குவான்/ள்னு வெய்ட் பண்ணுவாங்க. சில சமயம் அவங்களுக்கே மனசு வராது. சரி, எதுனா பிரச்னை வந்தா பாக்கலாம்னு விட்ருவாங்க. பிரச்ன எந்த ரூபத்ல வரும்னு யாராலயும் சொல்ல முடியாது. வந்தா ஆக்சன்தான்.

பிரபலமான பத்திரிகையாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள்னு ரொம்ப பேரு வேலை இழந்து வெளில போயிருக்காங்க. எல்லா ஸ்டேட்லயும் எல்லா நாட்லயும் நடந்திருக்கு. இப்பவும் நடக்குது. குஷ்வந்த் சிங், அருண் ஷோரினு சில பெயர்கள் இந்தியா பூரா பாப்புலர். இன்னும் பல பெயர்கள் அந்தந்த மொழி அல்லது வட்டாரத்ல ஃபேமஸ். நம்ம தமிழ்நாட்ல ஒரு பிரபலமான மீடியா கம்பெனில அது ஆரமிச்ச காலத்ல இருந்து இன்னக்கி வரைல ஒரு எடிட்டர் கூட ரிடயர் ஆனதே இல்ல. ரொம்ப பிரபலமான எடிட்டர்ஸ் உட்பட எல்லாருமே வேலையில் இருந்து அனுப்ப பட்டவர்கள். பல சந்தர்ப்பங்கள்ல அதுக்கான காரணம் அந்த எடிட்டருக்கும் முதலாளிக்கும் மட்டும் தெரியும்.

மத்த தொழில்கள்ல இருந்து ஊடக தொழில வித்யாச படுத்தி பாக்றதுக்கு எந்த முகாந்திரமும் கிடையாது. ஊடக தர்மம் அல்லது பத்திரிகை தர்மம் ஸ்பெஷல் அய்ட்டம் இல்ல. ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தர்மம் உண்டு. அது மாதிரிதான் இதுவும். வெளிய இருந்து ஒருத்தர் சொல்லியோ மிரட்டியோ ஒரு ஊழியர நீக்கிட்டாங்கனு சொல்றது எதார்த்தம் தெரியாதவங்க பேச்சு. ஒரு கோயின்சிடன்சா இருக்கலாம். அல்லது லாஸ்ட் ஸ்ட்ரானு சொல்லுவாங்களே, அப்படி இருக்கலாம்.

கட்சிக்கோ அரசுக்கோ பயந்து அப்டி செய்ய கூடிய மீடியா முதலாளிகள் யாரும் நம்மூர்ல இல்லை. நக்கீரன் கோபால் பாக்காத மிரட்டலா நிர்பந்தமா.. பின்புலம் இல்லாத அவரே அப்டி தைரியமா இருக்கும்போது, அரசாங்கத்துக்கே கடன் கொடுக்ற நிலைல இருக்ற அம்பானி ஒரு கட்சியோட மிரட்டலுக்கு பணிஞ்சார்னு சொன்னா யாரும் நம்புவங்களா.. நாங்க சொன்னோம், நடந்திருச்சு பாத்தியா..னு சில பேர் சவுண்ட் விடலாம். அது எப்பவும் நடக்ற காமெடி.

ஒரு விசயம் சொல்லணும். வெளியேற்றப்பட்ட அல்லது நீக்கப்பட்ட ஊடகர்கள் பலரும் அதுக்கு அப்றம் அட்டகாசமா வளந்து பெரிய இடத்துக்கு போயிருக்காங்க. பழைய கம்பெனிக்கே திரும்பி போனவங்களும் உண்டு. அதை எல்லாம் ஒரு அனுபவமா, பாடமா எடுத்துக்கணும். இளம் வயசுலயே இந்த மாதிரி நடக்றது இன்னும் நல்லது. செல்போன ஆஃப் பண்ணிட்டு சுய சோதனை செய்யவும், பாதையை சரி செஞ்சுக்கவும் கிடைச்ச வாய்ப்பா பயன்படுத்திக்கணும். ஏன்னா இது முடிவு இல்ல. இன்னொரு ஆரம்பம்.

கதிர்