December 4, 2022

உலகைப் பிடித்தாட்டும் கொரோனா தடுப்பூசி அச்சம்!

கொரோனா தொற்று உலகின் பலவிதமான ‘நம்பிக்கைகளை’ கேள்விக்குட்படுத்தியுள்ளது. அதில் முக்கியமான ஒன்று மேலை நாட்டு மக்கள் குறிப்பாக வளர்ந்த நாடுகளின் மக்கள் மிகவும் அறிவாளிகள், திறமைசாலிகள் அத்துடன் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்கிறவர்கள் என்பது போன்ற நம்பிக்கைகளை உடைத்து விட்டது. பொதுமுடக்கம் அனைத்து நாட்டு பொருளாதாரத்தை முடக்கியிருந்த நிலையில் மேலை நாடுகளிலும் அதன் தாக்கம் இருக்கவே செய்கிறது. ஆயினும் இப்போது நிலைமை சீரடையும்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதனால் அந்தந்த அரசுகள் தடுப்பூசி பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளன. பல நாடுகளில் இதுவரை ஒருமுறை கூட தடுப்பூசி போடாதவர்களின் விழுக்காடு இரட்டை இலக்கத்தில் உள்ளது. ஜெர்மனி நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டோரின் விழுக்காடு 67.5 என்று காணப்படுகையில் மருத்துவப் பணியாளர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளதாம். ”இது உண்மையில் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதற்கானத் தருணம்” என்கிறார் பிரதமர் ஏஞ்செலா மெர்கல்.

மற்றொரு ஐரோப்பிய நாடான ஸ்லோவேக்கியாவில் வெறும் 45.3% மட்டுமே இருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அந்நாட்டின் மொத்த மக்கள்தொகை 50,00,000 ஐ விட சற்று கூடுதல். அதாவது சென்னை மாநகர மக்கள்தொகையில் கிட்டத்தட்ட சரிபாதி. அந்நாட்டில் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த தடுப்பூசி போடாதவர்களைப் பொது இடங்களில் அனுமதிப்பதில்லை என்ற முடிவு விரைவில் நடைமுறைக்கு வருகிறதாம். பிரதமர் எட்வர்ட் ஹேகர் கூறும்போது, “ வருகின்ற கிற்ஸ்துமஸ் கோவிட்-19 இல்லாத கிறிஸ்துமஸ் அல்ல; அப்படி கோவி-19 இல்லாத கிறிஸ்துமஸ் வேண்டுமென்றால் நாம் மாறுபட்ட தடுப்பூசி விழுக்காட்டைக் கொண்டிருக்க வேண்டும்” என்றார். அத்துடன் தடுப்பூசி போடாதவர்கள் வாரம் இருமுறை கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமாம்.

மற்றொரு சிறிய நாடான ஆஸ்திரியா வரும் பிப்ரவரி 1 ஆம் தேதியிலிருந்து தடுப்பூசியைக் கட்டாயமாக்க முடிவெடுத்துள்ளது. அடிக்கடி பொது முடக்கத்தை அறிவிப்பது இடைஞ்சல் என அந்நாட்டின் அரசு கருதுகிறது. பல நாடுகளில் குறிப்பாக வளர்ச்சியடையும், அதே சமயம் உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகைக் கொண்ட இந்தியா தனது மக்கள்தொகையில் சுமார் 50% பேருக்கு இருமுறை தடுப்பூசியை இலவசமாக (பெரும்பாலும்) அளித்துள்ள நிலையில் சுமார் 50,00,000 மக்கள் தொகைக்கொண்ட ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசியை மக்களிடையே கொண்டுச் செல்ல அதிக அவகாசம் எடுத்துக் கொள்வது மிகவும் நகைமுரணானது. அறிவியல்-தொழில்நுட்பத்திலும், கல்வியிலும் முன்னேறிவிட்டதாக கூறிக்கொள்ளும் நாடுகளில் இவ்வளவு அலட்சியமாகவும், பொறுப்பின்றியும் மக்கள் இருப்பது அதிர்ச்சிதரக்கூடியது. இதற்கான காரணம் என்னவென்பது உளவியல் ரீதியிலும், அதிகமாக அறிவியல் அறிவு ஏற்பட்டதும் கூட காரணமாகலாம். ஸ்லோவியாவில் 8,000 ற்கும் கூடுதலான தினசரி கொரோனா தொற்று இருக்கும் போது மக்களிடையே இருமுறை தடுப்பூசியை அரசு கட்டாயமாக்க வேண்டிய நிலையை எப்படி புரிந்துக்கொள்வது. அரச எதிர்ப்பு என்றா? உண்மையில் கட்டாயத் தடுப்பூசி என்பதைப் பல மேலை நாட்டு மனித உரிமையாளர்கள் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்கின்றனர். கார்லே டாலி எனும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்(அயர்லாந்து நாட்டவர்) அரசுகள் மக்களின் தனிநபர் சுதந்திரத்தின் மீது ஏறி மிதிக்கின்றனர் என்கிறார்.

இதை தமிழகத்தில் ஹீலர் பாஸ்கர் போன்றோர் சொன்னால் கூட புரிந்துக்கொள்ளலாம். மேலை நாடுகளில் அம்மை, போலியோ போன்ற நோய்களுக்கு தடுப்பூசி கட்டாயம். அதை சிறுவயதிலேயே செலுத்தி விடுகிறார்கள். ஆனால் கொரோனா திடீர் என ஏற்பட்டத் தொற்று. இளைஞர்களுக்கு இது குறித்தான ஏளனம் இருக்கலாம். வெறும் காய்ச்சல்தானே? இதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்? டெங்கு, எய்ட்ஸ், புற்று நோய் போன்றவற்றால் இறப்பவர்கள் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கைச் சிறியதே. இதனால் குளிர் மிகுந்த, கொரோனா எளிதல் பரவக்கூடிய ஐரோப்பிய கண்டத்து மக்கள் இது குறித்து அச்சம் ஏதுமின்றி இருக்கின்றனர். தொற்று வராமல் தடுத்துக்கொண்டால் போதும்; அப்படியே வந்தாலும் தங்களின் மேம்பட்ட மருத்துவ வசதிகளால் பிழைத்துக்கொள்ளலாம் என்பது அவர்களது திண்ணம். ஆனால் அரசுகளின் நிலைப்பாடு வேறு. அவர்கள் கொரோனா பரவலைத் தடுப்பதோடு, அதிக இறப்பையும் தடுத்தாக வேண்டும். இல்லையென்றால் உலகளவில் அவப்பெயர் ஏற்படும். மக்களுக்கு அரசின் தர்மசங்கடம் புரியவில்லை அல்லது அதை அவர்கள் ஏற்கவில்லை.

சமூக அளவிலும் தடுப்பூசி போட்டவர்கள், போடாதவர்கள் எனும் பாகுபாடு ஏற்பட்டுள்ளது. ஒரு சாராரின் பிடிவாதத்தால் குடும்பத்தில் கூட பிளவு வரலாம்! பொதுவாக கிறிஸ்துமஸ் என்பது ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்படும் பண்டிகையாகும். கடந்த இரண்டாண்டுகளாக கொண்டாட்டங்கள் இன்றி இருக்கும் சூழ்நிலையில் மக்களின் ஒத்துழைப்பு இன்மையும், அதிகரிக்கும் நோயுற்றவர் எண்ணிக்கையும் சோர்வைத்தான் கொடுக்கும். இதை உணர்ந்துதான் அரசுகள் விரைவில் தடுப்பூசியை முழுமையாக அளித்துக்கொள்ளும்படி மக்களை வேண்டுகின்றனர். இந்த நிலைப்பாடு இதுநாள் வரை மேலை நாடுகளின் மீது பிற நாட்டு மக்கள் கொண்டிருந்த ‘நம்பிக்கைகளை’ குறைத்துள்ளது. அது மட்டுமின்றி தடுப்பூசி குறித்து எதிர்மறையான எண்ணங்களையும் வளர்த்து விடுகிறது. இந்திய அரசு வீடு வீடாகச் சென்று தடுப்பூசி அளிக்க திட்டமிடும் நேரத்தில் இது போன்ற எதிர்மறை எண்ணங்கள் நோய்த் தொற்றைத் தொடர்ந்து தக்க வைக்கவே உதவும், மேலும் டெல்டா வகை தொற்றுக்களையும் கூட பரவ விட வாய்ப்புண்டு. இந்த வகையான நோய்க்கிருமிகள் இருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் கூடத் தாக்கி இறப்பை ஏற்படுத்தலாம். எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதே சரியான செயல்பாடு.

இந்தியா உலக சுகாதார அமைப்பிடம் போராடி கோவேக்சின் தடுப்பூசிக்கு நெருக்கடிக்கால பயன்பாட்டிற்கு அனுமதி வாங்கியுள்ளது. பல ஏழை நாடுகளில் கொரோனா பரவாமல் தடுக்க தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யவுள்ளது. நமது அரசு இப்படி செய்யும் போது மக்கள் ஒத்துழைக்காமல் இருப்பது நல்வாய்ப்புக்கேடானது என்றால் மிகையில்லை. உலகளவில் கோரோனா தடுப்பூசிகளை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கும் நிலையிலுள்ள பணக்கார மேலை நாட்டு அரசுகள் தங்கள் மக்களிடையே ஒத்துழைப்பு இல்லாததைக் கண்டு வெதும்பிப் போயுள்ளனர். இதனால் இழப்பு உலக ஏழை மக்களுக்கே உரித்தாகும். உலக வங்கி போன்ற பன்னாட்டு அமைப்புகளும், ஒரு சில தனியார் அறக்கொடை நாடுகளும் சுமார் $ 20 பில்லியன்களை ஏழை நாடுகளுக்கு கொடுத்து தடுப்பூசியை முழுமையாக மக்களுக்கு வழங்க உதவுகின்றன. ஏழை நாட்டு மக்களுக்கு தடுப்பூசிகள் வரும் 2024 ஆம் ஆண்டில்தான் முழுமையாகக் கிடைக்கும் என்று பணக்கார நாடுகளின் அமைப்பான ஓ இ சி டி கணித்துள்ளது. இதற்காக $ 1 டிரில்லியன் வரை செலவாகலாம் என்றும் அந்த அமைப்பு கணித்துள்ளது.

மேலும் இலவச தடுப்பூசியை ஏழை நாடுகளுக்கு யார் வழங்குவது என்பதிலும் கூட போட்டி இருக்கலாம் என்கின்றனர். இந்தியா தனது 130 + மக்களுக்கு இரண்டு ஊசிகளை இலவசமாக வழங்க முடியும் என்றால் இதே அளவிற்கு குறிப்பிட்ட அல்லது தங்களின் செல்வாக்கிற்கு உட்பட்ட ஏழை நாடுகளுக்கு இலவசமாக வழங்கலாம். ஏனெனில் தடுப்பூசியின் விலையை பேரளவு உற்பத்தி மூலம் இந்தியா குறைக்க முடியும். மேலை நாட்டு தடுப்பூசிகளை விட இந்திய தடுப்பூசி விலைக் குறைவாகவே இருக்க வாய்ப்பு அதிகம். ஆனால் பணக்கார நாடுகளில் மக்கள் முழுமையாக தடுப்பூசியை போட்டுக்கொள்ளாதவரை எல்லாமே மந்தமாகவே இருக்கும். அதற்குள் சிதைவு நோய்க்கிருமிகள் அதிகரிக்காமல் இருக்க வேண்டும்!

ரமேஷ் கிருஷ்ணன் பாபு